லென்ஸ் – விமர்சனம்

lens

நவீன டெக்னாலஜியின் நன்மைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில், அதன் மறுபக்கத்தையும், அபாயத்தையும் சொல்லும் படம்!

முன்பின் தெரியாதவர்களுடன் சாட்டிங்கில் பொழுதைக்கழிப்பவர்களை ‘பொளேர்‘ என பிடறியில் அடிப்பதுபோல் ‘லென்ஸ்’ படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மற்றவர்களின் அந்தரங்கங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து இன்பம் காணுபவர்களுக்கு எச்சரிக்கைப் படமாகவும் இருக்கிறது லென்ஸ்.

சாட்டிங்கில் ஈடுபட்டு எதிர்முனை பெண்களின் பாலியல் உணர்வைத்தூண்டிவிட்டு, தானும் அதே உணர்வில் தூண்டப்பட்டு இன்பம் காணுவதை பொழுதுபோக்காகக் கொண்டவன், அதே சாட்டிங்கில் பழிதீர்க்கப்படுவதுதான் லென்ஸ் படத்தின் ஒருவரிக்கதை.

ஆனந்த் சாமி ஒரு அனாதை. வாய் பேச முடியாத அஸ்வதி லாலை திருமணம் செய்து கொள்கிறார்.

இவர்களின் அந்தரங்க விஷயங்களை பிளம்பர் ஒருவன் கேமரா மூலம் படம்பிடித்து, சேமித்து வைத்த பென் டிரைவ், ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்டு இன்பம் காணும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் கையில் தற்செயலாகக் கிடைக்கிறது.

அதில் உள்ள காட்சிகளை தான் ரசித்ததோடு, அதை இணையதளத்திலும் பதிவேற்றி விடுகிறான்!

இதனால் ஏற்பட்ட அவமானத்தினால் தற்கொலை செய்து கொள்கிறார் ஸ்வாதி லால்!

மீண்டும் அனாதையாகிவிட்ட ஆனந்த்சாமி, தன்னுடைய மனைவியின் சாவுக்கு காரணமானவனை தேடிக்கண்டுபிடித்து பழி வாங்குவதுதான் ‘லென்ஸ்’ படத்தின் மீதிகதை!

பழிவங்கும் கதைதான். ஆனால் வழக்கமான, தமிழ்சினிமாவில் பார்த்து சலித்த பழிவாங்கல் கதை இல்லை. இது வேற லெவல்.

இன்றைய விஞ்ஞான யுகத்தில், இணையதளம், வாட்ஸ் அப், ஸ்கைப், ஸ்பை கேமரா போன்ற விஷயங்களை தவறாக பயன்படுத்தினால் எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை பதறவைக்கும் அளவுக்கு லென்ஸ் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் ஜெயபிரகாஷ்.

மட்டுமின்றி, அரவிந்த் என்ற நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

லேப்டாப் முன் அமர்ந்து கொண்டு, ஆடையைக் களைந்துவிட்டு கிளுகிளுப்பாக சாட்டிங் செய்வது, ‘ஹேக்கர்’ யோகனிடம் மாட்டிக்கொண்டு தவிப்பது என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

‘ஹேக்கர்’ யோகனாக மொட்டைத் தலையுடன் வரும் ஆனந்த்சாமியின் கதாபாத்திரம் முதலில்அச்சுறுத்துகிறது.

ப்ளாஷ்பேக்கில் விரியும் அவரது கடந்தகாலம் அச்சத்தை அகற்றிவிட்டு அவர் மீது அனுதாபத்தை கொட்ட வைக்கிறது.

யோகனின் மனைவி, ஏஞ்சலாக நடித்திருக்கும் புதுமுகம் அஷ்வதி லால், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான அவர், தன்னுடைய அந்தரங்கம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அறிந்து துயரத்தில் துவண்டுபோகும் காட்சிகளில் உருக வைக்கிறார்.

முக்கியமாக, தான் சொல்ல நினைப்பதை அட்டைகளில் எழுதிக் காட்டி விட்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சி, கல் மனமும் கரையும்.

லென்ஸ் படத்தின் முதல் பாதியில் காட்சிகள் முழுக்க முழுக்க இரண்டு அறைக்குளேயே நடக்கின்றன.

ஆனாலும், ஒரு கணமும் அலுப்பூட்டவில்லை. மாறாக, பார்வையை வேறெங்கும் திருப்பத் தோன்றாத அளவுக்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

இரண்டு அறைகளில் நடக்கும் காட்சிகளில் உண்மைத்தன்மையுடன் இருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு.

ஜி.வி.பிரகாஷின் இசையின் விசேஷமில்லை.

லென்ஸ் படம் அல்ல, ‘ஆன்லைன் செக்ஸ் அடிமை’ களுக்கு பாடம்.