சாலை – மைனஸ் 15 டிகிரியில் ஒரு திகில் கதை!

saalai-stills-017

முகிலன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக சார்லஸ், தங்கதுளசி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ரஞ்சித், கிரிஷ்   இணைந்து  தயாரிக்கும் படம் – சாலை.

நஞ்சுபுரம், அழகு குட்டிச் செல்லம் ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி சாலை  படத்தை இயக்கியுள்ளார்.

அது என்ன சாலை?

“இது ஒரு ரோட் மூவி. சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் கதை.” என்று டைட்டிலுக்கு விளக்கம் சொல்கிறார் இயக்குநர் சார்லஸ்.

‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தில் கதாநாயகனாக நடித்த விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார்.

கிரிஷா (KRISHA) என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மற்றும் ’ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்துள்ளனர்.

‘ஆடுகளம்’ நரேன் தவிர  பலரும் புதுமுகங்கள்.

முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் ‘சாலை’ படத்தின் சிறப்பம்சம்.

தற்போதைய அசாதாரணத் சூழலில்… அதுவும்  பனி கொட்டிக் கிடக்கும் பால் வண்ண நிலப்பகுதியில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறது  ‘சாலை’  படக் குழு.

காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய அனுபவத்தை இயக்குநர் சார்லஸ் சொல்வதைக் கேட்டால் குளிரெடுக்கிறது.

“காஷ்மீர் இந்த படத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த படம் காஷ்மீரில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி நிச்சயம் வரும். இந்தத் திகில் படத்துக்கு பனி படர்ந்த நிலப்பகுதி முக்கிய பின்னணியாக மட்டுமல்ல ஒரு பாத்திரம் போலவே அமையவேண்டும்.  அதற்காகவே நாங்கள் காஷ்மீர் போவது என்று முடிவு செய்தோம். ஆனால் அதற்குள்ள சிரமங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

‘சாலை’   படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இது ஒரு ரோடு மூவி. ஒரு பயணம் என்று இதைச் சொன்னாலும், படம் ஒரு தத்துவார்த்தமான முடிவைக் கொண்டது. எந்தவிதமான பயணத்தை ஒருவன் தன் வாழ்வில் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும்  படம் சொல்லும்.

காஷ்மீரில் நிலவும் அசாதாரணமான பதற்றமான சூழலில் அங்கு படப்பிடிப்பு நடத்தவே யாரும் நினைக்க மாட்டார்கள்.காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மிகவும் பதற்றமான பகுதி.

நாங்கள் அரசின் முறையான அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு  நடத்தினோம். அனுமதி கிடைத்து விட்டதே என்று ஊரில் போய் இறங்கினால் ஊர் முழுக்க ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் அதுவும் பத்தடிக்கு ஒருவர் சுற்றிலும் துப்பாக்கிகளுடன்  நிற்கிறார்கள். கத்தியின் மேல் நடப்பது போல் தான் ஒவ்வொரு நாளும் பயமாக பதற்றமாக இருந்தது.

நாங்கள் மக்கள் உதவியுடன் களத்தில் இறங்கினோம். அவர்கள் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தார்கள்.

நாங்கள் போனது பனியும் குளிரும் உச்சத்தில் இருக்கும் காலம். காஷ்மீரில் நிலப்பகுதியைப் பனி ஒரு போர்வை போல மூடி இருக்கும் காலம்.  அங்கே குளிர் மைனஸ் 15 டிகிரி 20 டிகிரி என்று இருக்கும்.  குளிர் பகலிலேயே எலும்பை ஊடுருவிப் பார்க்கும். இரவில் உயிரை உறைய வைக்கும்படி இருக்கும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குல்மார்க், சோனா மார்க், பெஹல்காம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. காஷ்மீரில் இதுவரை யாரும் பார்க்காத இடங்களில் எடுத்திருக்கிறோம். சாலை படமே ஒரு காட்சி அனுபவமாக இருக்கும்.