மருந்து கம்பெனிகளுக்கு ‘ஔடதம்’ தரும் அதிர்ச்சி வைத்தியம்…!

owdatham

ஆடும் கூத்து பட இயக்குநர் டி.வி சந்திரனிடம் உதவியாளராக இருந்தவர் ரமணி.

இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு ‘ஔடதம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ஒளடதம் என்றால்?

மருந்து என்று பொருளாம்.

அதற்கு மருந்து என்றே மக்களுக்குப் புரிகிறமாதிரி பெயர் வைத்திருக்கலாமே என்றால்,

“மருந்து மட்டுமல்ல, மருந்து என்ற தலைப்பும் மக்களுக்கு கசப்பானதாக இருக்கும் என்பதால்தான்… ஆர்வத்தைத் தூண்டுகிற வகையில் ‘ஔடதம்’ என்று வைத்தோம்.” என்கிறார் ரெட் சில்லி பிளாக் பெப்பர்ஸ் சினிமாஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் நேதாஜி பிரபு.

‘ஔடதம்’ படத்தின் கதை என்ன?

“மருந்து கம்பெனிகளின் அரசியலும், மக்களின் உயிரோடு விளையாடும் அவர்களின் வியாபார அதர்மங்களும்தான் இந்தப் படத்தின் கதை.

மருந்து ஆராய்ச்சிக்காக நம்முடைய மக்களை பரிசோதனை எலிகளாக்கி, எப்படி எல்லாம் உயிர்களை காவு வாங்குகிறார்கள்?

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை எல்லாம் இங்கே தங்குதடையில்லாமல் விற்றுக் கொண்டிருக்கின்றன மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்.

இதுபோல் மருந்து வியபாரத்தில் நிலவும் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மையை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்.

மருந்துகளின் பாதிப்பைச் சொல்ல வேண்டுமென்றால் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா?

அதற்காக பல்வேறு எதிர்ப்புகளை மீறி தடைகளை மீறி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிலேயே படப்பிடிப்பு நடத்தினோம்.

இந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும்போது மக்கள் அதிர்ந்துபோவார்கள். அது மட்டுமல்ல, மருந்துகள் குறித்த விழிப்புணர்வையும் பெறுவார்கள்”

என்கிறார் நேதாஜி பிரபு.

‘ஔடதம்’ படத்துக்கு ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்ய வி.தஷி இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தைப் பற்றி கேள்விப்பட்ட கீழக்கரை எஸ்.அஜ்மல்கான் என்ற தொழில் அதிபர், படத்தை வாங்கி சீபா அசோசியேட்ஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.