பா.ரஞ்சித்தை புரட்டி எடுத்த உதவி இயக்குநர்…!

ranjith

அறம் படத்தின் மூலம் இயக்குநர் கோபி நயினார் கவனிக்கத்தக்க இயக்குநராகி இருக்கிறார்.

இந்த கவன ஈர்ப்பு அவருக்கு சில வருடங்களுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும்.
அதை காலி பண்ணியவர்கள் இருவர்.

ஒருவர்… இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். மற்றொருவர் பா.ரஞ்சித்.

சில வருடங்களுக்கு முன் கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்கினார் இன்றைய கோபி நயினாரான அன்றைய மீஞ்சூர் கோபி.

கருப்பர் நகரம் திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி முடங்கியது.

அப்போது அவரது நட்பு வட்டத்தில் இருந்த பா.ரஞ்சித் அந்தக்கதையை சுட்டு எடுத்த படம்தான் மெட்ராஸ்.

அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு வந்தபோது கோபி சொன்ன கதைதான், கத்தி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.

தன்னுடைய சிந்தனையை இரண்டு இயக்குநர்கள் திருடி வெற்றியடைந்த துயரத்திலிருந்து வெளியே வந்து அறம் படத்தை இயக்கி தன்னை நிருபித்திருக்கிறார் கோபி.

அவரது வெற்றியை திரையுலகம் மட்டுமின்றி, நல்ல சினிமாவை விரும்புகிற அனைவருமே கொண்டாடிக் கொண்டிருக்க…

கோபி நயினாருக்குக் கிடைத்த பெயரை பா.ரஞ்சித்தால் ரசிக்கமுடியவில்லை.

#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர்&படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்…

-என்று பட்டும்படாமலும் ட்வீட் பண்ணினார்.

அதாவது கம்யூனிசம், பொதுவுடமை, சமத்துவம், சமூகநீதி, என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நயன்தாராவை, #தோழர்நயன்தாரா என்று குறிப்பிட்ட பா.ரஞ்சித் அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினாரின் பெயரைக் கூட குறிப்பிடாமல், இயக்குனர்&படக்குழுவினர்க்கும் என்று கடந்துபோகிறார்.

அவரது பாசாங்கான போலியான இந்த பாராட்டு குறித்து சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள்.

இதன் தொடர்ச்சியாய், இயக்குனர் கோபி நயினார் பதிவு என்ற தலைப்பில் ஒரு பதிவு மீடியாக்களின் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது.

“இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள்.

ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.
இது ஆரோக்கியமான சூழலல்ல.

தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது.

அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போது தான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமைய கூடும்.

ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன்.

நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தததை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

தோழமையுடன் கோபி நயினார்.”

என்று பா.ரஞ்சித்துக்கு ஆறுதலைத் தருகிறவகையில் அந்த பதிவு இருந்தது.

இதற்கிடையயில் கோபி நயினாரின் உதவியாளரான ஜனனி ரமேஷ் என்பவர் பா.ரஞ்சித்தை தன்னுடைய வார்த்தைகளால் புரட்டியெடுத்துவிட்டார்…

அந்த பதிவு இதோ….

“எங்கள் இயக்குநரின் முதல் திரைப்படம் “கருப்பர் நகரம்” இது.

சென்னையின் பூர்வீக குடிகளை பற்றிய கதை.

ஒருசில காரணங்களால் அத்திரைப்படம் தாமதமானது இந்த கதையை களவாடி
இன்னொரு திரைப்படமாக வெளிவந்து அனைவராலும் பாராட்டு பெற்று பெரிய வெற்றிபெற்றது.

அதன் இயக்குநர் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தன் சொந்த சிந்தனையென்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தது இன்னும் கண்முன் நிற்கிறது.

நம்பிக்கை துரோகத்தால் எங்கள் இயக்குநரின் குரல் சென்னையின் எல்லா வீதிகளில் ஒலித்தபோது அரசியல் பின்னணிகள் சத்தமில்லாமல் வாயடைத்தது.

எங்கள் இயக்குநரின் அறிவை திருடி இரவல் புகழ் அடைந்த அனைவருக்கும் “அறம்” சமர்ப்பணம்.
இன்று  இந்திய சினிமாவே பாராட்டும்போதும்  உலக சினிமாவுக்கான உன்னத பயணத்தில் எங்கள் இயக்குநர்.

மாலைகள் அணிவகுத்தபோதும் தோழமைகளுக்காக தோள் கொடுத்து நிற்கும் தோழர்! எங்கள் அண்ணன் ந.கோபிநயினார்.

அவரின் உதவி இயக்குநர் என்பதில் நான் பெருமை அடைகிறேன்.!”