களவு தொழிற்சாலை – விமர்சனம்

kathir-kushi-combo-1

சிலை கடத்தல் பற்றிய படம். அது குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் டி.கிருஷ்ணசாமி.

சிலை கடத்தல் பற்றிய அறிவு மட்டுமல்ல, திரைப்பட அறிவும் கூட இயக்குநருக்கு இல்லை என்பதுதான் கொடுமை.

இவர் ஷங்கரின் உதவியாளர் என்று சொல்வதுதான் எல்லாவற்றையும்விட பேரதிர்ச்சி. இதன் மூலம் ஷங்கருக்கு இருக்கும் நல்லபெயரையும் நாசம் பண்ணியிருக்கிறார்.

வெளுத்துக்கட்டு படத்தில் நடித்த கதிர்தான் கதாநாயகன்.

 

கோயில்களில் உள்ள சின்னச்சின்ன கருங்கல் சிலைகளை திருடுவதுதான் கதிருடைய தொழில்.

விலைமதிக்கமுடியாத சிலைகளை திட்டம் போட்டு திருடி, அவற்றை வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்கும் கும்பலைச் சேர்ந்தவன் வம்சி கிருஷ்ணா.

கும்பகோணம் அருகில் உள்ள கோயில் ஒன்றில் இருக்கும் மரகத லிங்கத்தை கொள்ளையடிக்க கும்பகோணத்துக்கு வரும் வம்சி கிருஷ்ணா, உதவிக்கு கதிரை அழைப்பதோடு, அவன் மூலமாகவே மரகத லிங்கத்தை கடத்த திட்டமிடுகிறான்.

மரகத லிங்கத்தை திருடித் தந்தால் உன் திருமணத்துக்கு தேவையான பணத்தை தருவதாக வம்சி காட்டிய ஆசை வார்த்தைகளைக் கேட்டு சிலை கடத்தலுக்கு சம்மதிக்கிறான் கதிர்.

வம்சியின் அறிவுரைப்படி சிலையை எடுத்து வம்சியிடம் கொடுத்துவிட்டு, தனது திருமணத்திற்கான ஏற்பாட்டில் இறங்கியநிலையில், போலீஸ் அதிகாரியான களஞ்சியம் கதிரை கைது செய்கிறார்.

கதிரிடம் நடந்த புலன்விசாரணையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆக்ஷனில் இறங்குகிறார் களஞ்சியம். வம்சி கிருஷ்ணா போலீசில் சிக்கினாரா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் துவக்கத்தில் மரகதலிங்கத்தின் வரலாறு பற்றி கொடுக்கும் பில்ட்அப் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்பார்ப்பு வற்றிப்போய், எப்படா படம் முடியும் என்று ஏங்க வைக்கும் அளவுக்கு பொறுமையை சோதிக்க வைக்கிறது திரைக்கதை.

களவு தொழிற்சாலை – காசுக்குப் பிடித்த கேடு.