கடைக்குட்டி சிங்கம்… – டிவி சீரியல் கதை சினிமாவாக ஜெயித்தது எப்படி? Comments Off on கடைக்குட்டி சிங்கம்… – டிவி சீரியல் கதை சினிமாவாக ஜெயித்தது எப்படி?

 

சூர்யா தயாரிக்க கார்த்தியை வைத்து பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இங்குமட்டுமல்ல, சின்னபாபு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு மொழிகளிலும் கடைக்குட்டி சிங்கம் வணிகரீதியில் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் பாண்டிராஜ் உடன் ஒரு சந்திப்பு….

பேமிலி சப்ஜெக்ட், ஃபேமிலி சென்ட்டிமென்ட் என்பது டிவி சீரியலுக்கு இடம்பெயர்ந்து ரொம்ப காலமாச்சு… தியேட்டர்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருவதில்லை. இந்த சூழ்நிலையில் ஃபேமிலி சென்ட்டிமென்ட்டை நம்பி கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்க துணிந்தது எப்படி? இது வொர்க்அவுட்டாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது எப்படி?

ஒரு படம் நல்லா வரணும்னா அந்த படத்தில் எமோஷனஸ் அதிகமாக இருக்கணும்னு நான் நம்பறேன். சமீபத்திய உதாரணம் பாகுபலி. அந்தப்படம் பிரம்மாண்டமாக இருந்தாலும்… அதில் ரொம்ப பேசப்பட்டது எமோஷனஸ்தான். டைட்டானிக் படத்திலேயேகூட லவ்வுக்குள்ளே எமோஷனஸ் இருந்தது. அதனால இதை சீரியல் பேட்டர்ன் என்று சொல்ல முடியாது. எமோஷனன்ஸுக்கு கட்டுப்படாதவங்க இந்த உலகத்திலே யாருமே இருக்க முடியாது. கிராமத்தில் இருக்கற ஒரு வாழ்க்கையை படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரும் பேசும். படத்தில் வரும் ஐந்து அக்காவையுமே நீங்க உங்களோட அக்காவா பார்க்கலாம். இல்லை பக்கத்து வீட்டு அக்காவை பார்க்கலாம். இதில் என்னுடைய இரண்டு அக்காக்கள் இருக்காங்க. சொந்தங்கள் இருக்காங்க. ஆடியன்ஸை உணர வைக்கிற, உருக வைக்கிற எமோஷனஸ் படத்தில ரொம்ப அழகா இருக்கு. இதெல்லாம் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. என்னுடைய நம்பிக்கை இப்போது உண்மையாகி இருக்கிறது.

ஒரு படத்தை இயக்கும்போது உங்களுக்கான டாஸ்க் என எதை நினைக்கிறீங்க?

பல பிரச்சனைகளில் இருந்து ரிலீஃப் தேடித்தான் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர்றாங்க. முதலில் அவங்களை மனசுவிட்டு சிரிக்க வைக்கணும்ங்கிறது என்னுடைய முதல் டாஸ்க். படம் பார்க்கும்போது பத்துப்பதினைந்து இடத்திலாவது அவங்க கைதட்டி சிரிக்கணும். ஐந்தாறு இடத்திலாவது அவங்களை கண்கலங்க வைக்கணும். பத்துப்பதினைந்து இடத்துல அவங்க படத்தோட கனெக்ட்டாகணும். நம்ப வாழ்க்கையிலும் இப்படி நடந்தது. நம்ம மாமா வீட்டுல இப்படி நடந்தது… மச்சான் வீட்டுல இப்படி நடந்தது என்று ஏதோ ஒரு விதத்தில் கனெக்ட்டாகணும். எல்லாத்துக்கும் மேல கமர்ஷியல் விஷயங்களும் தேவைப்படுது. இந்த படத்தில் சண்டை இருக்கும்… பாட்டு இருக்கும்னு எதிர்பாரக்கிற எல்லாவிதமான ரசிகர்களும் நமக்கு தேவைப்படுறாங்க.

ஹீரோவுக்காக கதை பண்ணுவது… கதைக்காக ஹீரோவைத் தேடுவது… ஒரு இயக்குநராக உங்களுடைய சாய்ஸ் என்ன?

இதுவரைக்கும் ஹீரோவை கமிட் பண்ணிட்டு நான் கதை பண்ணியதில்லை. கதைக்குத்தான் ஹீரோவிடம் போவேன். கடைக்குட்டி சிங்கம் கூட கதை பண்ணிட்டுதான் கார்த்தி சார் கிட்டபோய் கதை சொன்னேன். அவர் ஓகே சொன்னதுக்கப்புறம் கொஞ்சம் பெருசா பண்ணலாம்னு சில விஷயங்களை வச்சிருக்கலாம். சண்டைக்காட்சியில்… ஒரு புதுமுகம் என்றால் ரெண்டுமூணு பேரை அடிக்கிற மாதிரி இருக்கும். கார்த்தின்னா பத்து பேரை அடிக்கிற மாதிரி கமர்ஷியல் சேர்த்துக்குவோம். இந்த படத்தின் கதைதான் ஹீரோவை கொண்டு வந்தது. படம் பார்க்கும்போதே இது உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.

ஹீரோவை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் கதையை எழுதிவிட்டு, அதன் பிறகு முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்கும்போது ஏற்கனவே எழுதப்பட்ட கதை மேலும் பலமாகுமா? பலவீனமடையுமா?

