இவன் தந்திரன் – விமர்சனம்

ivan-thanthiran-tamilscreen-stills-019


‘3ஆம் கிளாஸைத் தாண்டாத நீ 3000 கோடிக்கு மேல வச்சிருக்க, லட்சக்கணக்குல செலவு பண்ணி என்ஜினியரிங் படிச்ச நாங்க 10 ஆயிரம் சம்பாதிக்க சாவணுமா?’

– என்ஜினியரிங் படித்துவிட்டு சுயதொழில் செய்யும் சக்திவேல் (கௌதம் கார்த்திக்) மத்திய மந்திரி தேவராஜை (சூப்பர் சுப்பராயன்) பார்த்து சுட்டுவிரல் நீட்டி கேட்கும் இந்தக் கேள்வியில் கட்டி எழுப்பப்பட்டதுதான்-   ‘இவன் தந்திரன்’.

இந்தக் கேள்வியை நூல்பிடித்து அழுத்தமான கதையைக் கண்டெடுத்தது மட்டுமல்ல, அதை சுவாரஸ்யமான திரைக்கதையில், படு விறுவிறுப்பான படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர். கண்ணன்.

என்ஜினியரிங் முடித்துவிட்டு மொபைல், கம்ப்யூட்டர் விற்கும் கடையை நடத்துகிறார்கள் கௌதம் கார்த்திக்கும், அவரது நண்பன் ஆர்.ஜே. பாலாஜியும்.

மத்திய மனித வளத்துறை அமைச்சரான சூப்பர் சுப்பராயன் வீட்டுக்கு சிசிடிவி பொருத்திய பணத்தை தராமல் இழுத்தடித்ததோடு,  கௌதமை அவமானப்படுத்தியும் அனுப்புகின்றனர்.

அடிப்படைவசதி இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு உத்தரவிடும் மத்திய அமைச்சர் சூப்பர் சுப்பராயன், ஒவ்வொரு கல்லூரி நிர்வாகத்திடமும் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க உத்தரவிடுகிறார்.

லஞ்சமாக வாங்கிக்குவித்த பணம் அமைச்சர் வீட்டில் கோடிக்கணக்கில் இருப்பதை ரகசிய கேமிராவில் படம்பிடித்து யூடியூபில் அப்லோடு செய்கிறார்கௌதம் கார்த்திக்.

அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி, சூப்பர் சுப்பராயனின் மந்திரி பதவிக்கு வேட்டு வைக்கிறது.

பதவியை பறிகொடுத்த சூப்பர் சுப்பராயன் வேட்டைநாயின் வெறியோடு, வீடியோவை வெளியிட்ட தந்திரனைத் தேட ஆரம்பிக்கிறார்.

கம்ப்யூட்டர் மூளையைக் கொண்டு சூப்பர் சுப்பராயன் உடன் மோதும் கௌதம் கார்த்திக் எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் ‘இவன் தந்திரன்’ படத்தின் மீதிக்கதை.

கடல் படத்தில் கௌதம் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்னம் கூட அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இயக்குநர் கண்ணன் அதை சரியாக செய்திருக்கிறார். முதல்முறையாக கௌதம் கார்த்திக்கின் நடிப்பு ரசிக்கும்படி இருப்பதே இந்தப் படத்தின் பாதி வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

தமிழ்சினிமாவில் ஹீரோவின் நண்பன் கிச்சுகிச்சுமூட்டுகிறவனாக, கோமாளியாக இருப்பான்.

கௌதம் கார்த்திக்கின் நண்பன் ஆர்.ஜே. பாலாஜி என்பதாலோ என்னவோ வாய் வலிக்கும் அளவுக்கு அவரை பேசவிட்டிருக்கிறார்கள்.

அவரும் ஆர்ஜே நினைப்பிலேயே அடிக்கடி மூச்சுவிடாமல் பேசுகிறார்.

ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பது பற்றி அவர் அடிக்கும் லெக்சரில் தியேட்டரே அதிர்கிறது.

பிரதான கதை பலவீனப்பட்டுவிடும் ஆபத்தை உணர்ந்தோ என்னவோ கௌதம் கார்த்திக் – ஷ்ரத்தா காதலில் அழுத்தமில்லை.  ஷ்ரத்தாவின் நடிப்பிலும்தான்.

கல்வியில் எப்படி எல்லாம் அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்?

அதனால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றனர்?

கல்விக்காக லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

என கல்வி குறித்து பல விஷயங்களை சமூக அக்கறையோடு  பேசியுள்ளதோடு, அதை பொதுத் தளத்தில் விவாதமாக்குகிற வீர்யத்தையும் உள்ளடக்கி இருக்கிறது இவன் தந்திரன்.

அதே சமயம், டாக்குமெண்டரியைப் போல் சீரியஸாகப்போய்விடாமலும், கமர்ஷியல் என்ற பெயரில் இறங்கிப்போய்விடாமலும் இவன் தந்திரனை பொழுதுப்போக்குப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

கல்விக்கொள்ளை பற்றி இதற்கு முன் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இவன்  தந்திரன் முக்கியமான படம்.

இவன் தந்திரன் படத்தை என்ஜினியரிங் காலேஜ் மாணவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள்.

என்ஜினியரிங்  காலேஜ் மாணவர்களின் வலியை, வாழ்க்கையைப் பேசுகிற  இவன் தந்திரன் படத்தை ஒவ்வொரு என்ஜினியரிங் மாணவனும் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல, கொண்டாட வேண்டிய படமும்.