மொட்ட ராஜேந்திரனுக்கு ஹேர் ட்ரெஸ்ஸர்… தண்டம் அழும் தயாரிப்பாளர்கள்….

rj-balaji-speech-at-press-meet

தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதைத்தொடர்ந்து ஏற்கனவே தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த ‘வன மகன்’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன.

இந்த தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்களால் மட்டுமே முடியும் என்பதால் அவ்விருபடங்களில் பங்குபெற்ற கலைஞர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்…

வனமகன் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், இயக்குநர் விஜய், இவன் தந்திரன் படத்தை தயாரித்து இயக்கிய ஆர்.கண்ணன், நடிகர்கள் ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகரான ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பங்கேற்ற இந்த சந்திப்பில் ஆர்.ஜே. பாலாஜியின் பேச்சு அர்த்தத்துடனும், ஆழ்ந்து யோசிக்க வைப்பதாகவும் இருந்தது.

அடிப்படையில் அவர் ரேடியோ ஜாக்கி என்பதால் தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாகப்பேசினார்….

‘‘தியேட்டர் ஸ்ட்ரைக் பிரச்சனையால் படங்களை ரிலீஸ் செய்துவிட்டு தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நான் இப்போதுதான் சில படங்களில் நடித்துவருகிறேன்.

என் கண் முன்னாடியே நிறைய பிரச்சனைகள் நடைபெறுகின்றன.

இங்கு இருக்கும் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்களால் சரியாக செயல்பட முடியவில்லை.” என்று எடுத்த எடுப்பிலேயே வெளுத்துக்கட்டிய ஆர்.ஜே.பாலாஜி ஒரு சம்பவத்தையும் சொன்னார்…

“சில நாட்களுக்கு முன் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் ’மொட்ட ராஜேந்திரனை வைத்து படப்பிடிப்பு நடத்தினாலும் அந்த இடத்தில் ஒரு ஹேர் ட்ரெஸ்ஸர் இருக்கிறார் என்றார்.

நான் மொட்ட ராஜேந்திரனுக்கு எதுக்கு ஹேர் ட்ரெஸ்ஸர் என்று கேட்டால் சங்க விதிமுறைப்படி இருந்தாகவேண்டும் என்று சொன்னார்.

ஒரு முன்னணி ஹீரோயினை (நயன்தாராதானே?) வைத்து படப்பிடிப்பு நடத்தினால் அவருடன் சுமார் எட்டு பேர் வருகிறார்கள்.

அவர்களுக்கும் சேர்த்து அந்தத் தாயாரிப்பாளர் ஒரு நாளைக்கு சுமார் ஐம்பதாயிரம் வரை செலவு செய்தாக வேண்டியிருக்கிறது.

படப்பிடிப்பு நடந்தால் அந்த இடத்தில் கிட்டத்தட்ட நூறு பேராவது துணை நடிகர்கள் இருப்பார்கள்.

அவர்களுக்கு போகவேண்டிய சம்பளத்தில் பாதிதான் அவர்களிடம் போய்ச்சேரும்.

நடுவில் கமிஷன் என்ற பெயரில் அதை எடுத்துக்கொள்வார்கள்.

எந்த வேலையும் செய்வது சுலபமில்லை.

அதே போல் பணமும் மரத்தில் காய்ப்பதில்லை.

சில பிரச்சனைகளுக்கு நாங்களும் காரணம்தான்.

எல்லா படமுமே சூப்பர்ஹிட், எல்லா படத்திற்கும் சக்ஸஸ் பார்ட்டி, எல்லா படமுமே நான்கு நாட்களில் கோடி கோடியாக வசூல் என்று பொய்யாக அறிவிக்கிறோம்.

அதனால் சினிமாக்காரர்கள் மிக சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று மக்கள் நினைத்துவிடுகிறார்கள்.

உச்சத்தில் இருக்கும் சில நடிகர்களை தவிர மற்ற அனைவரும் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதை மனதில் வைத்து மக்கள் அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்கவேண்டும்’’

என்ற ஆர்.ஜே. பாலாஜியின் பேச்சு, சினிமாக்காரர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதற்கான சான்றாக இருந்தது.

-ஜெ.பிஸ்மி