‘அவள் அப்படித்தான்’ படத்தின் இயக்குநர் ருத்ரையா காலமானார்…!

2538

தமிழ்த் திரையுலகம் மறந்தாலும், நல்ல சினிமாவை விரும்புகிறவர்களால் மறக்க முடியாத பெயர் – இயக்குநர் ருத்ரையா.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (18.11.2014) காலமானார். அவருக்கு வயது 67.

கமல், ரஜினி, ஸ்ரீப்ரியாவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம் – அவள் அப்படித்தான்.

திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, பாலச்சந்தரின் உதவியாளராகவும் இருந்த ருத்ரையா இயக்கிய முதல் படம் இது.

1978 ஆம் ஆண்டு தீபாவளி அன்று அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா ஆகிய படங்கள் வெளிவந்தன.

இந்த மூன்று படங்களுமே கமலஹாசன் நடித்த படங்கள். இவற்றில் சிவப்பு ரோஜாக்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

சிவப்பு ரோஜாக்கள் படத்தின் வெற்றியில் அவள் அப்படித்தான் என்ற படம் வெளிவந்த சுவடே இல்லாமல்போன நேரத்தில்தான், இந்தியத் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான மிருணாள் சென் சென்னைக்கு வருகை தந்திருந்தார். தற்செயலாக ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்த்தார் மிருணாள் சென்.

”ஒரு அருமையான திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே” என்ற வருத்தத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து அவள் அப்படித்தான் படத்தைப் பற்றிய தன்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகுதான் படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியது.

அவள் அப்படித்தான் படத்தை அடுத்து புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு “கிராமத்து அத்தியாயம்” என்ற படத்தை இயக்கினார் ருத்ரையா.

ஆத்து மேட்டுல என்ற பாடல் சூப்ர்ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. ஆனால் கிராமத்து அத்தியாயம் படம் தோல்வியடைந்தது.

அதன் பிறகு ருத்ரையா என்ற பெயரை திரையுலகம் மறந்துபோனது.

திரைப்படத்துறையைவிட்டு விலகிய ருத்ரையா தன் சொந்த ஊருக்கே சென்றுவிட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
இன்று உலகத்தைவிட்டே மறைந்துவிட்டார்.

ருத்ரையா மறந்தாலும் தமிழ்சினிமா உள்ளவரை அவரது பெயரும், அவள் அப்படித்தான் படமும் சினிமா நேசன்களின் நினைவில் வாழும்.