வாரிசு நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு…!

shivani

தெலுங்கு நடிகரான டாக்டர் ராஜசேகர் – நடிகை ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி ‘கும்கி 2’ படத்தின் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் புதுமைப்பெண் உட்பட சில தமிழ்ப்படங்களில் நடித்தார். இங்கே க்ளிக் ஆக முடியாமல் தெலுங்குக்குப்போனவர் அங்கே முன்னணி ஹீரோவாக உயர்ந்தார்.

அவர் நடித்த தெலுங்குப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றியடைந்தன. அவற்றில் இதுதான்டா போலீஸ் வசூலில் சாதன படைத்தது. ஆனாலும் அவரால் தமிழில் கதாநாயகனாக காலூன்ற முடியவில்லை.

தன்னால் முடியாததை தன்னுடைய மகள் ஷிவானி மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைத்தோ என்னவோ தமிழ்ப்படத்தில் மகளை கதாநாயகியாக களமிறக்குகிறார் டாக்டர் ராஜசேகர்.

ஷிவானியை தமிழ்த்திரையுலகில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் முன்னணி பி.ஆர்.ஓ.க்களிடம் மகளின் போட்டோக்களைக் கொடுத்திருந்தனர். ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் மேலாக பல படக்கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியது ஷிவானியின் போட்டோ ஆல்பம். பல படங்களில் ஷிவானி நிராகரிக்கப்பட்டநிலையல் தற்போது அவருக்கு கும்கி-2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2012-ம் ஆண்டு வெளியான ‘கும்கி’ படத்தைத் தொடர்ந்து, அதன் 2-ம் பாகத்தையும் இயக்கவுள்ளார் பிரபுசாலமன். முதல் பாகத்தில் நடித்த விக்ரம் பிரபு, இதிலும் நாயகனாக நடிப்பாரா அல்லது கயல் சந்திரன் கதாநாயகனாக நடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

கும்கி – 2 படத்தில் நடிக்கவிருப்பது குறித்து ஷிவானி என்ன சொல்கிறார்?

“அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் உள்ளது. சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம், குச்சுப்புடி போன்ற நடன பயிற்சிகளை பயின்றுள்ளேன்” என்கிறார்.