சமுத்திரக்கனி என்றால் அட்வைஸ்தானா? – Exclusive Interview Comments Off on சமுத்திரக்கனி என்றால் அட்வைஸ்தானா? – Exclusive Interview

சார்… ப்ரோ… பாஸ்….ஜி…

இதெல்லாம் சமுத்திரக்கனியின் அகராதியிலேயே இல்லாத வார்த்தைகள்.

அறிமுகமான அடுத்த கணமே ‘சகோதரா’ என்று அன்பில் கரைகிற அற்புதமான மனுஷன்.

கோடம்பாக்கத்தின் அழகுப்பெண்கள் கூட இவருக்கு தங்கச்சிதான். சக நடிகைகள் இவரை அண்ணன் என்று அழைப்பது சர்வசாதாரணக் காட்சி.

தன்னைத்தாண்டி முன்னேறிச்சென்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவது…

தனக்கு பின்னால் இருப்பவர்களை இளக்காரமாகப் பார்ப்பது…

சினிமாக்காரர்களின் தேசிய குணம். சமுத்திரக்கனி சத்தியமாய் விதிவிலக்கு.

aandevathai-stills-003

எப்படி சகோதரா?

“என் தகப்பனார்கிட்டேருந்து வந்தது. எனக்கு 15 வயசு இருக்குறப்ப என் தகப்பனார் இறந்தாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… என் கையைப் பிடிச்சுக் கூட்டிட்டு அவர் போறப்ப… அண்ணே நல்லா இருக்கீங்களா… வாங்க சாப்பிட்டுப் போங்கன்னு எல்லாருமே உறவுமுறைக்குள்ளே பழகுவாங்க. இத்தனைக்கும் மூணு தெரு, இரண்டு தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கும். ஆனாலும், சித்தப்பா, மாமா, மச்சான்னுதான் பேசிக்குவோம்.

இப்ப நான் ஊருக்கு போனாகூட அன்னைக்கு கூப்பிட்ட மாதிரியே என்னையும் வாங்க மாப்பிள்ளை… எப்படி இருக்கீங்கன்னுதான் பேசுவாங்க. அங்க நான் டைரக்டரும் இல்லை, நடிகனும் இல்லை… இப்படித்தான் எனக்கு நிறைய அண்ணன், தம்பிங்க… மாமன், மச்சானுங்க… அக்கா, தங்கச்சிங்க..

சினிமாவுல சக டைரக்டர்கள்கிட்ட பொறாமை இல்லாம சகோரதனாப் பழகுறது என்னோட குருநாதர் கே.பாலசந்தர் சார்கிட்டேருந்து கத்துக்கிட்டது. காதல் படம் பார்த்துட்டு, ‘நான் இப்பவே பாலாஜி சக்திவேலைப் பார்க்கணும்’னு சொன்னார். மத்தியானம் 1.30 மணிக்கு அவர் மாத்திரை சாப்பிட்டுட்டு லன்ச் சாப்பிடணும். படம் 1.20க்கு முடிஞ்சது. சாப்பிட்டுட்டு போய் பார்க்கலாம்னு சொன்னேன். இல்லை… இப்பவே பார்க்கணும்னு சொன்னார். டைரக்டர் ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்த பாலாஜி சக்திவேல் சாரைப் பார்க்க போனப்ப, ஷங்கர் சார் ஓடி வந்தார். ‘நான் உங்களைப் பார்க்கவரலை ஷங்கர்… பாலாஜியைப் பார்க்க வந்தேன்’னு சொல்லிட்டு பாலாஜி சக்திவேல்சாரைப் பார்த்து முதுகில் இரண்டு தட்டு தட்டிட்டு ‘ஓகே ஐ யாம் ஹாப்பி’ன்னு சொல்லிட்டு வந்து காருல ஏறினார்.

‘ஒரு விஷயத்தைப் பாராட்டணும்னா உடனே செஞ்சுடு. லேட் பண்ணா.. டையிலூட் ஆகிடும், அன்பு உண்மையா இருக்காது, நீ அங்க நடிக்கற மாதிரி ஆகிடும்’னு அப்ப அவர் சொன்னது இன்னும் என் மனசுல இருக்கு. அதனாலதான், எந்த டைரக்டரோட படம் என்னை பாதிச்சாலும் உடனே பாராட்டிடுவேன். மௌனகுரு படம் பார்த்துட்டு வெளியே வந்தப்ப ராத்திரி இரண்டு மணி. உடனே அந்த டைரக்டருக்கு போனைப்போட்டு பேசினேன். அதேமாதிரி, மஞ்சப்பை, பிச்சைக்காரன்னு எத்தனையோ படங்கள்… நம்ம சகோதரர்கள் இறங்கி விளையாடுறப்ப நம்ம வீட்டில இருக்கிற அண்ணன் தம்பிங்க பண்றமாதிரி ஒரு மகிழ்ச்சி.”

aandevathai-stills-005
ஒரு பக்கம் ஆண்தேவதை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சமுத்திரக்கனி… இன்னொரு பக்கம் வில்லன், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இமேஜ் பற்றிய கவலை இல்லையா கனி?

