மகளிர் மட்டும் – விமர்சனம்

magalir-mattum_jyothika-stills-005

பெண்களை பெருமைப்படுத்திய ‘36 வயதினிலே’க்குப் பிறகு ஜோதிகா மீண்டும் முகம் காட்டியிருக்கும் படம்.

மகளிர் மட்டும் என்று தலைப்பில் பெண்களை முன்னிலைப்படுத்தி இருந்தாலும் இது பெண்களுக்கான படம் அல்ல, ஆண்களுக்கானது.

திருமணத்துக்கு முன்னும் பின்னும் ஆண்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுவதில்லை.

பெண்களின் வாழ்க்கை முற்றிலும் வேறானதாக மட்டுமல்ல, வேரற்றதாகவும் மாறிவிடுகிறது.
மகளிர் மட்டும் இது குறித்து பேசுகிற, பேச வைக்கிற படம்.

பள்ளிநாட்களில் குறும்பும் குதூகலமுமாக திரிந்த மூன்று தோழிகளின் வாழ்க்கை திசைமாறிப்போனநிலையில் அவர்களை சந்திக்க வைக்கிறார் ஆவணப்பட இயக்குநரான பிரபா (ஜோதிகா).

ஏறக்குறைய 38 வருடங்களுக்கு பிறகு, மூன்று தோழிகளும் மீண்டும் சந்திக்கும்போது நிகழும் சம்பவங்களும், அதன் தொடர்ச்சியாய் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளும்தான் ‘மகளிர் மட்டும்’ படத்தின் கதை.

கோமாதா (ஊர்வசி), ராணி அமிர்தகுமாரி (பானுப்ரியா), சுப்புலட்சுமி (சரண்யா) மூவரும் இணை பிரியாத தோழிகள்.

1978-ம் ஆண்டு தீபாவளியன்று யாருக்கும் தெரியாமல் பள்ளி விடுதியிலிருந்து சுவர் ஏறிக்குதித்து அவள் அப்படித்தான் சினிமாவுக்குப் போகிறார்கள்.

தியேட்டரில் கையும் களவுமாக பிடிபடும் அவர்களை பள்ளிநிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கிவிடுகிறது.

அதன் பிறகு ஒருவரோடு ஒருவர் தொடர்புகளற்றுப்போனநிலையில், குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதை மட்டுமே தினசரி கடமையாகக் கொண்டு, தனக்கென வாழ்க்கையில் எந்தவித லட்சியமுமில்லாமல் ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

கோமாதாவின் வருங்கால மருமகளான பிரபா, ஃபேஸ்புக் மூலம் மூன்று தோழிகளையும் சந்திக்கவைப்பதோடு, அவர்களின் பழைய சந்தோஷத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒரு பயணத்துக்கும் ஏற்பாடு செய்கிறார்.

அந்தப் பயணத்தின்போது மூன்று தோழிகளின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வும்…. நெகிழ்வுமே ‘மகளிர் மட்டும்’.

பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிற பிரச்சாரப்படமாக இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் மகளிர் மட்டும் படத்தை ஜனரஞ்சகமான படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.

முக்கியமாக தோழிகளின் பள்ளிநாட்களில் அத்தனை குறும்பு!

யூனிபார்மை வார்டன் பரிசோதிக்க வரும்போது தன்னுடைய யூனிபார்மை லேபில் மாற்றிக் கொடுத்து உதவிய தோழியிடம் ‘சாகுற வரைக்கும் மறக்கமாட்டேன்டி’ என்று கோமாதா கண்கலங்க, ‘அதெல்லாம் வேணாம், நைட்டு உன்னோட அப்பளத்தை எனக்கு தருவியா’ என்று கேட்பது சிறு உதாரணம்.

கண்களில் மட்டுமல்ல, மனசிலும் நிறைந்திருக்கின்றன -1970களில் நிகழும் கடந்த காலக்காட்சிகள்.
சிறு வயது சுப்பு, கோமு, ராணியாக நடித்தவர்களின் நடிப்பு அழகு.

ஊர்வசியின் நடிப்பு வழக்கம்போல்… கலக்கல். பானுப்ரியாவும், சரண்யாவும் இருவேறுபட்ட குடும்பப் பெண்களாகவே மாறி இருக்கிறார்கள்.

இவர்களுக்கு நேர்மாறாக, எந்நேரமும் துறுதுறுவென… ஜோதிகா. ‘மொழி’, ‘36 வயதினிலே’ வரிசையில் ‘மகளிர் மட்டும்’ ஜோதிகாவின் பேர் சொல்லும்.

‘பொம்பளைங்க இருக்குற வீட்டுல, சாப்பாட்டுல முடி இருக்கத்தான் செய்யும்.. எடுத்துப் போட்டுட்டு சாப்பிடனும்’, ‘வீட்டுல எல்லா வேலையும் பார்த்தாலும் சும்மா இருக்கேன், சும்மா இருக்கேன்னு சொல்றியே… எனக்கு என்ன மாசா மாசம் சம்பளம் தர்றியா, இல்ல ஞாயித்துக்கிழமை  லீவு விடுறியா?’, என வசனங்களில் ஆண்களுக்கு எதிராக சாட்டையை சொடுக்கி இருக்கிறார் இயக்குநர்.

மணிகண்டனின் ஒளிப்பதிவும், கிப்ரானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.

திறந்த மனதோடு ஒவ்வொரு ஆணும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.