பெரியஹீரோவை வெச்சு படம் பண்ணும்போது இரண்டுமே நடக்கும். பலமும் இருக்கு. பலவீனமும் இருக்கு. அது டைரக்டரோட கன்ட்ரோல்லதான் இருக்கு. கார்த்தி மாதிரியான ஹீரோக்கள் கதையைப்புரிஞ்சுக்கிற தன்மையிலும் இருக்கு. என்னுடைய ரசிகர்கள் இன்னும் எதிர்பார்ப்பாங்கன்னு சில ஹீரோக்கள் சொல்லும்போது கதைக்கு அவசியமில்லாமல் சில விஷயங்களைச் சேர்ப்போம். அப்ப கதை பலவீனமாகும்.

நீங்க இயக்கும் படத்துக்கான கதையை எந்த அடிப்படையில தீர்மானிக்கிறீங்க.?

இந்தக்கதை கமர்ஷியலாக வொர்க்அவுட்டாகுமா என்பதுதான் முதலில் மனதில் தோன்றும். காரணம்… சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. அதுக்குள்ள நாம எதை சொல்றோம்… எப்படி சொல்றோம் என்பதுதான் முக்கியம்.

இன்றைய படங்களில் குடிப்பதை மிகப்பெரிய கொண்டாட்டமாக சித்தரிக்கும் போக்கு அதிகமாகிவிட்டதே.?

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் கூட அப்படி ஒரு ஒரு பாடலை நானே வச்சிருந்தேன். குடிக்கிறதை நக்கல் பண்ணி வச்ச அந்தப்பாட்டு கொண்டாட்டமான பாடலாக புரிந்து கொள்ளப்பட்டடுவிட்டது. பாண்டிராஜ் படத்தில் பாரை எதிர்பார்த்து வரவில்லை.. என்று எழுதினாங்க. வம்சம் படத்தில் குறிப்பிட்ட ஜாதியை நீங்க ஃபோகஸ் பண்ணியிருக்கீங்க… எங்களை தப்பா காண்பிச்சுட்டீங்கன்னு சொல்லி என்னை ஊரில் விடக்கூடாதுன்னு சொன்னாங்க. தேவர் மகன் படத்தையே எல்லோரும் அது ஜாதி படம் என்று சொல்லுவாங்க. க்ளைமாக்ஸ் வேற மாதிரி இருக்கும். வன்முறை கூடாதுன்னு சொல்லணும்னா… வன்முறையை கண்பிச்சுட்டுத்தான் அது கூடாதுன்னு சொல்லணும். அதுதான் சரியான விஷயம். கடைக்குட்டி சிங்கம் படத்தில் இரண்டு சீன்ல குடிக்கிற விஷயம் இருக்கும். குடிச்சதால தப்பான முடிவை எடுக்கறாங்கன்னு சொல்றதுக்காக அப்படி வச்சிருக்கேன். அப்பக்கூட அவங்க சரக்கு அடிக்கறது தெரியாம பூடகமா பண்ணிருக்கேன். என்னுடைய எட்டு படங்களிலும் புகைபிடிப்பதுபோல ஒரு காட்சிகூட கிடையாது. ஆனா குடிப்பது போல காட்சி வச்சிருக்கேன். ஏன்னா…. குடித்த பிறகுதான் பிரச்சனை உருவானது என்பதை சொல்வதற்காக குடிக்கிற காட்சி வச்சிருக்கேன்.

ஒரு சினிமாவின் ஆயுள் அதிகபட்சம் ஒரு வாரம் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் இவ்வளவு உழைப்பைக்கொட்டி படம் எடுக்கணுமா?

எவ்வளவு பெரிய படமா இருந்தாலும் உழைப்பைப் போட்டுத்தான் ஆகணும். சினிமாவின் ஆயுள் மூணு நாள் மட்டும் கிடையாது… 30 வருஷம் கழிச்சும் கூட அடுத்த தலைமுறையும் பார்க்கும்… இன்னும் 100 வருஷம் கழிச்சு வர்ற தலைமுறையும் பார்க்கும். இப்பவே என்னுடைய முந்தைய படங்களைப் பார்க்கும்போது அடடா இந்த இடத்தில தப்பு பண்ணிட்டோம்னு தோணும். எடிட்டிங்கோ ஸ்கிரீன்பிளேயோ இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்னு உறுத்திக்கிட்டே இருக்கும். ‘சே இவ்வளவு நல்ல பாட்டை இப்படி எடுத்துட்டோமேன்னு தோணும்… காலத்துக்கும் நம்ம படம் நிற்கணும்னா எஃபர்ட்டை போட்டுத்தான் ஆகணும்.

ஆடியன்ஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கிரியேட்டர் ஆகிட்டாங்க. முதல்ல பிரஸ்காரங்கதான் விமர்சனம் பண்ணிக்கிட்டிருந்தீங்க. இப்ப ஆடியன்ஸ் தியேட்டரில் உட்கார்ந்து விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்காங்க. எந்த ஷாட்டை எங்கே எடுத்திருக்கான்… எந்த ஆர்ஆர்… எங்கே திருடியிருக்காங்கன்னு… தெரிஞ்சு வச்சிருக்காங்க. ஒரு டிசைன் வந்துச்சுன்னா அந்த டிசைன்ல ‘மச்சன் இந்த டிசைனை இங்க உருவியிருக்கான்டான்னு போட்டுடறாங்க. ஆடியன்ஸ் பயங்கர விழிப்புணர்வா இருக்காங்க. நம்ம அதைவிட யோசிக்கனும்னா எஃபர்ட் போட்டுத்தான் ஆகணும்.

– ஜெ.பிஸ்மி

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
நயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்! – Video

Close