பாபநாசம் – விமர்சனம்

IMG_3936

த்ரிஷ்யம் என்ற மலையாள வெற்றிப்படத்தின் தமிழ்ப்பதிப்பு.

மலையாளத்தில் மோகன்லால் ஏற்ற கதாபாத்திரத்தில்…கமல்.

யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரமாக வாழ்பவர் மோகன்லால்.

சிவாஜிக்குப் பிறகு என்று சொல்லப்படுவதை தக்க வைத்துக்கொள்வதற்காகவே நடிப்பைக் கொட்டுபவர் கமல்.

அதனால் பாபநாசம் படத்தை என்ன நாசம் பண்ணி இருக்கிறாரோ என்ற பயம் ஏற்பட்டது நிஜம். பயத்தை மேலும் அதிகரித்தது கமலின் ஒட்டு மீசை தோற்றம்.

கேரக்டர் எஸ்ட்டாப்ளிஷ்மெண்ட் என்கிற கதாபாத்திர அறிமுகக்காட்சிகள் தொடங்கி முதல் முக்கால் மணி நேரம் ஒட்டுமீசை உறுத்தலாகவே இருந்தாலும்…

தன் பங்குக்கு த்ரிஷ்யம் கதையை….பாபநாசம் படத்தை… இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார் கமல்.

சுயம்புலிங்கம் அண்ணாச்சியாகவே மனதிலும் நினைவிலும் நிறைந்திருக்கிறார்.

பாபநாசத்தில் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வரும் சுயம்புலிங்கத்துக்கு டிவியில் ஒளிபரப்பாகும் அத்தனை படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பதுதான் முழுநேர வேலை.

படிப்பறிவு இல்லாத சுயம்புலிங்கத்துக்கு அவர் பார்த்த படங்களே ஆசான். படங்களைப்பார்த்து பல மொழிகளைக் கற்றுக்கொண்டதோடு, தன் அறிவையும் வளர்த்துக் கொண்டவர்.

அன்பான மனைவி (கௌதமி). அழகான இரண்டு பெண் பிள்ளைகள் (நிவேதா தாமஸ், எஸ்தர் அனில்)

பள்ளியில் ஏற்பாடு செய்த சுற்றுலாவின்போது ஒரு இளைஞன், சுயம்புலிங்கத்தின் மூத்த மகளான செல்வியை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துவிடுவதோடு, சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய செல்வியைச் சந்தித்து அவளது ஆபாசப் படத்தை காட்டி பிளாக்மெயில் செய்கிறான்.

“இன்று இரவு உன் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு வா. என் ஆசைக்கு இணங்கு. மறுத்தால், உன் ஆபாசப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன்” என்று மிரட்டுகிறான்.

செல்வி மறுக்கிறாள். அப்போது செல்வியின் அம்மா ராணியும் தன் மகளை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார்.

“உன் மகளை விட்டுவிடுகிறேன். அவளுக்குப் பதிலாக நீ வா” என்று வக்கிரமாகப் பேசுகிறான்.

ஆத்திரத்தில், ஒரு இரும்புக் கம்பியால் அவனை ஓங்கி அடிக்கிறாள் செல்வி.

அவன் பிணமாகிறான்.

அம்மாவும், மகளும் அந்த தோட்டத்தில் இருக்கும் குழிக்குள் பிணத்தைப் புதைக்கிறார்கள்.

தன் மனைவி மக்களை காப்பாற்றுவதற்காக, கொலைக்கான தடயங்களை மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார் சுயம்புலிங்கம்.

கொலை செய்யப்பட்டது போலீஸ் ஐ.ஜி.யின் ஒரே மகன் என்ற விவரம் தெரிய வரும்போது சுயம்புலிங்கத்துக்கு மட்டுமல்ல நமக்கும் பதட்டம்.

காணாமல்போன தன் மகனை தேடும் முயற்சியில் ஈடுபடும் போலீஸ் ஐ.ஜி. கீதா பிரபாகர், தன் மகன் காணாமல் போனதற்கு சுயம்புலிங்கமும், அவரது மகள் செல்வியும்தான் காரணம் என்று உறுதியாய் நம்புகிறார்.

ஆதாரங்களையும் சாட்சிகளையும் திரட்ட தனது போலீஸ் படையை முழுவீச்சில் களமிறக்குகிறார்.

அவரது முயற்சி வெற்றியடைந்ததா இல்லையா? போலீஸ் பிடியிலிருந்து சுயம்புலிங்கம் மீண்டாரா இல்லையா என்பதுதான் மிச்ச கதை.

எப்பேற்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் கதைக்குள் தன்னை எப்படி பொருத்திக்கொள்வது என்பதற்கு கமலும் இந்தப்படமும் சிறந்த உதாரணம்.

உலகநாயகன் என்பதை எல்லாம் மறந்து சுயம்புலிங்கம் என்கிற அண்ணாச்சியாகவே வாழ்ந்திருக்கிறார் கமல்.

கமலுக்குப் பிறகு கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார் போலீஸ் ஐ.ஜியாக வரும் ஆஷா ஷ்ரத்.

போலீஸ் அதிகாரியாக கம்பீரம் காட்டும் அவர், மகனை இழந்து ஒரு தாயாய் பரிதவித்து நிற்கும் காட்சியிலும் அழுத்தமான முத்திரை.

பாபநாசம் படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை.

சிறந்த படமாக இருந்தால் அது கமலுக்கு வெற்றிப்படமாக இருக்காது என்ற பழங்கதையை பொய்யாக்கி பாநாசம் படத்தை சிறந்த படமாகவும் வெற்றிப்படமாகவும் கொடுத்த இயக்குநர் ஜீத்து ஜோசப் பாராட்டுக்குரியவர்.

பெண்களைப் பெற்றவர்களும், ஆண்களைப் பெற்றவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் பாபநாசம்.