கொஞ்சம் கொஞ்சம் – விமர்சனம்

konjam-konjam-audio-launch-stills-014

கொஞ்சம் கொஞ்சம் படத்தின் முதல் ஆச்சர்யமே… இந்தப் படத்தின் இயக்குநர் உதயசங்கரன், பிரபல மலையாளப்பட இயக்குநரான லோகித தாஸின் சிஷ்யர் என்பதுதான்!

லோகித தாஸின் சாயல் கொஞ்சம் கொஞ்சம் கூட இல்லாமல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

குருநாதரின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், இன்றைய ரசிகர்களின் பல்ஸ் தெரியாமலும் படத்தை இயக்கியிருக்கிறார்.

கதாநாயகன் கோகுல் கிருஷ்ணா ஏழையானாலும், அதிபுத்திசாலியான இளைஞன்.

அம்மா, அக்காவை காப்பாற்றுவதற்காக கேரளா போய் அப்புக்குட்டியின் பழைய இரும்புக்கடையில் வேலை செய்கிறார் கோகுல்.

அங்கிருக்கும் தமிழ்க்குடும்பத்தை சேர்ந்த பிரியா மோகனுக்கும் கோகுலுக்கும் காதல் அரும்புகிறது.

இந்நிலையில், சொந்த ஊருக்கு வரும் கோகுல், அவரது அக்காவுக்கு பழைய செல்ஃபோன் ஒன்றை வாங்கி கொடுக்கிறார்.

செல்ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பாட்டு கேட்கும்போது, செல்ஃபோன் வெடித்து அவரது அக்காவின் செவித்திறன் பறிப்போகிறது.

அடுத்த சில நாட்களில், எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தில் அவரது தாயும் இறக்கிறார்.

அக்காவை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு வருகிறார் கோகுல்!

தன் அக்காவுக்கு மீண்டும் காது கேட்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் கேட்கிறார் டாக்டர்.

அதற்காக கோகுல் எடுக்கும் முயற்சிகளும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும்தான் ‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தின் கதை.

காதல், குடும்ப பாசம், சென்ட்டிமென்ட் கலவையாக இந்தப்படத்தைக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர்.

புதுமையான விஷயங்களோ, சுவாரஸ்யமான சம்பவங்களோ இருந்திருந்தால் படத்தை கொஞ்சம் கொஞ்சம் ரசித்திருக்கலாம்.

அந்த வாய்ப்பைக் கூட ரசிகர்களுக்குத்தராமல் ஏமாற்றிவிட்டார் இயக்குநர்.

30 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்தால் கொஞ்சம் கொஞ்சம் படம் நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும்