இருட்டு அறையில் முரட்டு குத்து… – ஆபாசத் தலைப்புடன் அடுத்தப் படம் ஆரம்பம்…!

iamk

நடிகர் சூர்யாவின் உறவினரும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் உரிமையாளருமான கே.ஈ.ஞானவேல்ராஜா, ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தொடங்கி ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை தயாரித்தார்.

இப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அடல்ட் காமெடி என்ற முன்னறிவிப்போடு, அறிமுக இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய ‘ஹர ஹர மஹாதேவகி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

அதே தினத்தில் வெளியான ஸ்பைடர், கருப்பன் படங்கள் ஓடிய தியேட்டர்களை காலியாக்கிவிட்டு வசூலில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

அடல்ட் காமெடி என்ற பெயரில் ஏறக்குறைய ஆபாசப்படமாகவே எடுக்கப்பட்டுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்துக்கு கிடைத்த வர்த்தக வெற்றி, அடுத்தடுத்தும் அடல்ட் கண்டன்ட் படங்களை தயாரிக்கும் தைரியத்தை கே.ஈ.ஞானவேல்ராஜாவுக்குக் கொடுத்திருக்கிறது.

இதே கூட்டணி இப்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் இணைகிறது.

தலைப்பிலேயே ஆபாச நெடியடிக்கும் இந்தப்படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றுள்ளது.

இப்படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

பாலமுரளி பாலா இசையமைக்கிறார்.

பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார்…

‘‘இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக்கும் விரைவில் வெளியாகும்’’ என்கிறார்.

கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு… ‘பார்த்து பல்லுப்படாம’