இரண்டாவது இன்னிங்ஸுக்காக காத்திருக்கும் ஹீரோ…

actor-shaam

கமல், விக்ரமுக்குப் பிறகு தான் ஏற்ற கதாபாத்திரத்துக்காக தன்னையே உருக்கிக் கொண்டவர் நடிகர் ஷாம்தான்.

‘6 மெழுகுவர்த்திகள்’ என்ற படத்துக்காக அநியாயத்துக்காக மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். அற்புதமான நடிப்பால் 6 மெழுகுவர்த்திகள் படத்தையும் தான் ஏற்ற கதாபாத்திரத்தையும் மெருகேற்றிய ஷாம், எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு’ படத்தில் காவல்துறை அதிகாரி மெக்காலேவாக அசத்தினார்.

நடிப்புக்காக இத்தனை உழைத்தும், தன்னை உருக்கியும் எந்த விருதுகளும் ஷாமைத் தேடிவரவில்லை.

இந்த வருத்தைத்தைவிட ஷாமை வாட்டி வதைத்தது இன்னொரு வருத்தம்தான்.

என்ன அது?

“விருதுகள் கிடைக்காததில் வருத்தம் இல்லை. ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன் நல்ல படம் கொடுக்க முடியாது என்று ரசிகர்கள் நினைப்பதுதான் வருத்தமளித்தது. 6 மெழுகுவர்த்திகள் படத்தில் அதிக உழைப்பைப் போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்கொண்டேன். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்? என்பதை சொன்னோம். அந்த கருத்தும், பயமும் அவர்களைச் சென்றடைந்திருக்கவேண்டும். அது தியேட்டர்கள் மூலமாக நடக்கவில்லை. ஆனால் ஜீ தமிழ் சேனல் மூலம் மிக தாமதமாக சென்றடைந்தது. வெற்றி பெற்றவர்களின் படம், தோல்வியடைந்தவர்களின் படம் என்று படம் பார்க்காமல் நல்ல படம் பார்ப்போம் என்ற மன நிலை இருந்திருந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றிருக்கும். இப்போது அந்த மனநிலை மக்கள் மத்தியில் வந்திருக்கிறதுன்னுதான் நினைக்கிறேன். படம் வெற்றிபெறுவதும், அடுத்து நல்ல கதையில் நடிப்பதும்தான் உண்மையான விருது என்பது என் நம்பிக்கை. அப்படி பார்த்தால் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே நான் விருதுகளால் மகிழ்விக்கப்பட்டவன்தான். இன்னும் நிறைய படங்கள் நடிக்கப்போகிறோம். காலங்கள் இருக்கு. கிடைக்காமலா போகும்?”

சத்யராஜ், அரவிந்த சாமி, மாதவனுக்கு செகன்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைந்ததுபோல், ‘பார்ட்டி’ படத்தின் மூலம் உங்களுக்கும் அமைய வாய்ப்பு இருக்கா?

“நல்ல இயக்குநர்களால் மட்டுமே அது முடிவு செய்யப்படுகிறது. நாம் நடிக்கும் படம் மக்களை பார்க்க வைக்கக் கூடிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியே வரவேண்டும். இப்போது ஃபிஜியில் ‘பார்ட்டி’ பண்ணிக்கொண்டிருக்கிறேன். வெங்கட் பிரபு இயக்கும் படம். அம்மா கிரியேசன்ஸ் சிவா தயாரிப்பு. இதில் ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர். நீங்கள் எதிர்பார்ப்பது இந்த பார்ட்டி படத்தின் மூலம் நடக்கலாம். வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் எதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. தயாரிப்பாளர் சிவா ஒரு நாள் போனில் கூப்பிட்டு கிளம்புங்க ஃபிஜிக்குன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு ஒரு சொந்த சகோதரன் போல அன்பு உண்டு. அதனால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன். பார்ட்டி படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன். அவ்வளவு இளமையான, ஜாலியான டீம் இது. ஸோ, இந்தப் படத்திலேயே என்னுடைய இரண்டாவதுஇன்னிங்க்ஸ் ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது.”

தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடிப்பதுமில்லாமல், தமிழில் ஜெயம் ரவி, அர்ஜுன் நடித்த படங்களில் வில்லனாகவும் நடிக்கிறீர்களே?

“எங்கே வேணா யார்கூட வேணா நடிக்கலாம். என்னவா நடிக்கிறோம்கிறது முக்கியம். நண்பர் ஒருவர் சொன்னார் கடைசி வரைக்கும் நல்லவனா மட்டுமே நடிக்காமல், செம வில்லனாக ஒரு படம் நடிங்க. அது உங்களை மக்கள் மத்தியில் நெருக்கமாக்கும்னார். நானும் ஏகப்பட்ட கதை கேட்டேன். சரியா ஹெவியா இல்லை எதுவும். தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமிக்கு மாட்டினது. மனுஷன் பிரிச்சி மேய்ஞ்சிட்டார். ‘தில்லாலங்கடி’ தெலுங்கில் ’கிக்’ ஆக வந்து எனக்கு பெரிய பேர் வாங்கிக் கொடுத்த படம். தமிழில் எதிர்பார்த்த அளவில் அமையாதது வருத்தம்தான்.”

​உங்களுடைய அடுத்த படம் காவியன் பற்றி?

“படப்பிடிப்பு முடிந்துவிட்டது. யு எஸ்ஸில் ஷூட் பண்ணிய கார் ரேஸ் பற்றிய படம். வழக்கம் போல கடின உழைப்பை போட்டிருக்கிறோம். விரைவில் வெளியாக இருக்கிறது”