கதாநாயகன் – விமர்சனம்

kathanayagan2

வெண்ணிலா கபடிக்குழுவுக்குப் பிறகு படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளில் நடித்தும் விஷ்ணுவிஷாலுக்கு வசப்படாத வணிகவெற்றி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் காமெடிப் படத்தில் கிடைத்தது.

அதே வெற்றி மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதே காமெடியை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

காமெடிப்படம் என்பதில் காட்டிய கவனத்தைக் கதையிலும் கொஞ்சம் கூடுதலாகக் காட்டியிருந்தால் வெள்ளைக்காரனை மிஞ்சியிருப்பான் கதாநாயகன்.

வருமானவரித்துறை அலுவலகத்தில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தாலும் விஷ்ணு விஷால் கோழை நம்பர் ஒன்.

சாலையைக் கடப்பதற்கே பயந்து நடுங்கும் அவர், பக்கத்துவீட்டுப்பெண் என்று தெரியாமலே கேத்ரினைப் பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.

சில பல காட்சிகளுக்குப் பிறகு விஷ்ணுவிஷாலின் காதலை கேத்ரின் ஓகே பண்ண, அவரைப் பொண்ணு கேட்டுப் போகிறது விஷ்ணுவின் குடும்பம்.

விஷ்ணு விஷாலின் ‘வீரம்’ பற்றி ஏற்கனவே அறிந்திருக்கும்  கேத்ரின் தெரசாவின் அப்பா கே.நட்ராஜ், ‘எம் பொண்ண ஒரு வீரனுக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்… பிரச்சனையைக் கண்டு பயந்து ஓடுற உனக்குக் கொடுக்க மாட்டேன்’ என்று அவமானப்படுத்தி அனுப்ப…

தொடை நடுங்கியான விஷ்ணு விஷால், தன்னுடைய காதலுக்காக எப்படி தொடையைத் தட்டி வீரனாகிறார் என்பதுதான் கதாநாயகன் படத்தின் கதை.

சினிமா சம்மந்தப்பட்ட அல்லது அதிரடி ஆக்ஷன் படத்துக்கு வைக்க வேண்டிய கதாநாயகன் என்ற தலைப்பை காமெடி படத்துக்கு எந்த நம்பிக்கையில் வைத்தார்கள் என்றே தெரியவில்லை.

தலைப்பு கதைக்குப் பொருந்தவில்லை என்றாலும், விஷ்ணுவிஷாலுக்கு மிகச்சரியாய் பொருந்தியிருக்கிறது. அப்பாவித்தனம், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என ஒரு கதாநாயகனுக்குத் தேவையான அத்தனை ரசங்களையும் வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

தமிழ்சினிமாவின் இலக்கணத்தை மீறாத கதாநாயகியாக… கேத்ரின்.

விஷ்ணு உடனான காதலில் அழுத்தம் இல்லை என்பதாலோ என்னவோ… கேத்ரினின் கதாபாத்திரமும் மனசுக்குள் வர மறுக்கிறது.

பாடல்காட்சிகளில் அரைகுறை ஆடையணிந்து பார்வையாளர்களை சூடாக்குகிறார்.

ஏறக்குறைய விஷ்ணுவிஷாலுக்கு இணையான வேடம் சூரிக்கு.

தாசில்தார் ஆபிஸ் பியூனாக அறிமுகமாகும் சூரி, அதன் பிறகு ஆபிஸ் பக்கமே போகாமல் விஷ்ணுவிஷால் காதலுக்கு உதவிசெய்கிறார்.

விஷ்ணு – சூரி காம்பினேஷனில் புஷ்பா புருஷனை எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றம்தான்.

காமெடியில் தெறிக்கவிட்டிருக்க வேண்டிய பல காட்சிகளில் கெமிஸ்ட்ரி வொர்க்அவுட்டாகாமல்போனதுதான் சோகம்.

சூரி தவறவிட்ட கேட்ச்களை ஆனந்தராஜ் கப்பென்று பிடித்திருப்பது ஆச்சர்யம் மட்டுமல்ல, ஆறுதலும்.

துபாய் ஷேக் கெட்டப்பில் ஆனந்தராஜின் அலப்பரைகளுக்கு தியேட்டரில் செம க்ளாப்ஸ்.

வில்லனாக பார்த்து பழக்கப்பட்ட அருள்தாஸையும் இதில் காமெடி பீஸாக்கி சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட். அதிலும், ‘ஒன் நெனப்பு ஒன் நெனப்பு பேபி…’ ஆல் டைம் ஃபேவரைட் பட்டியலில் இடம்பிடிக்கும்.

பாடல்களில் பாஸ் மார்க் வாங்கும் ஷான்ரோல்டன் பின்னணி இசையில் பார்டரை மட்டுமே தாண்டியிருக்கிறார். ஆனாலும் கமர்ஷியல் படத்துக்கும் இசையமைக்கும் டாஸ்க்கில் வெற்றியடைந்திருக்கிறார்.

லட்சுமணின் ஒளிப்பதிவும், கோபி ஆனந்தின் கலைஇயக்கமும் கதாநாயகனை கலர்ஃபுல்லாக்கியிருக்கிறது.

கதை முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை… கலகலவென்று ஒரு காமெடி படம் எடுத்துக்கொடுக்க வேண்டும். அது கமர்ஷியலாக வெற்றியடைய வேண்டும் என்ற தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பை மிகச்சரியாக பூர்த்தி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் முருகானந்தம்.

அடுத்தப் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொண்டால் மணிவண்ணனின் மறுபதிப்பாக திரையுலகில் வலம் வரலாம்.

– ஜெ.பிஸ்மி