“எந்த வட்டத்துக்குள்ளேயும் சிக்காமல் இருக்கத்தான் இப்படி பண்றேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் போலீஸா நடிச்சால், போலீஸாவே ஆக்கிடுவாங்க. அண்ணனா நடிச்சால் அண்ணனாவே ஆக்கிடுவாங்க. இவங்க நினைக்கற மாதிரி எதுக்குள்ளேயும் இருக்கக்கூடாது. அதனாலதான் மாறி மாறி பண்ணிக்கிட்டிருக்கேன்.

அப்பா படத்துல நான் நடிச்ச கேரக்டர்ல யாரும் நடிக்க மாட்டாங்க. அப்பா-2 பண்ணினாலும் நான்தான் பண்ணணும். சாட்டை இயக்குநர் அன்பழகன் படத்துல காலேஜ் புரபஸரா பண்றேன். அதை வேற யாரும் பண்ணவே மாட்டாங்க. ஹீரோங்கிற வளையத்துக்குள்ள சிக்காம நல்ல நல்ல விஷயத்தை சொல்லணும்ங்கிறதுல உறுதியா இருக்கேன்.”

இயக்குநர் – நடிகர் உங்க மனசுக்கு நெருக்கமான வேலைன்னா… எது…?

“சத்தியமா டைரக்ஷன்தான். 100 சதவீதம் எஃபோர்ட்டை போடுறதுதான் எனக்குப் பிடிக்கும். நடிப்பும் அப்படித்தான். ஆனாலும் டைரக்டரா பரபரன்னு இயங்குறதே தனி சுகம். நான் நடிக்கிற படத்தோட ஷூட்டிங்குல இப்ப உங்களுக்கு ஷாட் இல்லைன்னு சொல்லி, என்னை மூணு மணி நேரம் கேரவான்லேயே இருக்கச் சொன்னாங்க. எழுதுறேன், படிக்கிறேன், பாட்டுக் கேட்குறேன்…என்னால முடியல. நமக்கு ஷாட் இல்லைன்னா என்ன? அஸிஸ்டென்ட் டைரக்டர் வேலை பார்ப்போம். கூட்டத்தை கிளியர் பண்ணிட்டு, கூட இருக்கறவங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கலாம்னு வெளியே ஓடி வந்துட்டேன். நூறுபேரோட இறங்கி வொர்க் பண்ணிகிட்டே இருக்கணும் எனக்கு.“

டிவி சீரியல், சினிமா இயக்குநராக இருந்த சமுத்திரக்கனி, நடிகரானது பற்றி பேசும்போதெல்லாம், “இறைவன் கொடுத்தது. இறைவன் ரூபத்தில் என் தம்பி சசி கொடுத்தது.” என்று சொல்வார்.

aandevathai-stills-002
சமுத்திரகனிக்குள் இருந்த நடிகரை உருவாக்கிய பெருமையை யாரைச் சேரும்?

“தொட்டு ஆரம்பிச்சு வெச்சது கே.பி. சார்தான். நீ நடிக்கத்தானே வந்தே? அதை நானே ஸ்டார்ட் பண்ணிவிடுறேன்னு சொல்லி ‘பார்த்தாலே பரவசம்‘ படத்துல ஒரே ஒரு சீன்ல நடிக்க வெச்சாங்க. அதை புடம்போட்டு பெருசா கொண்டு வந்தது சசிகுமார். நீ நடிக்கத்தானே வந்தே? ஏன் சீரியல் பண்ணிக்கிட்டிருக்கே… சீரியலை விட்டுட்டு வா…ன்னு சசியும் சொன்னான். அப்ப, ஒரே நேரத்துல மூணு சீரியல் பண்ணிட்டிருந்தேன். எல்லாத்தையும் விட்டுட்டு அவன் பின்னாடி போனேன். ஏதோ ஒரு நம்பிக்கை… என் உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை… சசி மீதுள்ள நம்பிக்கை…

