30 கோடியும்…. முடிவில்லாமல் முடிந்த கூட்டமும்…..

tamilnadu-theaters-strike-withdrawn

தியேட்டர் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யையே ஏற்றுக்கொள்ள மறுக்கும் திரைப்படத்துறையினருக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது தமிழக அரசு.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30 சதவிகித கேளிக்கை வரியை வேறு பெயரில் மீண்டும் அமல்படுத்தியது.

இதைக் கண்டித்து கடந்த வாரம் தியேட்டர் அதிபர்கள் செய்த ஸ்டிரைக் நான்கே நாட்களில் வாபஸ்பெறப்பட்டது.

அதாவது, கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற திரையலகினர் கோரிக்கையும், தியேட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படாமலேயே தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கிடையில், தியேட்டர் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் தரப்பிலிருந்து 15 கோடி பேரம் பேசப்பட்டதாக படத்துறையில் பேசப்பட்டது.

இன்னொரு தரப்பினரோ 30 கோடி என்றும் தெரிவித்தனர்.

கடந்த 06.06.2017 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, திரைப்படத்துறையினர் தரப்பில் எட்டு பேர் அரசு தரப்பில் ஆறு அடங்கிய கமிட்டி அமைத்து கேளிக்கை வரி மற்றும் தியேட்டர் கட்டணத்தை உயர்த்துவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திரைப்படத்துறையினர் சார்பில் – தமிழ் திரைப்பட வர்த்தக சபையைச் சேர்ந்த அபிராமி ராமநாதன், தியேட்டர் அதிபர்கள் சார்பில் திருப்பூர் சுப்பிரமணியம், ‘ஐட்ரீம்ஸ்’ மூர்த்தி, விநியோகஸ்தர் அருள்பதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், கதிரேசன், எஸ்.ஆர். பிரபு மற்றும் ஃபெப்ஸி தலைவரான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த கமிட்டியின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று (13.07.2017) நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட திரைத்துறையினர்  அரசுத்துறையினரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். வழக்கம்போல் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.

இந்த கமிட்டி கூட்டத்தினால்   திரைப்படத்துறைக்கு நல்லது நடக்குமா?

“உண்மையில் இந்த கமிட்டி எல்லாம் வெறும் கண்துடைப்புதான். அமைச்சர்கள் தரப்பில் கேட்டதாக சொல்லப்படும் தொகையைக் கொடுத்தால் மட்டுமே திரையுலகினரின் கோரிக்கை ஏற்கப்படும். இவ்வளவு பெரிய தொகையை யார் திரட்டிக் கொடுப்பது? தியேட்டர்காரர்களா? விநியோகஸ்தர்களா? தயாரிப்பாளர்களா? நடிகர்களா? என்று தெரியாமல் திரையுலகினர் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டு குறிப்பிட்ட தொகையை தயார் செய்தால்தான் அடுத்தகட்ட நகர்வு இருக்கும். அதுவரை கண்துடைப்புக்காக கமிட்டி கூடுவது மட்டு நடக்கும்” என்கிறார் அனுபவம் வாய்ந்த மூத்த தயாரிப்பாளர்.

இது ஒரு பக்கம் இருக்க, கேளிக்கை வரி பிரச்சனை, டிக்கெட் விலையை உயர்த்துவது ஆகிய பிரச்சனைகளுடன், விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் கூடுதல் கட்டணம் வாங்கி சிறப்புக் காட்சிகள் திரையிடவும் அரசிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

மொத்தத்தில், மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கக் கூடாது என்பதில் சினிமாக்காரர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.