இரும்புத்திரை படத்துக்கு ரெட்… விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு அதிரடி…

Irumbuthirai1a

தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக அண்மையில் விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தியேட்டர் அதிபர்கள். விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் உள்ளவர்கள் தியேட்டர்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதால், அவர்களுடைய கோபமும் விஷால் மீது திரும்பியது.

விஷாலுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று நரநரவென பல்லைக்கடித்துக்கொண்டு காத்திருந்தனர். அப்படியொரு சந்தர்ப்பம் இத்தனை சீக்கிரம் வந்ததுதான் துரதிஷ்டம்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் வெற்றிப்படம்போன்ற தோற்றம் இருந்தாலும், உண்மையில் அது தோல்விப்படம்தான். படத்தை வாங்கிய விநியோகஸ்தர், திரையிட்ட தியேட்டர் அதிபர்களுக்கு சுமார் 4 கோடிவரை நஷ்டம். அதோடு, பழைய பாக்கியாக சுமார் 10 கோடி வரை தர வேண்டும்.

இரும்புத்திரை படம் வெளியாகவிருக்கும்நிலையில் 15 கோடியை கொடுத்தால்தான் படம் ரிலீஸ் என்று செக் வைத்துவிட்டனர். அதாவது, திருச்சி, கோவை, மதுரை ஆகிய ஏரியாக்களில் இரும்புத்திரை படத்துக்கு ரெட் போடப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமைக்குள் 15 கோடியை கட்டினால்தான் இரும்புத்திரை படம் வெளியாகும், ஒருவேளை இந்தத்தொகையை விஷாலினால் கட்டமுடியாமல் போனால் படம் வெளியாகாது என்பதே தற்போதைய நிலவரம்.

இரும்புத்திரை படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை 10.5 கோடிக்கு ஸ்ரீதர் என்பவரிடம் விற்றுள்ளார் விஷால். அதற்கு முன்பணமாக 4.5 கோடியை ஏற்கனவே வாங்கிவிட்டார் விஷால். ஸ்ரீதரிடமிருந்து இன்னும் விஷாலுக்கு வர வேண்டிய பாக்கி 6 கோடி மட்டுமே. எஞ்சிய தொகையை அவர் புரட்டி புதன்கிழமைக்குள் கட்டினால்தான் வெள்ளிக்கிழமை அன்று வெண்திரைக்கு வரும்.

இந்த முயற்சியில் விஷால் வெற்றியடைந்துவிட்டால் திட்டமிட்டபடி படத்தை திரைக்குக் கொண்டு வந்துவிடுவார். அவரது முயற்சி கைகூடக்கூடாது என்பதற்காக அவரது எதிரிகள் ஒன்றிணைந்து தீவிரமாக வேலைபார்த்து வருகிறார்கள். விஷாலுக்கு பைனான்ஸ் கிடைக்கக் கூடிய வழிகளை எல்லாம் அடைத்து வருகின்றனர்.

இந்த தடைகளை உடைத்து விஷால் வெற்றி காண்கிறாரா பார்ப்போம்…

– ஜெ.பிஸ்மி