நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி…

junga-vijaysethupathi

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறது விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணி

நான்கு வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் (அக்டோபர் 2) கோகுல் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.

இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான காமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ ஆக பட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் விஜய்சேதுபதி.

இப்போது மீண்டும் இதே தேதியில் (அக்டோபர் 2) தங்களது அடுத்த படமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கூட்டணி.

இப்படத்திற்கான 30 நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2) பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது.

‘வனமகன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக அறிமுகமான சாயிஷா சாய்கல் ‘ஜுங்கா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் ‘ஜுங்கா’ படத்தில் நடிக்கிறார்கள்.

ஜாலி பாடல்களையும், மெலடி மெட்டுக்களையும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்காக உருவாக்கித் தந்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ளது ‘ஜுங்கா’ திரைப்படம்.

இப்படத்தை விஜய்சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால், படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்துவிட்டது. நடிகர் அருண் பாண்டியனின் ஏ அன்ட் பி குரூப்ஸ் இப்படத்தின் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.