ரஜினி குரல் கொடுக்க வேண்டும்…! – தயாரிப்பாளர் குரல் கொடுத்தும் ரஜினி அமைதி…

ivan-thanthiran

கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி நடிக்க, கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் – ‘இவன் தந்திரன்’.

இயக்குநர் கண்ணன், ராம்பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

இவன் தந்திரன் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் பொறுப்பை தனஞ்ஜெயன் ஏற்றிருக்கிறார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் முன்னிலையில் தயாரிப்பாளர் தாணு இசையை வெளியிட ஆர்யா பெற்றுக்கொள்ள, இவன் தந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் டி. சிவா பேசும்போது, படத்தின் கதாநாயகனான கெளதம் கார்த்திக்கை நன்றாக வரவேண்டும் என்று வாழ்த்திவிட்டு முக்கியமான திரையுலகப் பிரச்சனை பற்றி பேசினார்…

“தமிழ் சினிமாவின் ஜி.எஸ்.டி வரிக்காக கமல்ஹாசன் உட்பட பலரும் களத்தில் இறங்கி குரல் கொடுத்தார்கள்.

ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் என்று தற்போது அறிவித்துள்ளார்கள். கேட்டதற்கு இதாவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

இன்னும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு சினிமா சென்று கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன.

தணிக்கையில் தற்போது ஏகப்பட்ட கெடுபிடிகள் ஏற்பட்டிருக்கின்றன. திடீரென்று, எதற்காக இவ்வளவு கெடுபிடிகள் என்று தெரியவில்லை.

ஒரு படம் தணிக்கைக்கு விண்ணப்பித்து, தணிக்கையாகி வெளியே வருவது, படம் எடுப்பதைவிட அதிக வலியைக் கொடுக்கிறது. ”

என்ற டி.சிவா, “ இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் அனைவருமே அனாதையான மனநிலையில் இருப்பது போன்று உணர்கிறோம். ” என்று போகிற போக்கில் விஷால் அண்ட் கோவின் தலையில் குட்டிவிட்டு, தான் சொல்ல வந்த கருத்தைப் பற் தொடர்ந்து பேசினார்…

“ஜி.எஸ்.டி பிரச்சினைக்காக சென்றால், மத்திய அரசு நம்மை கண்டு கொள்வதில்லை. கடுமையான போராட்டத்துக்கு இடையேதான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் தருணத்தில் உங்கள் அனைவரது சார்பிலும் ஒரு வேண்டுகோள்.

தமிழ்நாட்டை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்தபோது, நான் இருக்கேன் என்று வந்து ஒட்டுமொத்தமாக சரி செய்து கொடுத்தீர்கள்.

தற்போது தமிழ் சினிமா அனாதை போல் செத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினி சார்.. ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு சினிமா சென்று கொண்டிருக்கிறது.
நீங்கள் வந்து குரல் கொடுக்க வேண்டும்.

இப்போது கூட நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் சினிமாவை வாழ வைக்க முடியாது. நீங்கள் சொன்னால் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். மத்திய அரசு திரும்பிப் பார்க்கும்.

உங்களுடைய வார்த்தைக்கு கட்டுப்படும்”

என்று பரபரப்பை பத்த வைத்தார் தயாரிப்பாளர் சிவா.

ரஜினி தரப்பிலிருந்து இதுவரை நோ ரியாக்ஷன்.