கமலை ஏக வசனத்தில் திட்டிய அமைச்சர்…. – வெட்கமில்லாமல் வேடிக்கைப் பார்க்கும் திரையுலகம்…

kamal

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக நேற்யை முன்தினம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.

அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமின்றி வேறு பல விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்கள் கமல்ஹாசனிடம் கேள்விகளை எழுப்பினார்கள்.

அவற்றுக்கு பதில் அளித்து வந்த கமல்ஹாசனிடம், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் கேட்கப்பட்டது.

அப்போது பேசிய கமல், “தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்பு சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை” என்று தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதோடு, “ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் இருந்தால் பார்த்து சொல்லலாம். இங்கு ரோடே பள்ளமாக இருக்கிறது. எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கிறது.” என்றும் கமல் கருத்து தெரிவித்தார்.

கமல் தெரிவித்த கருத்து குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கருத்து கேட்டனர் செய்தியாளர்கள்.

அதற்கு அன்பழகன் சொன்ன பதிலில் கொஞ்சம்கூட நாகரிகமும் இல்லை… நாவடக்கமும் இல்லை.

“கமல்ஹாசன் எல்லாம் ஒரு ஆளேகிடையாது… அவன் பேசுறதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..” என்று கமல்ஹாசனை அவன் இவன் என ஏகவசனத்தில்… ஒருமையில் குறிப்பிட்டு பதில் சொல்லி இருக்கிறார் அமைச்சர் அன்பழகன்.

அமைச்சரின் அதுவும் உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்ன அநாகரிகமான பதில் தந்த அதிர்ச்சியைவிட, இதற்கு சின்ன எதிர்ப்பு கூட தெரிவிக்காத சினிமாக்காரர்களின் கள்ள மௌனம்தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர், செயலாளர் விஷால் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகினரும் அமைச்சர் அன்பழகனின் செயலுக்கு எதிர்ப்பு வேண்டாம் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.

இந்த செய்தியை எழுதும் நிமிடம் வரை இழவு விழுந்த வீட்டைப்போல் அமைதியாகவே இருக்கிறது திரைப்படத்துறை.

நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகப்பிரமுர்கள் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்கள்.

கக்கூஸ் போவதைத் தவிர மற்ற அனைத்தையும் ட்வீட் பண்ணுகிறார்கள்.

அறிக்கை மூலம்தான் கண்டிக்க திராணியில்லை… 140 எழுத்துக்களில் ஒரு ட்வீட் மூலம் கூட கமலுக்கு ஏற்பட்ட அவமானத்தை தட்டிக் கேட்டிருக்கலாம். அதற்குக் கூட திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் கோடிகளை அள்ளும் அட்டைக்கத்திகள்.

அவ்வப்போது ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்க்கும் ரஜினி கூட தன்னுடைய நண்பருக்கு நேர்ந்த அவமரியாதையை கண்டுகொள்ளவில்லை.

தமிழ்த்திரையுலகுக்கு பேரையும் புகழையும் ஈட்டித்தந்த….

பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயர்ந்த உயர்ந்த விருதுகளைப் பெற்ற…

உன்னதமான ஒரு கலைஞனான கமல்ஹாசனை எகவசனத்தில் திட்டிய ஒரு அமைச்சரை

தட்டிக்கேட்க துப்பில்லாத கோழைகளின் கூடாரமாகிவிட்டதே கோடம்பாக்கம்.

இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?

-ஜெ.பிஸ்மி