பிச்சுவா கத்தி – விமர்சனம்

pichuva-kaththi-movie-still


சரக்கடிக்க பணமில்லாததால், ஒரு ஆட்டைத் திருடப்போய், அதனால் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் கதைதான் – ‘பிச்சுவா கத்தி.’

வெட்டியாக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் மூவரும் போதையில் ஆடு ஒன்றை திருட முயற்சிக்க, ஊர்க்காரர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைக்கின்றனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு 30 நாட்களுக்கு கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்துப் போட வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஜாமீன் கிடைக்கிறது.

கையெழுத்து போடவரும் அவர்களிடம் 30 ஆயிரம் லஞ்சம் கேட்கும், போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ், தரவில்லையென்றால் உங்கள் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

30 ஆயிரம் பணத்துக்காக, சாலையில் நடந்து செல்லும் அனிஷாவின் செயினை பறிக்க முயற்சிக்கின்றனர்.

அந்த முயற்சி தோல்வியில் முடிய, மீண்டும் தர்ம அடி, போலீசில் ஒப்படைப்பு.

செயின் பறிப்பு விஷயத்தை வைத்து பிளாக்மெயில் செய்யும் இன்ஸ்பெக்டர் இவர்கள் மூவரையும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறார்.

அதோடு, பிரபல ரெளடியான ஆர்.என்.ஆர் மனோகருக்காக சட்டத்துக்குப் புறம்பான வேலைகளையும் செய்ய வைக்கிறார் இன்ஸ்பெக்டர்.

இந்த குற்றச்சுழலில் இருந்து மூவரும் எப்படி விடுபடுகிறார்கள் என்பதுதான் பிச்சுவா கத்தி.

பல படங்களில் இரண்டாம்நிலை வேடங்களில் நடித்து வந்த இனிகோ பிரபாகர் ரம்மி படத்துக்குப் பிறகு இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ரொமான்ஸ், காமெடி, செண்ட்டிமெண்ட், ஆக்‌ஷன் என எல்லா ஏரியாக்களிலும் தன் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார்.

அவரது நண்பர்களாக யோகி பாபு, ரமேஷ் திலக்.

யோகி பாபு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.

இனிகோவின் காதலியாக ஸ்ரீபிரியங்கா. வழக்கமான காதலி. வழக்கமான கதாநாயகி.

இன்னொரு ஹீரோவாக செங்குட்டுவன். தயாரிப்பாளரின் மகனாக இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இனிகோ சம்மந்தப்பட்ட கதை காணாமல்போய், செங்குட்டுவனின் ட்ராக் முக்கியத்தும் பெறுகிறது.

கேரக்டராக மனதில் பதிகிறார் செங்குட்டுவன். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அனிஷாவும்தான்.

மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், கோலி சோடா சீதா தங்களால் முடிந்த அளவுக்கு சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆர்.என்.ஆர் மனோகரும், சேரன்ராஜும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள்.

என் .ஆர். ரகுநந்தனின் பாடல் இசையும், பின்னணி இசையும் பிச்சுவா கத்திக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

அப்பாவி இளைஞர்களை மிரட்டி சமூகவிரோத காரியங்கள் செய்ய வைக்கும் போலீஸ் அதிகாரிகளின் முகத்திரையை கிழித்திருக்கிறார்கள்.

பிச்சுவா கத்தி – இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். அதற்காக மொக்கை இல்லை.