எல்லாம் நல்லாத்தானே போயிக்கிட்டிருக்கு… இப்ப எதுக்கு திடீர்னு இப்படி ஒரு முடிவுன்னு என் மனைவி கேட்டாங்க. ‘நல்லா போயிட்டிருந்தாலும்கூட முழுமை இல்லாம இருக்கு.’ சினிமாவுல நான் டைரக்டரா தோத்துருக்கேன். தோத்த இடத்திலேயே நடிகனா ஜெயிச்சு நின்னாத்தான் வாழ்க்கை முழுமை அடையும்’னு சொன்னேன். நம்பி அனுப்பினாங்க. சுப்பிரமணியபுரம் வெற்றியும் நாடோடிகள் வெற்றியும் நான் கேட்டு, கடவுள் கொடுத்தது. இப்ப கிடைச்சது எல்லாமே போனஸ்தான். அதனாலதான் நம்மளால முடிஞ்சவரை நாலு பேரை தூக்கிவிட்டுட்டு பயணப்படணும்னு ஆசைப்படுறேன்.”

நடிகர் சமுத்திரகனியின் வெற்றிக்கு கே.பாலசந்தர், சசிகுமார் இருவரும் முக்கிய காரணமாக இருந்தாலும், தன் உழைப்பும் காரணமாக இருப்பதை மறுக்கவில்லை அவர்.

“உண்மைதான். என்னோட பயணப்பட்ட டைரக்டர்கள் திரும்பவும் என்னை தேடணும்ங்கிறதுல உறுதியாக இருக்கேன். உயிர் இருக்கற வரைக்கும் யாராவது ஒரு டைரக்டர் என்னை நடிக்க வச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி சொந்தங்களைத்தான் நான் சேர்த்து வெச்சிருக்கேன்.”

நடிகர்களுக்கு தேசியவிருது என்பது பெருங்கனவு. சமுத்திரக்கனி அரிதாரம் பூசிய வெகுசீக்கிரமே தேசியவிருது தேடிவந்துவிட்டது.

aandevathai-stills-006இதற்கு மேல் நடிகராக உங்களுக்கு வேறென்ன இலக்கு?

“எதையும் இலக்கா நினைச்சு நான் ஓடுறதில்லை. வாழ்க்கையை ஒரு பயணமாத்தான் பார்க்கிறேன். வாழ்க்கை என்னை கூட்டிட்டு போகுது. அப்படி போறப்ப சந்திச்சவர்தான் வெற்றிமாறன். அவர் என்னை எடுத்துட்டு போய் ஒரு இடத்துல வெச்சிருக்காரு. இப்ப அவர்கூட வடசென்னையில் பயணம் தொடருது.

சுப்பிரமணியபுரத்துல என்னை பார்த்துட்டு பழைய வீரப்பா, நம்பியாரை திட்டற மாதிரி திட்டினாங்க. அது ஒரு நடிகனா எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய வெற்றி. நாடோடிகள் படம் சந்துபொந்தெல்லாம் டைரக்டரா என்னை கொண்டுபோச்சு. நான் ஆசைப்பட்டதை எல்லாம் கொடுத்துட்டே.. நன்றி இறைவனேன்னு சொல்லிக்கிட்டுத்தான் போயிட்டிருக்கேன்.”
ரசிகர்களின் பார்வையில் சமுத்திரக்கனி… எப்படிப்பட்டவரா இருக்கணும்னு ஆசைப்படுறீங்க?

“என்னை நடிகனா பார்க்கறதைவிட அவங்க வீட்ல ஒருத்தனாத்தான் பார்க்கறாங்க. நான் எங்கே போனாலும்… என்னை தள்ளி நின்னு பார்க்காம, நம்ம அண்ணன்ங்கிற மாதிரிதான் நடந்துக்கிறாங்க. கிராமப்புறங்களுக்கு போறப்ப உணர்வுபூர்வமா என்னை பக்கத்துல வெச்சிருக்காங்க. என்னை உருவாக்கின டைரக்டர்களோட, என்னை ரசிச்ச மக்களோட பாதங்களைத் தொட்டு வணங்கணும்.”

கே. பாலசந்தரின் சிஷ்யரா உங்களுக்கு மிச்சம் இருக்கிற கடமை என்ன…?

