பள்ளிப்பருவத்திலே – விமர்சனம்

palliparuvathile-stills-018


நிஜத்தில் சாதியின் பெயரால் பலியிடப்படும் காதல்களை கண்முன் நிறுத்தும் யதார்த்தமான காதல் கதை.

பள்ளிப்பருவத்திலே என்ற தலைப்புக்காகவே எழுதப்பட்ட கதையோ என்கிற அளவுக்கு பக்கா டீன் ஏஜ் காதல்கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்.

பள்ளிப்பருவத்தில் ஏற்படும் காதல் அவர்களுடைய எதிர்காலத்தை எப்படி பதம் பார்க்கிறது என்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை.

அதையே மெகாசீரியலைப்போல் விலாவரியாக சொல்லி அயர வைத்திருக்கிறார் இயக்குநர்.

பள்ளிக்கூட காதல்கதைக்கே உரித்தான டெம்ப்ளேட் திரைக்கதை.

நந்தன் ராம் ப்ளஸ்-டூ மாணவன்.

வெண்பா சக மாணவி.

வெண்பாவை வெறித்தனமாகக் காதலிக்கிறார் நந்தன் ராம்.

அவருடைய காதல் அரசல்புரசலாக ஊருக்குள் புகைய, ஒருகட்டத்தில் வெண்பாவின் சித்தப்பாவான ஆர்.கே.சுரேஷுக்குத் தெரியவர, மனுஷன் டென்ஷனாகி, வம்பு பேசிய கிழவியையே தூக்கிப்போட்டு மிதிக்கிறார்.

கிழவிக்கே இந்த மிதி என்றால், தன்னுடைய அண்ணன் மகளை காதலித்த நந்தன் ராம் கதி என்னவாக இருக்கும்?

கதிகலங்க வைக்கும் காட்சிகளுடன் பள்ளிப்பருவத்திலே கதை பயணிக்கிறது.

இடையில் வெண்பாவுக்கும் இன்னொருவருக்கும் திருமணம் நடந்து முடிகிறது.

அதன் பிறகும் வெண்பாவை வெறித்தனமாக காதலிக்கிறார் நந்தன் ராம்.

இன்னொருவன் மனைவியான பிறகு, வெண்பா எப்படி நந்தன் ராமுவை கைப்பிடிக்க முடியும்? காதல்கதை கள்ளக்காதல்கதையாக தடம் மாறுகிறதோ என எண்ண வைத்து, எதிர்பாராத ஒரு க்ளைமாக்ஸில் படம் முடிகிறது.

காதல் படத்தை நினைவூட்டும் க்ளைமாக்ஸ் என்றாலும், அதே வலியை கடத்துகிறது.

இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக அறிமுகம். முதல் படம் என்று சொல்லிவிடமுடியாத அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார். நந்தன்ராமின் ப்ளஸ்… ‘ஆசை’ அஜித்தின் குரலைக் கேட்பதுபோன்ற அவருடைய குரல்.

கதாநாயகி வெண்பா, கனிமொழியாக மனதில் நிறைகிறார். படம் முடிந்து வெளியே வரும்போது மனதில் உயர்ந்துநிற்பது அவரது கதாபாத்திரம்தான்.

ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக…கே.எஸ்.ரவிக்குமார். ஊர்வசி வழக்கமான அப்பாவி அம்மா.

தம்பி ராமையா, கஞ்சா கருப்பு என இரண்டு காமெடியன்கள் இருந்தும் நல்ல நகைச்சுவைக்கு பஞ்சம்.

விஜய் நாராயணன் இசையில் பாடல்கள் பலம்.

பள்ளி படிப்பின்போது ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என பள்ளி மாணவர்களுக்கு படிப்பினையைத் தரும் படம்.

சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லப்பட்டிருந்தால் இன்னொரு ‘துள்ளுவதோ இளமை’யாக இருந்திருக்கும்.