சங்கு சக்கரம் – விமர்சனம்

sanguchakkaram2

தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் வருவதில்லையே என்ற குறையைப்போக்க வந்திருக்கும் படம் – சங்கு சக்கரம்.

பெரியவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய பேய், பிசாசு எல்லாம் குழந்தைகளைப் பொறுத்தவரை காமெடி பீஸ்.

இந்த சைகாலஜியில்தான் சங்குசக்கரம் படத்தையே எடுத்திருக்கிறார் இயக்குநர் மாரிசன்.

நான்கு வெவ்வேறு நோக்கங்களுக்காக ஒரு பேய் பங்களாவுக்குள் வருபவர்களுக்கும் அங்கே இருக்கும் பேய்களுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் சங்கு சக்கரம் படத்தின் கதை.

படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒரு பங்களாவுக்குள் அத்தனை கதாபாத்திரங்களையும் சங்கு சக்கரம்போல் சுற்ற விட்டிருக்கிறார் இயக்குநர்.

குழந்தைகளைக் கடத்தி அவர்களது பெற்றோரை மிரட்டி பணம் பிடுங்கத் திட்டமிடும் ரௌடி திலீப் சுப்பராயன், தெருவில் விளையாட இடமில்லாமல் தவிக்கும் குழந்தைகளிடம், ஒருவரை அனுப்பி, ‘பக்கத்தில் ஒரு பங்களா இருக்கிறது. அங்கு போய் விளையாடுங்கள், என்று, பேய் பங்களாவுக்கு வரவழைக்கிறார்.
இன்னொரு புறம் சிறுவன் நிஷேஷை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு அவனது கார்டியன்களே அந்த பங்களாவுக்கு அவனை அழைத்து வருகிறார்கள்.

அங்கிருக்கும் பேய்களை விரட்டிவிட்டு அந்த இடத்தில் பிளாட் போட்டு விற்க திட்டமிடும் ரியல் எஸ்டேட்காரர் மந்திரவாதிகளை அழைத்து வருகிறார்.

இதற்கிடையில், தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள காதலியை அழைத்து வருகிறார் ஒரு காதலன்!

அந்த பேய் பங்களாவுக்கு வந்தவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா? இல்லையா என்பதே ‘சங்குசக்கரம்’ படத்தின் மீதிக்கதை

பேய் பட சீசன் ஏறக்குறைய ஓய்ந்துவிட்ட நேரத்தில் வெளியாகி இருந்தாலும், ஏனைய பேய்ப்படங்களிலிருந்து வித்தியாசப்பட்டதாக இருக்கிறது.

பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காமெல் குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டிருப்பதால் எரிச்சல்படாமல் ரசிக்க முடிகிறது. தவிர படத்தில் நிறைய சுவாரஸ்யங்கள்.

‘ரஜினி அங்கிள் எப்போ அரசியலுக்கு வருவார்?’ என்று நிஷேஷ் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பேய்கள் தெறித்து ஓடுவதுபோல் படத்தின் முடிவில் ஒருகாட்சி. செம டைமிங்!

பேய்களாக நடித்துள்ள ‘புன்னகைப் பூ’ கீதா, பேபி மோனிகாவின் நடிப்பு மட்டுமல்ல, தீபா, ஜெனீபர், நிஷேஷ், பாலா, தேஜோ, க்ருத்திக், ஆதித்யா ஆகிய சுட்டீஸ்களின் நடிப்பும் ரசிக்க வைக்கின்றன.

ரவி கண்ணனின் ஒளிப்பதிவு, ஷபீரின் பின்னனி இசை, விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு, கிராஃபிக்ஸ் காட்சிகள் சங்கு சக்கரத்தை நேர்த்தியாய் சுற்ற வைத்துள்ளன.

யதார்த்தம் என்ற பெயரில் முதல்பாதியில் பெரும்பாலான காட்சிகளை இருட்டிலேயே படமாக்கியதை தவிர்த்திருக்கலாம்.

மூடநம்பிக்கையை முன்னிறுத்தும் பேய்ப்படமாக இருந்தாலும், பல காட்சிகளில் வசனங்கள் மூலம் குழந்தைகளை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்.