குடும்பம் நடத்த வேண்டும், ஆபீஸ் நடத்த வேண்டும், எனக்கும் பணத் தேவை இருக்கிறது… – பிக் பாஸ் கமல் ஓப்பன் டாக்

kamal_tamilscreen

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கி வருகிறார்  நடிகர் கமல்ஹாசன்.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான நாள் முதலே, பிக்பாஸ் தமிழ் கலாசாரத்தை சீரழிக்கிறது என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.

அது மட்டுமல்ல, உயர்சாதி மனப்பான்மை கொண்ட போட்டியாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் ஒரு சாரரை காயப்படுத்துகிறது என்றும் இதை கமல் தட்டிக்கேட்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிப்பதோடு, கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று ஒரு அமைப்பு போலீசில் புகார் அளித்தது.

பிக் பாஸ் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்தபோது வாயை மூடிக்கொண்டிருந்த கமல், குறிப்பிட்ட அமைப்பு தனக்கு எதிராக புகார் கொடுத்ததும் ஊடகங்களை அழைத்து தன்னிலை விளக்கம் அளித்தார்…

“என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இல்லை.
எனக்கு சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தையும், நீதியையும் நம்புகிறேன்.

வேலை குறைவாக இருப்பவர்கள் இதுபோன்று ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஆராய்ச்சி மணியை யார் வேண்டுமானாலும் அடிக்க முடியாது; கன்றை இழந்த பசுதான் அடிக்க முடியும்.

தேசத்தின் கலாச்சாரம் பற்றி பேசுகிறவர்கள் முதலில் தேசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தசாவதாரம் பிடித்தது என்றவர்கள்தான் இப்போது என்னை எதிர்க்கிறார்கள்.

நான் கலாச்சாரத்தை சீரழிக்கிறேன் என்றுஎன்னை கைது செய்வதாக இருந்தால், சட்டம் என் கையில் படம் வந்தபோதே கைது செய்திருக்க வேண்டும்.  அப்போதே முத்தக் காட்சியில் நடித்து விட்டேன்.

நான் விளம்பரத்தில் நடிப்பதும், டி.வி நிகழ்ச்சி நடத்துவதும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல.

நானும் குடும்பம் நடத்த வேண்டும், ஆபீஸ் நடத்த வேண்டும். எனக்கும் பணத் தேவை இருக்கிறது.

ஜி.எஸ்.டி வரி வந்தபோது அதை நான் எதிர்த்தேன். குறைக்க வலியுறுத்தினேன். சிறிது குறைத்தார்கள், நன்றி சொன்னேன் இன்னும் குறைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.

நான் கட்டபொம்மனும் அல்ல; இந்திய அரசு கிழக்கிந்திய கம்பெனியும் அல்ல. இது என்னுடைய அரசு. நான் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசு. அந்த உரிமையில் மக்களுக்கு எதிரான விஷயங்களை கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது.

மாநில அரசு கேளிக்கை வரி விதித்ததையும் எதிர்த்தேன்.

சினிமாவுக்கு எந்த வரியும் விதிக்க கூடாது.

அதேபோல மேஜைக்கு அடியில் நடக்கும் எல்லா பேரங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்பு சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் இருந்தால் பார்த்து சொல்லலாம். ரோடே பள்ளமாக இருக்கிறது. எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கிறது.”