கதாநாயகி விஷயத்தில் மிஷ்கினுக்கு ஏற்பட்ட பக்குவம்

savarakathi_poorna-myskin

இயக்குநர் மிஷ்கினின் தயாரிப்பில் அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் – சவரக்கத்தி.

இயக்குநர்கள் ராம் – மிஷ்கின் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சவரக்கத்தி பலதரப்பட்ட பார்வையாளர்களை வசியம் செய்தது மட்டுமல்ல, வசூலிலும் தயாரிப்பாளருக்கு திருப்தியைக் கொடுத்திருக்கிறது.

வெற்றிப்பெருமிதத்தோடு, பத்திரிகையாளர்களை சந்தித்தனர் சவரக்கத்தி படக்குழுவினர்.

படத்தின் கதைநாயகியான பூர்ணாவின் பேச்சு ஆத்மார்த்தமாக இருந்தது….

”எனது திரையுலகப் பயணத்திலேயே ‘சவரக்கத்தி’ படம் மட்டும் தான் மிகச்சிறந்த படம். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சில நாட்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தேன்.

அதில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. அந்தளவுக்கு அந்தக்கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. சொல்லப்போனால் அப்படிப்பட்ட ஒரு பெண்ணாகத்தான் நான் வாழ விரும்புகிறேன். சவரக்கத்தி படம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத படமாகி விட்டது” என்றார்.

இயக்குநர் மிஷ்கினின் பேச்சும் நேர்மையாக இருந்தது.

”இந்தப் படத்தில் நான் எந்த லாபமும் சம்பாதிக்கவில்லை. ஆனால் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என் தம்பி ஆதித்யா ஒரு மலை அருவி. இந்த படத்தை சிறப்பாகவே இயக்கி விட்டார். இனிமேல் அவரைப் பற்றி எனக்கு கவலையில்லை. இனி நான் அவருக்கு எந்த உதவியும் செய்யப்போவதுமில்லை. வெளிப்படங்களை அடுத்தடுத்து இயக்கி ஒரு நல்ல நிலைக்கு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது.

இந்த படத்தில் முழு உழைப்பையும் கொடுத்து நடித்தார் இயக்குநர் ராம். ஒரு உண்மையைச் சொல்கிறேன். இப்போதும் கூட நான் அவருக்கு சம்பளப் பாக்கி வைத்திருக்கிறேன். அதை பெரிதுபடுத்தாமல் நீங்க நல்லா சம்பாதிக்கும்போது கேட்கிறேன். அப்போது கொடுத்தால் போதும் என்று பெருந்தன்மையாக சொல்லி படத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்துக்கு பெரிய பலம்.

என்னுடைய படங்களில் வன்மம் அதிகம் இருக்கிறது என்கிறார்கள். உண்மைதான். இங்கே ஒரு முழுமையாக அன்பைக் காட்ட வன்மம் தேவைப்படுகிறது. எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அதை நான் மிகவும் நேசிக்கிறேன். வருடத்துக்கு ஒரு படம் இயக்குகிறேன் என்றாலும் அதை நல்ல படமாகத் தர வேண்டும் என்று ஒவ்வொரு படத்தையும் ஒரு தாய் ஒரு குழந்தையை பிரசவிக்கும்போது எவ்வளவு வலிகளோடு பிரசவிக்கிறாளோ அப்படிப்பட்ட வலிகளோடுதான் நான் படங்களை இயக்குகிறேன்.

பூர்ணா நல்ல திறமையான நடிகை. அவருக்காக நான் நிறைய கதைகளை எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல நண்பனாக, ஒரு சகோதரனாக, ஒரு சிறிய தந்தையாக அவருடன் இருப்பேன், அவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன், அவரை சினிமாவில் வழி நடத்துவேன்” என்றார்.

மிஷ்கினின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கையெடுத்து நன்றி தெரிவித்த பூர்ணா லேசாக கண் கலங்கினார்.

சக நடிகையை, தோழியாக, சகோதரியாக, மகளாகப் பார்க்கும் மிஷ்கினின் பக்குவம் பாராட்டுக்குரியது.

மிஷ்கினின்  இந்த பக்குவம்  சித்திரம் பேசுதடி படத்தை இயக்கும்போதும் இருந்திருந்தால்…. பாவனாவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்.

-ஜெ.பிஸ்மி