க்யூபுக்கு வேட்டு வைக்க விஷால் துடிப்பது ஏன்?

vishal_vilaiyattu-arambam-_thiruttu-vcd

தமிழ்சினிமா டிஜிட்டல்மயமான பிறகு, தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் எல்லாம் க்யூப், யுஎப்ஓ, பி.எக்ஸ்.டி. ஆகிய டிஜிட்டல் சினிமா சேவையை வழங்கி வரும்  நிறுனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

இந்த மூன்று நிறுவனங்களில் பெரும்பாலான தியேட்டர்களுக்கு சேவை வழங்கும் மார்க்கெட் லீடராக விளங்குவது க்யூப்.

திரையுலகில்  பல வருடங்களாக தொழில் செய்து வரும் ரியல் இமேஜ் நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் க்யூப்.

டிஜிட்டல் சினிமாவை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய க்யூப் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிரந்தர நாட்டாமைகளாக இருந்த சிலரது ஆதரவில் இதுவரை தங்குதடையில்லாமல் தொழில் செய்து வந்தது.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு க்யூபுக்கு தலைவலி ஆரம்பாகிவிட்டது.

ஒரு படத்தை வெளியிட ஒரு தியேட்டருக்கு இதுநாள்வரை 22500 ரூபாய் வசூலிக்கிறது க்யூப் நிறுவனம்.

இது அதிகம் என்றும், கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் ரியல் இமேஜ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தார் விஷால்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கட்டிங் தர முன் வந்த ரியல் இமேஜ் நிறுவனம் கட்டணத்தை குறைக்க முன் வரவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டத்தில் பேசிய விஷால்,

“க்யூப் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். புதிதாக வந்திருக்கும் ஒருவர் 22,500 ரூபாய்க்கு பதிலாக 5000 ரூபாய்க்கு தருகிறேன் என முன் வந்துள்ளார்” என்று பேசினார்.

இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கான வாட்ஸ்-அப் குரூப்பில் இப்பிரச்சினை  குறித்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான  ஞானவேல்ராஜா.

“க்யூப் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால், புதிதாக முதலீட்டாளர் ஒருவரைப் பிடித்துள்ளார்.

ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 22,500 வாங்கக்கூடிய இடத்தில் 5000 ரூபாயும், மற்றும் சிறுபடங்களுக்கு 22,500 ரூபாய்க்கு பதிலாக 2,500 ரூபாய்க்கும் அளிக்க ஒரு ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு நமக்கு தேவை. அவர்களுடைய ஆதரவின்றி இதனை செயல்படுத்த முடியாது. பெரிய படங்களின் தயாரிப்பாளரால் 22,500 ரூபாயை கட்டிவிட முடியும். இந்த முடிவால் சிறுமுதலீட்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பயனாக இருக்கும். அவர்களுடைய மொத்த பாரமும் கீழே இறக்கி வைத்துவிடக்கூடிய சூழல் ஏற்படும். அப்படியொரு சூழலை ஏற்படுத்துவதற்கு பெரிய படங்கள் மற்றும் சிறு படங்கள் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஒற்றுமையை முதலில் கடைபிடிக்க வேண்டும்.

குறிப்பிட்ட  ஒரு தேதியை முடிவு செய்துவிட்டு, இனிமேல் 22,500 ரூபாய் கட்ட மாட்டோம். 5000 ரூபாய் அல்லது 2500 ரூபாய் மட்டுமே கட்டுவோம் என்ற முடிவை எடுக்க வேண்டும்.

அதை மீறும் தயாரிப்பாளர்கள், ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கு செய்யும் துரோகமாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும்.

அப்படி யாராவது முறியடிக்க வேண்டும் என நினைத்தால், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என முடிவு எடுத்தோம் என்றால் இந்த க்யூப் பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் வரும். அந்தக் காலம் வருவதற்கு நாட்கள் அதிகமாக இல்லை.

அனைத்து தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக இருந்து முடிவு எடுக்கும்போது, 50% திரையரங்க உரிமையாளர்கள் நாம் கஷ்டப்படுகிறோம் உதவியாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள்.

மற்ற திரையரங்கு உரிமையாளர்களுடைய போக்கு வேறுமாதிரியுள்ளது.

இப்படி ஒரு சூழல் இருக்கும்போது, இந்தப்பிரச்சினையைச் சொல்லி புரியவைக்க வேண்டும்.

அவர்களும் நமது முடிவுக்கு கட்டுப்படுவது போல, சங்கத்தோடு பேசி அனைத்து தயாரிப்பாளர்களும் உழைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுடைய ஆதரவும், முழு ஒத்துழைப்பும் இந்த க்யூப் விஷயத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இதை செயல்படுத்தி வருகிறோம்”

என்று முழங்கியுள்ளார் ஞானவேல்ராஜா.

இந்தப் பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒரு கருத்து பரவிவருகிறது.

ஏவிஎம் குடும்பத்துக்கு நெருக்கமான, பாரம்பர்யமான குடும்பத்தைச் சேர்ந்த அருண் வீரப்பன், பி.சி.ஸ்ரீராமின் பார்ட்னரான ஜெயேந்திரா போன்றவர்களால் நிர்வகிக்கப்படும் ரியல் இமேஜ் நிறுவனம்தான் க்யூப் சேவையை வழங்கி வருகிறது.

அவர்களை அகற்றிவிட்டு, க்யூப் நிறுவனத்துக்கு பதில் விஷால் கொண்டு வர விரும்பும் புதிய நிறுவனம் ஆந்திராவை சேர்ந்த நிறுவனமாம்.

தமிழர்களின் நிறுவனத்தை காலி பண்ணிவிட்டு ஆந்திர நிறுவனங்களை கொண்டு வர நினைக்கிறார் என்ற குற்றச்சாட்டு விஷால் மீது  சுமத்தப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு  விஷால்தான் பதில் சொல்ல வேண்டும்.

-ஜெ.பிஸ்மி