“ஒருவேளை நான் இல்லைன்னா நீ இதை எடுத்துடுன்னு சொல்லி ஒரு கதை சொன்னார். அப்ப நான் கோவிச்சுக்கிட்டேன். இல்லடா நான் உன்கிட்ட சொல்லணும்னு தோணுதுடான்னு சொன்னார். அவர் இறந்தப்புறம், அவரோட இளைய மகன் பிரசன்னா சார் வந்து, அப்பா உங்கக்கிட்ட ஒரு கதை கொடுத்ததா சொல்லியிருக்கார். அதை பெருசாப் பண்ணுங்க. அதுக்கு என்ன வேணாலும் நான் செய்யறேன்னு சொன்னார். அதே மாதிரி புஷ்பா அம்மாவும் அந்த பவுண்டட் ஸ்கிரிப்ட் என்கிட்ட இருக்கு எப்ப வேணா வந்து வாங்கிக்கோன்னாங்க. கடன் வாங்காம நானே சம்பாதிச்சு என் குருநாதரோட கதையை எடுக்கணும்னு இருக்கேன்.”

aandevathai-stills-001
வாரன் சாலையை கே.பாலசந்தர் சாலை என பெயர் மாற்ற, அவர் வாழ்ந்த பகுதியில் கே.பிக்கு சிலை வைக்க… முயற்சி செய்யலாமே? இப்ப நீங்க இருக்கிற பொஷிசனுக்கு கோரிக்கை வச்சால் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கே?

“கண்டிப்பா முயற்சி செய்யணும். ஆனா, முடிவெடுக்க வேண்டியவங்க எல்லாருமே குழப்பத்தில் இருக்காங்களே. சினிமா, டிவியுல உள்ள பல சங்கத்தில இருக்கேன். எல்லாரையும் கூட்டிட்டுப்போய் இந்த கோரிக்கையை வெக்கணும்… முடிவெடுக்கிறவங்க ஸ்ட்ராங்கா இருக்கிறப்ப கண்டிப்பாக போவோம்.”

சமுத்திரக்கனி என்றாலே அட்வைஸ்னு கிண்டல் பண்றாங்களே… ஜில் ஜங் ஜக் படத்தோட டீசர்ல கூட…

“தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. இது அட்வைஸ் இல்ல. ஆதங்கம், அக்கறை, நம்ம குழந்தை ஓடுறப்ப… விழுந்துடாதேன்னு சொல்வோமே… பக்கத்து வீட்டுக் குழந்தை ஓடுனாலும் அதையேதானே சொல்லுவோம்.? நம்ம குழந்தை விழக்கூடாது… அந்தக் குழந்தை விழட்டும்னு நினைப்போமா? இது அக்கறையும், ஆதங்கமும்தான்னு புரியாதவங்க கொஞ்ச நாள் கழிச்சுப் புரிஞ்சுக்குவாங்க.”

தாமிரா இயக்கும் ஆண்தேவதை படத்தில் மற்ற ஹீரோக்கள் நடிக்கத்தயங்கும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. ஹவுஸ் ஹஸ்பென்ட்.

aandevathai-stills-004
ஆண் தேவதை… படத்தில் என்ன ஸ்பெஷல்? உங்களை ஒத்துக்க வச்ச விஷயம் என்ன?

“கணவன், மனைவி, ரெண்டு குழந்தைங்க. காலைல எழுந்திருச்சு குழந்தைகளை ரெடி பண்ணி அரைகுறையா சாப்பாடு கொடுத்து கொண்டுபோய் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுட்டு மனைவியை கொண்டுபோய் பஸ் ஸ்டாண்டில விட்டுட்டு வேலைக்கு போற ஒரு கணவன். ஆபீஸுக்குப்போன உடனே உங்க குழந்தைக்கு மூச்சு முட்ற மாதிரி இருக்கு. உடனே வந்து பாருங்கன்னு ஒரு போன். இவன் வேலையை பார்க்காம குழந்தைகளை பார்க்க ஓடுற ஓட்டம்னு தாமிரா கதையை ஆரம்பிச்சபோதே எனக்குப் பிடிச்சது. காலைல எழுந்திருச்சு உப்புமா கிண்டி பொண்ணாட்டிக்கு குடுத்து நீ வேலைக்கு போன்னு அனுப்பிட்டு வீட்டிலே இருந்து குழந்தையை ஹீரோ பார்த்துக்கறான்… இங்கிருந்து டைட்டில் ஸ்டார்ட் ஆகுதுன்னு தாமிரா சொன்னதும் ‘நான் இந்தப் படத்துல நடிக்கறேன்னு சொன்னேன். அதுதான்…. ஆண்தேவதை. பெண்கள் மட்டுமில்லே ஆண்களும் இந்தப் படத்தைக் கொண்டாடுவாங்க. தமிழ்சினிமாவுல முக்கியமான படமா இருக்கும்.”

– ஜெ.பிஸ்மி

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம்

Close