மெர்சல் – விமர்சனம்

mersal-1

மருத்துவத்துறையில் கலந்துவிட்ட கழிவுகளை சுத்தம் செய்யும் ‘அபூர்வ சகோதரர்களின்’ கதைதான் மெர்சல்.

அப்பா, இரண்டு மகன்கள் என விஜய்யை மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருப்பதன் மூலம் ‘எங்கிருந்து’ கதையை சுட்டார் என்பதற்கான க்ளுவையும் கொடுத்திருப்பதுதான் அட்லீயின் துணிச்சல்.

‘டாக்டர்கள் தப்புப் பண்ணக்கூடாது…. தப்புப் பண்றவங்க டாக்டரா இருக்கக் கூடாது’ – என்கிற ஒற்றைவரியை மசாலா மணக்க 2 மணி 50 நிமிடத் திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார் அட்லீ.

ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என ஒன்றரை மணி நேர முதல்பாதியில் தெறிக்க விட்டிருக்கும் அட்லீ, இரண்டாம்பாதியில் அநியாயத்துக்கு நெளியவிட்டிருக்கிறார்.

எல்லோருக்கும் மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதே 5 ரூபாய் டாக்டர் மாறனின் லட்சியம்.

விபத்தில் சிக்கிய ஏழை ஆட்டோ டிரைவரின் மகள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்துபோக, அதற்குக் காரணமான ஆம்புலன்ஸ் டிரைவர், ஹாஸ்பிட்டல் புரோக்கர், ஹாஸ்பிட்டல் நிர்வாகி, டாக்டர் என அடுத்தடுத்து கடத்தப்படுகின்றனர்.

இவர்களை கடத்தியது டாக்டர் மாறன்தான் என அவரை கைது செய்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சத்யராஜுக்கு, அதிர்ச்சி…. அது மாறன் இல்லை. மாறனைப்போன்ற தோற்ற ஒற்றுமை கொண்ட மேஜிக்நிபுணர் வெற்றி.

வெற்றியும், மாறனும் ஒரேமாதிரி இருப்பது ஏன்? எதற்காக இந்த வேட்டை? போன்ற கேள்விகளுக்கான பதில்தான் மெர்சல் படத்தின் இரண்டாம்பாதி.

அப்பாவைக் கொன்றவனை பிள்ளைகள் பழிவாங்கும் அபூர்வ சகோதரர்கள் கதையையே 75 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தந்திருக்கிறார்கள்.

ஆனாலும் மொத்தப்படமும் விஜய்யை நம்பியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

விவேகம் அஜித்தைப்போல் இல்லாமல், தன்னுடைய பொறுப்பை உணர்ந்து மூன்று வேடங்களுக்கும் மிக அழகாக நேர்மை செய்திருக்கிறார் விஜய்.

முன்கதையில் வரும் ‘தளபதி’ கெட்டப்பிலும், நடிப்பிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்.

டாக்டர் மாறன், மேஜிக் நிபுணர் வெற்றி கதாபாத்திரங்களுக்கு தோற்ற வித்தியாசம் ஏதுமில்லை என்றாலும், நுணுக்கமான உடல்மொழியினால் இரண்டு வேடங்களையும் வேறுபடுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் விஜய்.

காஜல் அகர்வால், சமந்தாவுக்கு தலா ஒரு பாடல் மற்றும் நான்கு சீன்கள். இவர்களுடைய காதலிலும் ஆழமில்லை. பாடலிலும் சுரத்தில்லை.

ப்ளாஷ்பேக் கதாநாயகியான நித்யா மேனனுக்கு ஓரளவு நடிக்க வாய்ப்பு. வெற்றிமாறனின் வட இந்திய காதல் மனைவியாக மனசைத்தொடுகிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம் ரசிக்க வைத்தாலும் அவரது கதாபாத்திர வடிவமைப்புக்கு இயக்குநர் அட்லீ இன்னும் கூட மூளையை செலவிட்டிருக்கலாம்.

ஆளப்போறான் தமிழன் பாடல் தவிர மற்ற பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை.

படத்தின் வெற்றிக்கு மட்டுமல்ல, விஜய்யின் அரசியல் ஆசைக்கும் பேருதவி புரிவதாக இருக்கின்றன ரமணகிரிவாசனின் வசனங்கள்.

மெர்சல் – விஜய் ரசிகர்களுக்கு மிரட்டல்.