கியாவோஸ் விதியை பயன்படுத்தி எழுதப்பட்ட திரைக்கதை…

karthikeyanum-kaanamal-pona-kadhaliyum-4

இந்தியராணுவத்தில் சுமார் 6 வருடங்கள் பணியாற்றிவிட்டு, திரைப்பட இயக்கத்தில் டிப்ளமோ படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி ஃபிலிம்களையும் இயக்கிய எம்.ஏ. பாலா என்பவர் இயக்குகிற படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்கும் என்கிற நியூட்டனின் விதி மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூடதொடர்பு இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி.

தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் எம்.ஏ.பாலா.

பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை.

இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை இன்னும் பலப்படுத்துகிறது.

இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது அத்தனை சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர்.

தீபக், பிளாக்பாண்டி, ஜெய்சிந்த், ஹரிதா, மலர், கொட்டாச்சி, மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு ராஜ் பரத் இசையமைக்கிறார். பாடல்கள் வடிவரசு.

டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்கிறார்.

தயாரிப்பு – மாரியப்பன் ராஜகோபால். இணை தயாரிப்பு – கே. திலகர்.