விஷால் மீது கந்துவட்டி புகார்… – போலீஸுக்குப் போகிறார் பிரபல இயக்குநர்

vishal-stills-002

சில வருடங்களுக்கு முன் பிசியான ஹீரோவாக வலம் வந்த விமல், கடந்த சில வருடங்களாக ரேசில் பின் தங்கியிருக்கிறார்.

அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல்போனதால் மார்க்கெட் இழந்தார்.

பட வாய்ப்புகள் மீண்டும் தன்னைத் தேடி வரும் என்ற நம்பிக்கையோடு சில வருடங்கள் காத்திருந்தார்.

அவரது நம்பிக்கை பொய்த்துப்போனதால் வேறுவழியில்லாமல் சொந்தப்படம் எடுக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார் விமல்.

திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உட்பட சில படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்தில் தற்போது மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

மன்னர் வகையறா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட்புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இயக்குநர் பூபதி பாண்டியன் தனக்கு தர வேண்டிய 7 லட்ச ரூபாய்க்கு வட்டியுடன் 25 லட்சம் தர வேண்டும். அதைக் கொடுக்காமல் மன்னர் வகையறா படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று பிரச்சனையைக் கிளப்பி இருக்கிறார் விஷால்.

சில வருடங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் பட்டத்து யானை என்ற படத்தில் நடித்தார் விஷால்.

பட்டத்து யானை படத்தில் நடித்தபோது அப்படத்தின் மீது இருந்த நம்பிக்கையினாலோ என்னவோ, அடுத்தப் படத்தை தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி கம்பெனிக்கு இயக்க வேண்டும் என்று ஒப்பந்தம்போட்டு பூபதிபாண்டியனுக்கு 37 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் விஷால்.

அவருடைய எதிர்பார்ப்புக்கு மாறாக பட்டத்து யானை படம் அட்டர்ப்ளாப்பானது.

எனவே பூபதி பாண்டியனை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தை கைவிட்ட விஷால், அவரிடம் கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்டிருக்கிறார்.

பூபதிபாண்டியனோ, பல வருடங்கள் விஷாலை இழுத்தடித்து கடைசியில் 30 லட்சத்தை மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளார்.

பாக்கி 7 லட்சத்தை இதுவரை கொடுக்காமலே இழுத்தடித்து வந்திருக்கிறார்.

மன்னர் வகையறா படத்தை இயக்குவதற்கு பெரிய சம்பளம் வாங்கிய பிறகும் கூட தனக்குக் கொடுக்க வேண்டிய 7 லட்சத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றதும் கடுப்பாகிவிட்டார் விஷால்.

எனவேதான், பூபதிபாண்டியன் தனுக்கு கொடுக்க வேண்டிய 7 லட்சத்தை வட்டியுடன் 25 லட்சமாகக் கேட்டு இயக்குநர்கள் சங்கத்தில் புகாராக கொடுத்திருக்கிறார் விஷால்.

7 லட்சத்துக்கு எவ்வளவுதான் வட்டிபோட்டாலும் 25 லட்சம் வராது… விஷால் 25 கேட்பது கந்துவட்டியைவிட அதிகமான வட்டியாக இருக்கிறது. எனவே அவருடைய புகாரை அடிப்படையாக வைத்து, விஷால் மீது கந்துவட்டி புகார் கொடுக்கலாமா என யோசித்து வருகிறாராம் இயக்குநர் பூபதிபாண்டியன்.