ரஜ்னி இயக்கும் மதம்…! – பா.ஜ.க. ஆட்சியில் இப்படியொரு படமா?

madham-movie-stills-6

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு மதம் என்றாலே பகீர் என பயம் கவ்வுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் மதம் என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால்?

நல்லவேளை…. இது மனிதனைப் பிடித்துள்ள ‘மதம்’ பற்றிய படம் அல்ல, யானைக்குப் பிடிக்கும் ‘மதம்’ மனிதர்களுக்குப் பிடித்தால் என்னாகும் என்பது பற்றிய படம்.

காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பில் எம்.ஹரிஷ் குமார் தயாரித்துள்ள மதம் படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுகய இயக்குநரான ரஜ்னி. இவர் இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் இயக்கிய சச்சின் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மதம் படத்தில் விஜய் ஷங்கர், ஸ்வாதிஷ்தா கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகின்றனர்.

இவர்களுடன், ஜான் செல்வாசிங், உதய் குமார், எல்ஷடாய் கிரேஸ், கருப்பையா ராதாகிருஷ்ணன், செல்வி, எஸ்.எம்.பிபி. தினகரன், ஜி.எம்.பாட்ஷா, ஜோதி குமார், வித்யா, விபிதா, இசைசெல்வி என ஏராளமான புதுமுகங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கலாபக்காதலன் படத்துக்கு இசையமைத்த நிரோ இப்படத்துக்கு இசையமைக்க, செந்தில்குமார்.கே ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பு – சி.சாந்தகுமார்,

கலை இயக்கம் – பாலாஜி,

மதம் படம் குறித்து இயக்குநர் என்ன சொல்கிறார்?

“பணத்திற்காக எதையும் செய்யும் கூலிப்படையிடம் ஒரு குடும்பம் மாட்டிக் கொள்கிறது.

அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் மதம் படத்தின் கதை.

இந்தப் படம் முழுக்க முழுக்க தூத்துக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் நடிக்க விருப்பமுள்ளவர்களை தூத்துக்குடியிலேயே தேர்வு செய்து, அவர்களுக்கு அங்கேயே நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளோம்.

20 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறிப்பாக 80 வயது மூதாட்டி ஒருவர் படம் முழுக்க வருகிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொழில்முறை நடிகர்களையே மிஞ்சுகிறவகையில் பிரம்மாதமாக நடித்திருக்கிறார்.

தெரிந்த முகங்கள் என்றால் திரையில் பார்க்கும்போது அவர்களது இமேஜே அவர்களுடைய கதாபாத்திரம் எந்தமாதிரியானது என்பதை காட்டிக்கொடுத்துவிடும்.  அவர்களுடைய கேரக்டர் என்ன என்பது தெரிந்துவிடும்.

புதுமுகங்கள் நடிப்பதால் அவர்களது கதாபாத்திரத்தை கணிக்க முடியாது என்பதால் அது எனக்கு பலம்.

மதம் படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சி என எதுவும் இல்லை. 100 சதவிகிதம் யதார்த்தமான படமாக உருவாக்கியிருக்கிறேன்.

மதம் படத்தை மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.” என்கிறார் ரஜ்னி.