‘மரகத நாணயம்’ படத்துக்கு மகத்தான வரவேற்பு…!

maragatha-naanayam-stills-008

ஒவ்வொரு வாரமும் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் வெற்றி சிகரம் தொடும் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம்… வெளியாகும் படங்களின் லட்சணம் அப்படி.

அதனாலேயே பல படங்கள் ஓரிரு நாட்களிலேயே தியேட்டரைவிட்டு விரட்டியடிக்கப்படுகின்றன.

வித்தியாசமான கதை, புதுமையான காட்சிகள், ரசிக்க வைக்கும் திரைக்கதை ஆகிய அம்சங்கள் கொண்ட படங்களை மட்டுமே மக்கள் ரசிக்கிறார்கள். வெற்றியடையவும் வைக்கிறார்கள்.

இந்த வாரம் வெளியாகி இருக்கும் படங்களில் மரகத நாணயம் இந்த ரகம். வித்தியாசமான கதை, புதுமையான காட்சிகள், ரசிக்க வைக்கும் திரைக்கதை என அத்தனை அம்சங்களுமே இந்தப்படத்துக்குள் அழகாய் பொருந்தியிருக்கின்றன.

அதனால் படத்தின் துவக்கம் முதல் கடைசிவரை ரசிக்க முடிகிறது. முக்கியமாக குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் காட்சிகள் படம் முழுக்க பரவிக்கிடக்கின்றன.

ஆபாசம், வன்முறை இல்லாத ஆரோக்கியமான நகைச்சுவை காட்சிகளும் மரகத நாணயம் படத்தை கொண்டாட வைக்கின்றன.

தமிழில் மரகத நாணயம் என்ற பெயரிலும், தெலுங்கில் மரகத கல் என்ற பெயரிலும் உலகம் முழுக்க சுமார் 600 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் 250 தியேட்டர்களில் வெளியாகி இருக்கும் மரகத நாணயம்,  கர்னாடகாவில் 30 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 5 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியாகி இருக்கிறது.

மரகத கல் ஆந்திராவில் 275க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

மரகத நாணயம் படத்துக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், நாளை முதல் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார் தயாரிப்பாளர் டில்லி பாபு.