நெருப்புடா – விமர்சனம்

neruppuda-movie-stills-006

 

கபாலி படத்தின் பாடலையே தலைப்பாக்கி இருப்பதால் கதை விஷயத்தில் நெருப்பை வைத்து ஜல்லியடித்திருப்பார்கள் என்று நினைப்பவர்களுக்கு… பல்புதான்.

நெருப்புடா என்ற தலைப்புக்குப் பக்காவாக மேட்ச் ஆகிற ‘பற்றி எரிகிற’ கதை.

படிக்கும் வயதில் பார்த்த ஒரு சம்பவம் விக்ரம் பிரபுவின் மனதில் ஃபயர்மேன் என்கிற தீயணைப்பு வீரர்களை ஹீரோவாக பதிய வைக்கிறது.

தானும் ஃபயர்மேன் ஆக வேண்டும் கனவை வளர்த்துக்கொள்ளும் விக்ரம் பிரபு, சொந்தமாக தீயணைப்பு வண்டியை வைத்துக்கொண்டு, எங்கே தீப்பிடித்தாலும் விரைந்து சென்று தீயை அணைக்கிறார்.

அவரைப்போலவே லட்சியம் கொண்ட நண்பர்களுடன் தன்னார்வ தீயணைப்பு வீரராக செயல்படும் விக்ரம் பிரபுவின் பணியை பாராட்டுவதோடு, அவருக்கும் அவரது நண்பர்களுக்கும், தீயணைப்புத்துறையில் வேலை வாங்கித்தர முயற்சி செய்கிறார் தீயணைப்புத்துறை அதிகாரியான நாகிநீடு.

இதற்கிடையில், நாகிநீடுவின் மகளான நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு மீது காதல் வருகிறது.

அவர் யார் என்றே தெரியாமலே நிக்கியை காதலிக்க ஆரம்பிக்கிறார் விக்ரம்பிரபு

ஒரு பக்கம் தீயின் நடுவில் சாகசம், இன்னொரு பக்கம் நிக்கியுடன் காதல் என செல்லும் வாழ்க்கையில்… அடுத்தடுத்து பிரச்சனைகள்.

விக்ரம் பிரபுவின் நண்பனான வருணை ரவுடியான வின்சென்ட் அசோகன் தாக்க, வருணின் தற்காப்பு முயற்சியில் ரவுடி இறந்து போக, விக்ரம் பிரபுவும் அவரது நண்பர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

அவற்றை சமாளித்து விக்ரம்பிரபு எப்படி வெற்றியடைகிறார்?

அவரது ஃபயர்மேன் கனவுநிறைவேறியதா? என்பது மீதிக்கதை.

கமர்ஷியல் சினிமாவுக்கான லவ், சென்ட்டிமெண்ட், ஆக்ஷன் பின்னணியில் நெருப்புடாவை எரியவிட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அசோக்குமார்.

பற்றி எரியும் குடிசைப்பகுதி, விரைந்து வரும் விக்ரம் பிரபு அண்ட் கோ, எரியும் வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை, உயிரைப் பணயம் வைத்து குடிசைக்குள் செல்லும் விக்ரம் பிரபு, தீயிலிருந்து குழந்தையையும் தன்னையும் காக்க விக்ரம் பிரபு கையாளும் புத்திசாலித்தனம் என ஆரம்பமே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

கொஞ்சமும் போரடிக்காமல் கதை சொன்ன இயக்குநர், க்ளைமாக்ஸில் திருநங்கை கேரக்டரை களமிறக்கி அதிரவிட்டிருக்கிறார்.

போலீஸ் டிபார்ட்மெண்ட்டே பம்முகிற அளவுக்கு மிகப்பெரிய தாதாவாக விளங்கும் மதுசூதனராவையும்,  அவரது ஐம்பது அடியாட்களையும் ஒரே அடியில் காலி பண்ணுவதெல்லாம் ஆக்ஷன் இல்லை, காமெடி.

முந்தைய படங்களில் சறுக்கிய விக்ரம்பிரபுவுக்கு நெருப்புடாவில் பேர் சொல்லும் கேரக்டர்.

ஆக்ஷன், ரொமான்ஸ், சென்ட்டிமெண்ட் என நிறைவாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு.

மருத்துவ மாணவியாக நிக்கி கல்ராணி. விக்ரம் பிரபுவை காதலிக்கிறார். க்ளோஸப்பில் சற்றே முதிர்ச்சியாக தெரிகிறார்.

விக்ரம் பிரபுவின் அப்பாவாக பொன்வண்ணன். கழிவுநீர் அகற்றும் தொழிலாளியாக மனதில் நிற்கிறார்.

காமெடிக்கு ‘மொட்டை’ ராஜேந்திரன்… போகிற போக்கைப்பார்த்தால் ‘மொக்கை’ ராஜேந்திரன் என்று பெயர் வாங்கிவிடுவார் போலிருக்கிறது.

நெருப்புடா படத்தின் சர்ப்ரைஸ்…. சங்கீதா.

திடுதிடுப்பென்று க்ளைமாக்ஸில் திருநங்கையாக முகம் காட்டுகிறார் சங்கீதா.

தோற்றத்தில் மட்டுமல்ல, குரல், உடல்மொழியில் அந்த கதாபாத்திரமாகவே மிரட்டியிருக்கிறார்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனிக்க வைக்கின்றன. அதிலும், ‘ஆலங்கிளியே..’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. காலர் ட்யூனாக தகுதியுள்ள பாடல்.

விக்ரம் பிரபுவின் முந்தைய படங்களைப் பார்த்து அலர்ஜியானவர்களுக்கு நெருப்புடா பல மடங்கு ஆச்சர்யம் தரும்!