‘நான் திரும்ப வருவேன்’ – விடுதலைப்புலி பிரபாகரனின் கதை

manoj-manchu1

நம்ம ஊர் முன்னணி ஹீரோக்கள் நடித்த தமிழ்ப்படங்கள் நேரடி தெலுங்குப்படம் என்று ஆந்திர ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.

இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவோ என்னவோ… முன்னணி தெலுங்கு ஹீரோக்கள் நடித்த தெலுங்குப்படங்கள் சமீபகாலமாக ‘நேரடி தமிழ்ப்படங்கள்’ என்ற பெயரில் இங்கே இறக்குமதியாகத் தொடங்கியுள்ளன.

முன்பெல்லாம் தெலுங்குப் படங்கள் டப்பிங் படங்களாகவே தமிழகத்தில் வெளியாகும்.

இப்போது டப்பிங் படம் என்ற உண்மையை மறைத்து நேரடி தமிழ்ப்படம் அல்லது இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என்ற பெயரில் வெளியிட்டு வருகின்றனர்.

ராணா நடித்த தெலுங்குப் படத்தை சமீபத்தில் நான் ஆணையிட்டால் என்ற பெயரில் வெளியிட்டது அபத்தத்தின் உச்சம்.

இந்த வரிசையில், மோகன்பாபுவின் மகன் மனோஜ் மன்ச்சு கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒக்கடு மிகிலடு’ என்ற தெலுங்குப் படம் ‘நான் திரும்ப வருவேன்’ என்ற பெயரில் நேரடி தமிழ்ப்படமாக வரவிருக்கிறது.

பத்மஜா பிலிம்ஸ் மற்றும் என்இசி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அஜய் ஆன்ட்ரூஸ் நுத்தகி இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘ராவண தேசம்’ என்ற படத்தை இயக்கியவர் இவர்.

இலங்கையிலிருந்து அகதிகளாகத் தப்பித்து தமிழ்நாட்டுக்கு படகில் வருபவர்களுக்கு நேரும் துயரங்களைப் பற்றிய ராவண தேசம் படத்தைப்போலவே ‘நான் திரும்ப வருவன்’ படத்தையும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து இயக்கியுள்ளார் அஜய் ஆன்ட்ரூஸ்.

ஈழ ஆதரவாளர்களான தமிழ்சினிமா இயக்குநர்களே கையில் எடுக்க தயங்கும் இலங்கைப் பிரச்சனையை இவர் சர்வசாதாரணமாக டச் பண்ணுகிறாரே?

“எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவங்கதான், ஏன் இலங்கைப் பிரச்சனையை வச்சி படம் பண்ணக் கூடாது?ன்னு என்கிட்ட கேட்டாங்க. அப்படி பண்ண படம்தான் ‘ராவண தேசம்’. ஆனால் அந்தப் படத்தைப் பெருசா கொண்டு போய்ச் சேர்க்க முடியலை. இலங்கை அகதிகளோட வலியை உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு ஆசைப்பட்டேன். அப்படி எடுக்கப்பட்ட படம்தான் ‘நான் திரும்ப வருவேன்’. இது ஒரு மாணவர் தலைவர் பற்றிய கதை. அவர் ஒரு அகதி, அவரை அப்படி மாற்றிய விஷயம் எது என்று படத்தில் சொல்லியிருக்கிறேன்.” என்கிறார் அஜய் ஆன்ட்ரூஸ் நுத்தகி.

‘நான் திரும்ப வருவேன்’ படத்தின் கதாநாயகன் மனோஜ் மன்ச்சு என்ன சொல்கிறார்?

“இந்தப் படத்தோட கதையைக் கேட்டதும் எமோஷனலா இருந்தது. இநத்ப் படத்தை கண்டிப்பா பண்ணணும்னு நினைச்சேன். வாழ்க்கை முழுவதும் ஞாபகம் வச்சிருக்கிற மாதிரியான படம் இது. ஒரு பெரிய தலைவரைப் பற்றிய படமும் கூட. எல்லாருமே நம்ம கூடப் பிறந்தவங்க, அவங்களை எல்லாம் சாகடிச்சது நடந்தது, எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து 2017 ஆம் வருஷத்துல ஒரு மாணவர் தலைவர் மூலமா கதையை சொல்லியிருக்கிறோம். உலகத்துல கெட்டது நடக்கும் போது எல்லாம் ஒரு தலைவர் வருவாரு. அதுக்காகத்தான் ‘நான் திரும்ப வருவேன்’ என படத்திற்கு தலைப்பு வச்சோம்.

ஒரு அகதியோட வாழ்க்கையை வலியோட சொல்லியிருக்கிற படம் இது. அதனாலதான் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என பண்ணியிருக்கோம். உலகப் பட விழாக்களில் இந்தப் படத்தைக் காட்டணும்.

இந்த மாதிரி ஒரு படத்தைப் பண்ணிட்டு செத்துப் போனால் கூட பரவாயில்லை, ஒரு நல்ல படம் பண்ணிட்டு செத்துப் போயிட்டான்னு சொல்வாங்க. இந்தப் படம் உங்க எல்லாருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.

இந்தப் படத்தோட வெற்றி தோல்வி எல்லாம் பெருசில்லை. உலகம் முழுக்க இந்தப் பிரச்சனையைக் கொண்டு போய் சேர்க்கணும்னு நினைச்சோம்,”

என வீரத்தமிழனாகவே மாறி பேசினார் மனோஜ் மன்ச்சு.

விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரன் மீண்டு(ம்) வருவதுபோன்ற கதை அம்சத்தைக் கொண்டிருப்பதால், ‘நான் திரும்ப வருவேன்’ படத்துக்கு தணிக்கையில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம்.

தணிக்கையில் யாதொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் செப்டம்பர் மாதம் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.