இயக்குநர் அமீருக்குக் கிடைத்த வெற்றி, நடிகர் அமீருக்கு கிடைக்கவில்லையே? – EXCLUSIVE INTERVIEW Comments Off on இயக்குநர் அமீருக்குக் கிடைத்த வெற்றி, நடிகர் அமீருக்கு கிடைக்கவில்லையே? – EXCLUSIVE INTERVIEW

எம்.ஜி.ஆர். பாண்டியன், வெற்றிமாறன் இயக்கிவரும் வட சென்னை ஆகிய படங்களில் நடித்து வரும் அமீர், ஆர்யாவை வைத்து ‘சந்தனத்தேவன்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இன்னொரு பக்கம், தன்னுடைய உதவியாளர் முத்து கோபால் இயக்கியுள்ள அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

சந்தனத்தேவன் படம் எந்தளவுக்கு உள்ளது?

”ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. சந்தனத்தேவன் பெரிய படம். ஆர்யா இதுவரைக்கும் நடிச்ச படங்களைவிட இரண்டு மடங்கு பட்ஜெட்டில் இந்தப் படத்தைப் பண்ணிக்கிட்டிருக்கேன். பாகுபலி படத்தில் வந்த கிராபிக்ஸ்வொர்க் மாதிரி இந்தப்படத்திலும் நிறைய வேலை இருக்கு. மூணு காலகட்டத்தில நடக்குற, மூணு தலைமுறைகளைப்பத்தின கதை. எனக்கு பொதுவாகவே, கிராபிக்ஸ், செட் இதிலெல்லாம் உடன்பாடில்லை. யதார்த்தமா அந்தந்த களத்திலேயே உருவாக்கணும்னு விரும்புகிற ஆள் நான். 1963ல் நடக்குற மாதிரி படத்தில ஒரு போர்ஷன் இருக்கு. அதைத்தான் இப்ப பண்ணிக்கிட்டிருக்கேன். அதை முடிச்சப்புறம் 1985ல் நடக்குற சீன்களை பண்ணிட்டு, அப்புறம் சமகாலத்தில நடக்குற போர்ஷனை பண்ணணும்.

amir-director

உண்மையைச் சொல்லணும்னா… நான் பண்ணின படங்கள்லேயே சவாலான படம் ‘சந்தனத்தேவன்’தான்.

சினிமா இப்ப உள்ள சூழலில் அமீர் – ஆர்யா காபினேஷன்ல இப்படி ஒரு பெரிய பட்ஜெட் படம் எடுக்கணுமான்னு கேள்வியெல்லாம் வரும். ஆனா நான் அதைப்பத்தி கவலைப் படலை. முதல்ல படத்தை எடுப்போம். மீதியெல்லாம் அப்புறம் பார்க்கலாம்னு துணிந்து இறங்கிட்டேன். எனக்கு ஆர்யாவை வச்சுத்தான் படம் எடுக்கணும்ங்கிறதுல தெளிவா இருந்தேன். அவரோட ஒத்துழைப்பு அப்படி இருக்கு. மிகுந்த ஈடுபாட்டோடு அர்ப்பணிப்போடு நடிக்கிறார். ஒரு டைரக்டருக்கு இப்படி ஒரு ஹீரோதான் வேணும்.”

சந்தனத்தேவன் எதைப்பற்றிய படம்? தமிழ் கலாச்சாரம், பண்பாடு சார்ந்த கதையா?

”ரெண்டுமே இல்லை. ஆனா தமிழ்மக்களின் வாழ்க்கையைச் சொல்ற படம்.”

நீங்க ஹீரோவா நடிக்கிற ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ படம் பற்றி….

”அந்தப் படத்தைப்பத்தி இப்ப நான் முழுமையாக சொல்லமுடியாது. அது ஒரு முழுமையான அரசியல்படம்.”

raam-ameer

இயக்குநர் அமீருக்குக் கிடைத்த வெற்றி, நடிகர் அமீருக்கு கிடைக்கவில்லையே ?

”அது கிடைக்கணும்னு நான் எதிர்பார்க்கலை. இங்கே நடிகருக்கான வெற்றிங்கிறது வியாபாரத்தில வர்ற வெற்றிதான். இன்னைக்கு யார் வேணும்னாலும் நடிகராகலாம். சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் வருஷத்துக்கு பத்து, இருபது படம் நடிச்சிக்கிட்டிருக்காங்க. அதை வெற்றின்னு சொல்ல முடியாது. வியாபரத்தில வெற்றி இருக்கணும்.”

