கேவலமாக இருக்கிறான் கொடி வீரன்….! – முத்தையாவை திரையுலகமே புறக்கணிக்க வேண்டும்…!

kodiveeran-stills-006

கொம்பன், மருது போன்ற படங்களில் தன்னுடைய சாதிவெறியைக்காட்டிய முத்தையாவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் கொடிவீரன்.

சசிகுமார் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்திலும் முத்தையாவின் சாதிவெறி வெளிப்பட்டிருக்கிறது.

கொடிவீரன் படம் பலரது கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கும்நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான வன்னியரசு கொடிவீரன் படம் குறித்த தன் பார்வையை சமூகஊடகத்தில் பகிர்ந்திருக்கிறார்…

“ஜோக்கர், அறம், மாவீரன் கிட்டு, காக்கா முட்டை, விழித்திரு, கத்துக்குட்டி, சாட்டை, அப்பா போன்ற நல்ல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிற சூழலில் தான் ‘கொடிவீரன்’ போன்ற அருவருப்பான படம் வந்திருக்கிறது.

நாடோடிகள் போன்ற நம்பிக்கை ஊட்டுகிற படங்களைத் தந்த இயக்குநர் சசிக்குமாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.

முந்தைய கொம்பன், இப்போதைய கொடிவீரன் உள்ளிட்ட சமீபகால படங்கள் எல்லாமே மிக மோசமான படங்களாகவே வந்துள்ளன. கதை கேட்டுத்தான் நடிக்கிறாரா அல்லது நட்புக்காக ஒப்பந்தம் போடுகிறாரா என்று தெரியவில்லை.

மிக நம்பிக்கையோடு திரை உலகத்துக்கு வந்த இயக்குநர் சசிக்குமார் இப்போது பரிதாபத்துக்குரியவராக மாறி விட்டார். அதைத்தான் இந்த கொடிவீரன் சொல்லுகிறான்.

கொடிவீரன் முத்தையா போன்ற இயக்குநர்களை சசி குமார் மட்டுமல்ல, இந்த திரையுலகமே புறக்கணிக்க வேண்டும்.

70 களில் வர வேண்டிய படத்தை 2017 லில் எடுக்கிறார் என்றால் இந்த இயக்குநர் எவ்வளவு பின்னோக்கி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

அவ்வளவு கேவலமாக இருக்கிறான் கொடி வீரன்.

சரிங்க படத்தை பற்றிய விமர்சனம்தான் என்ன என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. ஆனால் கதைன்னு ஒன்னு இருந்தா தானே விமர்சனம் பண்ண முடியும்.?

விமர்சனத்துக்கே தகுதியில்லாத படம் இந்த கொடிவீரன்!

சசிகுமார் மீது இந்த இயக்குனருக்கு என்ன கோபமோ?
இயக்குநர் பாலா போல (தாரை தப்பட்டை) பழிவாங்கி விட்டாரோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

– வன்னி அரசு