குரங்கு பொம்மை – விமர்சனம்

vidharth-delna-davis

பன்றி, குட்டிகளைப்போடுவதுபோல் வாரம் வாரம் கணக்கில்லாமல் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் பல படங்கள், திரைத்துறைக்கும் சமூகத்துக்கும் கேடு விளைவிப்பவையாகவே இருக்கின்றன.

அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து முடிப்பதற்குள் சலிப்பும், கடுப்புமே மிஞ்சம்.

இதுபோன்ற தொடர் அனுபவத்தையும்… அலுப்பையும் சந்தித்துவரும் ரசிகனுக்கு ‘குரங்கு பொம்மை’ புதிய அனுபவத்தைக் கொடுப்பது மட்டுமல்ல, ஆரம்பக்காட்சியிலேயே அட என நிமிர்ந்து உட்காரவும் வைப்பது நிச்சயம்.

கூடா நட்பு கேடு தரும் என்ற ஒற்றைவரிதான் குரங்குபொம்மை படம் சொல்லும் செய்தி.

போதனையின் சாயல் தென்பட்டுவிடாத கவனத்துடன், சுவராஸ்யமான திரைக்கதை உத்தியின் மூலம், குரங்கு பொம்மையை அனைத்து தரப்பினரும் ஆ என வாயைப் பிளந்து ரசிக்கும்படியான படமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நித்திலன். இவர் யாரிடம் தொழில்கற்றவர்? குறும்படம் தந்த கொடை.

இத்தனைக்கும் குரங்கு பொம்மை, அடுத்தது என்ன என்று நகம் கடிக்க வைக்கும் த்ரில்லர் வகைப்படம்தான். மிரட்டும் இசை, குதிக்கும் படத்தொகுப்பு என த்ரில்லர் படங்களுக்கு உரிய இலக்கணங்களை கவனமுடன் தவிர்த்துவிட்டு இயல்பாய் கதைச்சொல்லி கவனத்தை ஈர்த்திருக்கிறார் நித்திலன்.

தஞ்சாவூரில் மரக்கடை நடத்திக் கொண்டே சிலை கடத்தல் தொழிலையும் செய்பவர் தேனப்பன்.

ஊரே அவரை கரித்துக் கொட்டினாலும் தன் உயிர்காத்தவன் என்ற நன்றியுணர்ச்சியில் தேனப்பனிடம் வேலை பார்க்கிறார் பாரதிராஜா.

அதனால் அவரது மகன் விதார்த்தின் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்ட பிறகும் கூட, தேனப்பனின் நட்பை பெரிதென நினைக்கிறார்.

பாரதிராஜா தன் மீது வைத்த நம்பிக்கையை, ஐந்து கோடி மதிப்புள்ள கடத்தல் சிலையை கைமாற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்கிறார் தேனப்பன்.

குரங்கு பொம்மை படம் போட்ட ஒரு பைக்குள் சிலையை வைத்து பாரதிராஜாவிடம் கொடுத்தனுப்புகிறார்.

பையின் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமலே தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குப் பயணமாகும் பாரதிராஜா ஒரு கட்டத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விடுகிறார்.

சென்னையில் கால் டிரைவராக வேலை பார்க்கும் விதார்த்தின் கைக்கு பாரதிராஜாவின் செல்போன் கிடைக்கிறது. அப்பாவை தேடியலைகிறார் மகன் விதார்த்.

இன்னொரு பக்கம், ஐந்து கோடி சிலையோடு காணாமல்போன பாரதிராஜாவைத் தேடி சென்னைக்கு வருகிறார் தேனப்பன்.

இதற்கிடையில், பாரதிராஜா கொண்டு வந்த குரங்கு பொம்மை போட்ட பை, விதார்த்தின் கைக்கு கிடைக்கிறது.

அந்தப் பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அதை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கவும், ஃபேஸ்புக்கில் போட்டும் உரியவரிடம் சேர்க்க முயற்சி செய்கிறார்.

அவரது முயற்சிகள் பலனளிக்காமல்போய் விதார்த்திடமே இருக்கும் அந்த பைக்குள் அதை தவறவிட்ட கிருஷ்ணமூர்த்தியின் லட்சக்கணக்கான பணம் இருப்பதுபோல் நம்ப வைக்கின்றன ஆரம்பக்காட்சிகள்.

பைக்குள் இருப்பது பணம் இல்லை, கடத்தி வரப்பட்டு சிலைதான் என்று எண்ண வைக்கின்றன அடுத்தடுத்த நிகழ்வுகள்.

உண்மையில் அந்த பைக்குள் என்ன இருக்கிறது என்று தெரிய வரும்போது அதிர்ச்சியில் உறைவது விதார்த் மட்டுமல்ல படம் பார்ப்பவர்களும்தான்.

இப்படத்தின் கதாநாயகன் விதார்த் என்றாலும், கதையின் மையப்புள்ளி பாரதிராஜாதான்.

தன் அப்பாவித்தனமான நடிப்பால் கலங்க வைத்துவிடுகிறார் கரகர குரலோன். அதிலும், அந்த ‘கடைசி நிமிடத்தில்’ குமரவேலிடம் தன்னுடைய இறுதி ஆசையை வெளிப்படுத்தி இறைஞ்சுகிறபோது, இயக்குநர் இமயம் நடிப்பின் இமயமாக உருமாறி உயர்ந்து நிற்கிறது.

ராதாமோகனின் படங்களில் காமெடியனாக பார்த்து பழக்கப்பட்ட குமரவேலுக்கு இதில் வேறுமுகம். தமிழ்சினிமா வில்லன்களுக்கான முகவரியையே மாற்றியிருக்கிறார்.

இவருக்குக் கொடுத்த ‘ஆயுள் தண்டனை’யின் மூலம் வில்லன் கேரக்டருக்கான முடிவை வேறு மாதிரி சிந்தித்திருக்கிறார் இயக்குநர்.

விதார்த் தன் பெயரை யதார்த் என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம். ஒரு கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதன் அளவை மீறாத இயல்பான நடிப்பை வெளிப்பத்தி இருக்கிறார். குரங்கு பொம்மை விதார்த்துக்கு இன்னொரு மைனாவாக அமையக் கூடும்.

கதாநாயகிக்கு அதிக வேலையில்லாத கதை. கொடுத்த வேலையை நிறைவாய் செய்திருக்கிறார் டெல்னா டேவிஸ்.

பட அதிபர் தேனப்பனுக்கு புதிய கதவைத் திறந்துவிட்டிருக்கிறது இந்தப்படம். இனி வரும் படங்களில் இவரை அடிக்கடி பார்க்கலாம்.

அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை கவர்ந்த அளவுக்கு பாடலிசை கவரவில்லை.

உதயகுமாரின் ஒளிப்பதிவு, அபினவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பு, மடோன் அஸ்வினின் வசனங்கள் குரங்கு பொம்மையின் வெற்றிக்கு உதவியிருக்கின்றன.

– ஜெ.பிஸ்மி