வரிவிலக்கு அளிக்க லஞ்சம்… சித்தார்த்தை தொடர்ந்து வாயைத்திறந்த கமல்….

kamal_tamilscreen

 

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு மேல் கூடுதலாக தமிழக அரசு விதித்துள்ள 30 சதவிகித கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி, ஜூலை 3 முதல் தமிழகம் முழுக்க சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வருகின்றனர்.

ஆனாலும் கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு தயாராகவில்லை.

காரணம்… ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோல்…. கேளிக்கை வரியை மையப்படுத்தி நடக்கும் லஞ்சமும்… ஊழலும்தான்.

யு சான்றிதழ் பெற்ற படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க பெரும் தொகையை லஞ்சமாக வாங்கப்படுகிறது.

கடந்த வாரம் வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களே படத்திற்கு 4.50 லட்சம், வனமகன் படத்திற்கு 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு 60 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்டுதான் கேளிக்கை வரி விலக்கு அளித்தார் வணிகவரித்துறை அமைச்சர் என்று நடிகர் மன்சூரலிகான் ஒரு படவிழாவில் பகிரங்கமாக குற்றம்சாட்டுமளவுக்கு நாறிக்கிடக்கிறது இந்த விவகாரம்.

ஆனால் திரைப்படத்துறையைச் சேர்ந்த அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் – விஷால் உட்பட – இது பற்றி வாயைத் திறக்கவும், வெளிப்படையாகப் பேசவும், கண்டிக்கவும் பயப்படுகிறார்கள்.

இந்நிலையில், வரிவிலக்கு லஞ்சம் பற்றி துணிச்சலாக தைரியமாக தன்னுடைய கருத்தை முன் வைத்தார் சித்தார்த்.

“திரைப்படங்களுக்கு யு சான்றிதழ் வழங்குவதிலும், வரிச் சலுகை வழங்குவதிலும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் நடந்து வருகிறது.”

என்று வரிவிலக்கு வழங்குவதில் கோடிகோடியாய் வணிகவரித்துறை அமைச்சகம் லஞ்சம் வாங்குவதை தைரியமாக சாடினார்.

சித்தார்த் இது பற்றி தைரியமாகப் பேசிய பிறகும் கூட அட்டைகத்திகளுக்கு வீரம் வரவில்லை.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ரோஷம் வந்திருக்கிறது.

“தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன்.

அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.

தமிழகம் ஊழலில் பீகாரையே மிஞ்சிவிட்டது.

தமிழகத்தில் நிலவும் ஊழலில் திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக் கொண்டுள்ளன.

இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன்” என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற ஹீரோக்கள் இன்னும் வேடிக்கை மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

-ஜெ.பிஸ்மி