இலை – விமர்சனம்

ilai-movie-stills-2

பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதையும், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை எதிர்த்து போராடி பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல கருத்தையும் சொல்லும் படம்.

கருத்து சொல்லும் படங்கள் என்றாலே காத தூரம் ஓடுவார்கள் ரசிகர்கள்.

அந்த கருத்தையே கலைப்படம் போல் சொல்லி இருக்கிறார்கள் ‘இலை’ப்படத்தில்.

1990களில் தமிழக – கேரள எல்லையில் உள்ள திருநெல்லி என்ற கிராமத்தில் நடக்கும் கதை.

பெரிய படிப்பு படித்து சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் இலை (சுவாதி நாராயணன்).

இலையின் விருப்பத்துக்கு அவரது அப்பாவும் ஆதரவாக இருக்கிறார்.

இலை படிப்பதை விரும்பாத அவரது அம்மா, முரட்டுத்தனமான  தன்னுடைய  தம்பிக்கு அவளை திருமணம் செய்து வைக்க வேண்டும் விரும்புகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த பணக்கார பெண்ணான இன்னொரு மாணவி, இலையைவிட குறைவான மார்க் வாங்குகிறாள்.

தனது மகள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் இலையை பத்தாம் வகுப்பு கடைசி தேர்வுக்கு வரக்கூடாது என்பதற்காக பல சதி வேலைகள் செய்கிறார்.

இன்னொரு பக்கம், இலை பெரிய படிப்பு படித்துவிட்டால் தனக்கு கிடைக்க மாட்டாள் என்ற எண்ணத்தில் அவருடைய படிப்புக்கு தடை போடுகிறான் தாய் மாமான்.

இந்த தடைகளை எல்லாம் தாண்டி இலை எப்படி தேர்வு எழுதினார் என்பதுதான் இலை படத்தின் கதை.

இலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாதி நாராயணனின் நடிப்பு
படிப்புக்காக போராடும் மாணவியாக, மொத்தப் படத்தையும் தன் தலையில் சுமந்திருக்கிறார்.

அவரது படிப்புக்கு ஆதரவாக இருந்த அவரது அப்பா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அந்த சூழலிலும் எப்படியாவது கடைசி பரீட்சையை எழுதிவிட வேண்டும் என்று இலை எடுக்கும் முயற்சிகளும், அதற்கு ஏற்படும் தடங்கல்களும், அவற்றை எல்லாம் தாண்டி பள்ளிக்கூடத்தை நோக்கி விரையும் காட்சிகளில் அனுதாபத்தை அள்ளுகிறார்.

இலையின் முறைமாமனாக நடித்திருக்கும் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு.

இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

சந்தோஷ் அஞ்சலியின் ஒளிப்பதிவும், விஷ்ணு வி.திவாகரனின் இசையும் ‘இலை’யை பசுமையாக்கி இருக்கின்றன.

ஏராளமான விளம்பரப்படங்களை இயக்கிய பீனிஸ் ராஜ், இலையை தனித்துவமிக்க படமாக இயக்கி இருக்கிறார்.

திரையில் பார்த்த பல விஷயங்கள் உண்மையில்லை, கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ் என்பதை ரோலிங் டைட்டிலின்போது காட்டி மிரட்டி இருக்கிறார்.