ரூபாய் – மத்திய அரசுக்கு எதிராக ‘சாட்டை’யைச் சுழற்றும் படமா?

rupaai_tamilscreen-stills-014

தமிழ்நாட்டில் கல்வித்துறையில் நிலவும் அவலத்தை செருப்பால் அடித்ததுபோல் சுட்டிக்காட்டிய படம் சாட்டை.

சமூகத்துக்கு மிக அவசியமான விஷயத்தைப் பற்றி பேசியதாலோ என்னவோ சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகனுக்கு அடுத்தப்பட வாய்ப்பு அத்தனை எளிதில் வாய்க்கவில்லை.

இந்நிலையில் அவரை இயக்குநராக அறிமுகப்படுத்திய இயக்குநர் பிரபுசாலமனே இரண்டாவது பட வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார்.

அன்பழகன் இயக்கும் இரண்டாவது படத்தின் பெயர் ரூபாய்.

ஒரே இரவில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடியின் மத்திய அரசு அறிவித்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

சேகர் ரெட்டி போன்ற பணக்காரர்கள் தன்னுடைய பழைய நோட்டுக்களை உட்கார்ந்த இடத்திலிருந்தே புதிய நோட்டாக மாற்றிக்கொண்டனர்.

ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் மாதக்கணக்கில் ஏடிஎம் வாசலிலும், வங்கிகளிலும் காத்துக்கிடந்தனர்.

அவ்வளவு எளிதாக மறக்க முடியாத இந்த அவலத்தைப் பற்றி ரூபாய் படத்தில் பேசியிருக்கிறார்கள் என்று தகவல்.

இயக்குநர் அன்பழகனிடம் கேட்டால்…

“ரூபாய்” திரைப்படம் பணம் பற்றியதுதான். ஆனால், நேரடியாக மத்திய அரசைத் தாக்கி எடுத்த படமல்ல. தவறான வழியில் வில்லன் சம்பாதித்த பணம், நடுத்தர, ஏழை மக்களிடம் அதாவது சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் மாதிரி ஆட்களிடம் சிக்கும்போது அவர்கள் படும்பாடு, இறுதியில் அந்தப் பணத்தை எப்படி ஒப்படைக்கிறார்கள், அந்தப் பணம் எப்படி அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறது என்பதை உச்சகட்ட சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறோம்.

சென்னை, தேனி வழியாக கேரளா என்று பயணப்படும் படம், காசு கொடுத்துத் தியேட்டரில் பார்ப்பவர்களூக்கும் பயன்படும்.“ என்கிறார்.