விஜய்யின் விருப்பம், விஷாலின் அறிவிப்பை மீறத் தயாராகும் மெர்சல்…..!

vijay-theri-mersal

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தை தீபாவளி அன்று திரைக்குக்கொண்டு வருவதற்கான பணிகளில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர் – படக்குழுவினர்-

அவர்களின் வேகத்தைக் குறைப்பதுபோல் மெர்சல் படத்துக்கு ஏகப்பட்ட தடங்கல்கள்.

மெர்சல் படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரராக நடித்திருப்பதால் விலங்குகளை வைத்து படம் எடுக்கும்போது விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

‘மெர்சல்’ படத்தில் இந்த விதியை கடைபிடிக்காததினால், விலங்குகள் நல வாரியத்திடமிருந்து ‘தடையில்லா சான்றிதழ்’ கிடைக்கவில்லை என்றும், இதனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

‘‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்புகள் சட்டப்படியான அனுமதிகள் பெற்றுத்தான் நடந்துள்ளது. விலங்குகள் வாரியத்திடம் முறையான அனுமதி பெற்றே படப்பிடிப்புகள் நடந்துள்ளன. இது சம்பந்தமான சான்றிதழ்களை விலங்குகள் நல வாரியம் கொடுத்து விட்டது. இது சம்பந்தமாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. படம் எல்லா தடைகளையும் தாண்டி திட்டமிட்டபடி வெளியாகும்’’ என்று கூறி இருந்தார் மெர்சல் படத்தின் தயாரிப்பாளரான முரளி ராமசாமி.

அடுத்து, மெர்சல் என்ற தலைப்புக்கு உரிமைகோரி மெரசலாயிட்டேன் என்ற படத்தின் தயாரிப்பாளர் வழக்குத் தொடர…

இன்னொரு பக்கம் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பும் வர…

மெர்சல் தீபாவளிக்கு வெளியாகும் வாய்ப்புகள் மங்கிக்கொண்டே வந்தன.

இதனால் விஜய் ரசிகர்கள் துவண்டுபோனார்கள். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் மெர்சல் படத்தின் ரிலீஸ் குறித்து சில நல்ல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.

‘மெர்சல்’ படத்தின் தலைப்பு தொடர்பான வழக்கில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்ததோடு, படத்துக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது.

இதற்கிடையில், மெர்சல் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார்போர்டு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது.

இந்த தகவலுடன் விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி,

‘மெர்சல்’ படத்தின் பின்னணி இசைசேர்ப்பின்போது படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்யின் மெஜிசியன் கேரக்டருக்காக புதிய பாடல் ஒன்றை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டுள்ளார்.

அதன்படி பாடலாசிரியர் விவேக்வை வைத்து ஒரு பாடலை உருவாக்கி படத்தில் இணைத்துள்ளனர்.

பல பிரச்சனைகளைத் தாண்டி ‘மெர்சல்’ படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும்நிலையில், தற்போதைய ஒரே தடை. ‘அக்டோபர் 6 ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம்’ என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு மட்டுமே.

ஒருவேளை தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை அரசு ஏற்காமல் தீபாவளிவரை இழுபறி நீடித்தால், மெர்சல் படத்தின் நிலை என்னாகும்?

தடையை உடைத்து மெர்சல் வெளியாகுமா?

தயாரிப்பாளர் சங்கத்துக்கு கட்டுப்பட்டு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பார்களா?

நமக்கு கிடைத்த தகவல் இதுதான்….

விஜய்யின் விருப்பப்படி, தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை உடைத்து மெர்சல் படத்தை தீபாவளி அன்று வெளியிடும் முடிவிலேயே தயாரிப்பு தரப்பு இருப்பதாக தகவல்.

– ஜெ.பிஸ்மி