கனமழையிலும் களத்தில் நிற்கும் ‘களத்தூர் கிராமம்’…!

kalathurgramam-working-stills-12


சமீபத்தில் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த திரைப்படம் – ‘களத்தூர் கிராமம்’.

கிஷோர், யக்னா ஷெட்டி, ரஜினி மஹாதேவய்யா, சுலீல் குமார், மிதுன்குமார், அஜய்ரத்னம், தீரஜ் ரத்னம் நடித்த இந்தப்படத்தை புதுமுக இயக்குநர் சரண் கே.அத்வைதன் இயக்கியிருந்தார்.

நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்க​ளும், ஆர்வலர்களும்​ ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படமும் பல தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

‘களத்தூர் கிராமம்’ படத்தைப் பார்த்தவர்கள், வாழ்வியல் பதிவு என்றும் நல்ல படம் என்றும் பாராட்டி வருகின்றனர்.

“களத்தூர் கிராமம்​ படம் அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது” என்று இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.​

அதனால் தயாரிப்பாளர் சீனுராஜ் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்…

“‘களத்தூர் கிராமம்’ படத்தை பொ​ரு​த்தவரை எனக்கு மன நிறைவான படம்.
இரண்டுமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்த மன வருத்தத்தையும் நிறைய பொருட்செலவையும் ஏற்படுத்தியது.

முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல்போனதினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இளைஞன்.. சினிமாவுக்கு புதியவன்.. திரையரங்குகள் உறுதி செய்யும் போராட்டம் போன்றவை மன அழுத்தத்தின் உச்சத்தில் என்னை கொண்டுபோய் நிறுத்தியது.

இருந்தாலும் விடாப்படியாக, ஒரு நல்ல படத்தை மக்கள் மத்தியில் சரியாக கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அக்டோபர்-27ஆம் தேதி படம் 80 திரையரங்குகளில் வெளியானது. இன்று படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கு மன நிறைவை தந்துள்ளது.

தொடர் மழை மற்றும் இந்த வாரம் வெளியான புதுப்படங்களைத்தாண்டி ‘களத்தூர் கிராமம்’ தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது​.

இயக்குநர்​ ​வெற்றிமாறன் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்துவிட்டு களத்தூர் கிராமம்​ படம் அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது என்று பாராட்டியது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.!” ​என்று சொல்கிறார் தயாரிப்பாளர் ​சீனுராஜ்.