69 வயசு, 6 மாதம், 14 நாள்…! – ரஜினி அரசியலுக்கு வரும் நாள் இது..!

shelvee

ஜோதிடர்கள் மீண்டும் கடையை விரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லாம் ரஜினியின் பேச்சால் வந்த வினை.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது பற்றி அவருக்கே இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

அதனால் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்.

அவரைப்போல் ஜோதிடர்கள் ஒதுங்கி நின்றால் பிழைப்பு நடக்குமா?

அதனால் சோழியை உருட்டி ஆருடம் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

நாட்டில் எத்தனையோ ஜோதிடர்கள் இருந்தாலும், சில ஜோதிடர்களிடம்தான்  எல்லா கருமத்துக்கும் கருத்து கேட்டு அவர்களை நட்சத்திர ஜோதிடர்களாக்கி வருகின்றன ஊடகங்கள்.

அப்படி பிரபலமானவர்தான் ஷெல்வி என்ற ஜோதிடர்.

மளிகைக்கடை வைத்திருந்த இவர், ஜோதிடத்தில் செம சில்லறை என்பதால் ஜோதிடர் அவதாரம் எடுத்ததாக இவரைப்பற்றிச் சொல்வார்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டார என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளநிலையில் வழக்கம்போல் ஜோதிடரை தேடி ஓட ஆரம்பித்துவிட்டன.

அதன்படி ஷெல்வியிடமும் ஆருடம் கேட்டிருக்கிறார்கள்.

“69 வயசு 6 மாதம் 14 நாள் இதுக்குள்ள சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் ஆகும்…” என்று ஆருடம் சொன்ன ஜோதிடர் ஷெல்வியின் வாயை மேலும் கிளறியிருக்கிறார்கள்.

அதற்கு அவர் சொன்ன பதில்…

“ரஜினி தேசிய கட்சியில் இணைவார் என்பதை விட, தனிக்கட்சி துவங்கத்தான் நிறைய வாய்ப்புள்ளது.

2018 ல் இருந்து அவருக்கு சனி திசை முடிந்து புதன் திசை துவங்குகிறது.

இது மிக மிக விசேஷமான காலம். நிச்சயம் கட்சி ஆரம்பிப்பார். இந்த முறை நழுவிப் போக மாட்டார்”

– என்று அடித்துச் சொல்லி இருக்கிறார் ஷெல்வி.

இந்த ஷெல்வியைப் பற்றி சொல்ல மறந்துபோன விஷயங்களும் உண்டு..

ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அவர் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பணிகளைத் தொடர்வார் என்று ஜோதிடம் சொன்னதும் இதே ஷெல்விதான்.

அதுமட்டுமல்ல, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாவார்கள் என்று சொன்னதும் இவர்தான்.

கடந்தகாலங்களில், இவர் சொன்னது எதுவுமே நடந்ததில்லை. ரஜினி அரசியலுக்கு வருவார் என்பது மட்டும் நடந்துவிடுமா?

இதுபோன்ற டுபாக்கூர்களின் வாயை அடைப்பதற்காகவாவது ரஜினி தன்னுடைய முடிவை தெளிவா சொல்லணும்.