களத்தூர் கிராமம் – விமர்சனம்

kalathurgramam-working-stills-37

 

மிகசமீபத்தில் வெளியான திரைப்படங்களில் கவனத்தை ஈர்த்த படம் களத்தூர் கிராமம்.

90களின் துவக்கத்தில் சின்னத்தாயி என்ற அற்புதமான திரைப்படத்தை இயக்கிய (அமரர்) கணேஷ்ராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய சரண் அத்வைதன் இயக்கியுள்ள படம். கணேஷ்ராஜைப்போலவே மிக நுணுக்கமான பார்வையுடன் களத்தூர் கிராமம் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

திருச்சி ராம்ஜி நகரைப்போல் கற்பனையில் சிருஷ்டிக்கப்பட்ட கிராமம்தான் களத்தூர் கிராமம்.

தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம், போலீஸ் ரெக்கார்டில் களவாணிகளிள் கிராமம்.

களவுத்தொழிலையே குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவர் கருவத்திருக்கை(கிஷோர்).

நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டவர். அவரது உயிர்நண்பனான வீரண்ணாவோ (சுலில் குமார்) சபல பேர்வழி..

உள்ளூரில் பெண் கிடைக்காத வீரண்ணாவுக்கு கருவத்திருக்கையின் உத்தரவாதத்தினால் பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு குடும்பம் பெண் கொடுக்க முன்வருகிறது.

நிச்சயதார்த்தத்துக்கு சொன்ன நேரத்தில் கருவத்திருக்கை வரமுடியாமல் போக, நண்பர்கள் இருவருக்கும் பகை ஏற்பட காரணமாகிறது.

இதற்கிடையில் ஜெயிலுக்கு செல்லும் கருவத்திருக்கை தன் மனைவி யக்னாவை வீரண்ணாவிடம் ஒப்படைத்து செல்கிறார்.

வீரண்ணாவோ யக்னாவை தன்னுடைய மனைவி என்று ஊராரை நம்ப வைக்கிறார்.

இதனால் ஏற்பட்ட மோதலில் வீரண்ணாவை கொல்கிறார் கருவத்திருக்கை.

அதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கின்றார் கருவத்திருக்கை.

அவர்களோ கருவத்திருக்கை மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பதுடன், சிறுவனை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே வெளியேறுகின்றனர்.

சிறுவயதில் பிரிந்த கருவத்திருக்கையின் மகன் என்ன ஆனான் என்பது மீதிக்கதை.

இரண்டுவிதமான தோற்றங்களில் கருவத்திருக்கை என்ற கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கிஷோர். மொத்தக்கதையையும் தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் கிஷோர்.

வீரண்ணாவாக வரும் சுலில் குமார், தனது கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார்.

கதாநாயகி யக்னா ஷெட்டி கதையின் நிறத்தோடு ஒட்டவில்லை என்றாலும், நடிப்பில் களத்தூர் கிராமத்து பெண்ணாகவே மாறிப்போய்விட்டார்.

கருவேல மரங்கள் சூழ்ந்த அந்த கிராமும் அது சார்ந்த மலைப்பகுதியும் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கைவண்ணத்தில் களத்தூர் கிராமத்துவாசியாகவே மாற்றி விடுகிறது.

திரைக்கதையுடன் பின்னிப்பிணைந்த இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பலம்.

படம் முழுவதும் இரண்டு காலகட்டத்திலேயே நகர்கிறது. அதனாலேயே குழப்பமும் ஏற்படுகிறது.

தெளிவான திரைக்கதையில் சொல்லப்பட்டிருந்தால் களத்தூர் கிராமம் காலத்தைக் கடந்த படைப்பாக பேசப்பட்டிருக்கும்.

ஆனாலும், களத்தூர் கிராமம் படத்தை ஒரு வாழ்வியல் பதிவாகக் கொடுத்தவகையில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவராகி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சரண் அத்வைதன்.