நோ ஸ்டிரைக்….! – விஷாலுக்கு வலுக்கிறது எதிர்ப்பு…

tn-film-distributors-federation-statement

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விஷால், வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் திரைப்படத்துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தன்னிச்சையாக அறிவித்தார்.

திரைப்படத்துறையில் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன.

அவர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் விஷால் செய்த அறிவிப்புக்கு திரையுலகினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இன்னொரு பக்கம் பெரும் முதலீட்டில் படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களும் விஷாலின் அறிவிப்புக்கு உடன்பட மாட்டோம் என்று  கூறி வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து விஷாலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இது குறித்து இந்த அமைப்புகள் ஒரு கூட்டறிக்கையை இன்று வெளியிட்டுள்ளன.

வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்று வருகிற செய்திகள் உண்மையல்ல என்றும், 30.5.2017 செவ்வாய்கிழமை அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், சென்னை நகர திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன், கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவருமான  திருப்பூர் சுப்புரமணியம், திருச்சி தஞ்சாவூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர்  பிரதாப், வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.சீனிவாசன், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆர்.செல்வின்ராஜ் ஆகியோரின் கையெப்பத்துடன் இந்த கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் விஷாலின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.