நீங்கள் இயக்கிய ஆதிபகவன் 2013ல் வெளியானது. அடுத்தப் படம் கொடுக்க நாலு வருடமா?

”படம் பண்ணுவதுதான் என்னோட நோக்கமே தவிர பணம் பண்ணுவது நோக்கமல்ல. அது என்னோட இலக்கா இருந்தால், அந்த வித்தை எனக்கும் தெரியும். அப்படிப்பட்ட படங்கள் பண்ணியிருந்தால் என்னோட பேங்க் பேலன்ஸ் கூடியிருக்கும். பணத்துக்குப் பின்னால ஓடாம என் வாழ்க்கையை மனநிறைவோட வாழ நினைக்கிறேன். இயக்குநராக அல்ல, நல்ல மனிதனா வாழணும்.”

ameer_2

பருத்திவீரன் படத்தில் வியக்க வைத்த நீங்கள் ஆதிபகவன் படத்தில் அதிர்ச்சியளித்தீர்கள். அமீர் யார்?

”ரெண்டுமே அமீர்தான். நான் பார்த்து வளர்ந்த சினிமா வேற, எடுத்துக்கிட்டிருக்குற படம் வேற. அன்றைய காலக்கட்டத்தில கமர்ஷியல் படம் பண்ணணும்ங்கிற தேவை இருந்திச்சு. தயாரிப்பாளரின் வேண்டுகோளாவும் இருந்திச்சு. எனக்கும் அந்த ஆசை இருந்ததால ஆதிபகவன் படம் பண்ணினேன். ஆதிபகவன் படத்தில நான் கற்றுக்கொண்டேனே தவிர ஆதிபகவன் எடுத்ததே தவறுன்னு சொல்ல மாட்டேன். இன்னைக்கும் ஆதிபகவன்- 2 எப்ப எடுப்பீங்கன்னு ரசிகர்கள் கேட்கிறாங்க. ஆதிபகவன் 2 பண்ணலாமான்னு ஜெயம்ரவி கேட்டால் இறங்கிடுவேன். ஆதிபகவன் தப்பான படமோ, முகம் சுழிக்க வச்ச படமோ இல்லை. இவர்கிட்டேருந்து இப்படி ஒரு கமர்ஷியல் படம் தேவையில்லைன்னு மக்கள் நினைச்சாங்க. அதை நான் ஏத்துக்கிறேன்”

ameer_3

உங்களுடைய கேரியர்கிராஃப் எப்படி இருக்கிறது? ஏற்றத்தில் இருப்பதாக நினைக்கிறீங்களா…?

”ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லை. நான் மூணு படம் பண்ணினாலும் முப்பது படம் பண்ணின மாதிரி பேரும் புகழும் கிடைச்சது. பத்து வருஷம் கழிச்சு இப்பவும் பருத்திவீரன் படத்தைப் பத்தி மணிக்கணக்குல பேசுறாங்க. ஒரு படைப்பாளியா எனக்கே இது ஆச்சர்யமா இருக்கு. பருத்திவீரனுக்குப் பிறகு எத்தனையோ நல்ல படங்கள் வந்திருக்கு. ஆனாலும் பருத்தி வீரன் இன்னும் மக்கள் மனசுல அழியாம இருக்கு. இது பெருமையான விஷயம். நான் ஒவ்வொரு நாளும் என்னோட வாழ்க்கைத் தரத்தில் ஒரு படி ஏறிக்கிட்டுதான் இருக்கேன்.”

ameer_1

சிவப்புமல்லி பாலைவன ரோஜாக்கள் மாதிரியான அரசியல் படத்தின் தேவை இன்றைக்கு இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

”எம்.ஜி.ஆர். பாண்டியன் அப்படிப்பட்ட ஒரு படம்தான். அது அமைதிப்படையின் இன்னொரு வெர்ஷன். சிவப்புமல்லி சொன்னதைவிட பாலைவன ரோஜாக்கள் சொன்னதைவிட ஒருபடி மேலேபோய் அரசியல் பேசுகிற படம்தான் சந்தனதேவன். கருத்தியலா பார்த்தால் மிகப்பெரிய சமூக மாற்றத்துக்கான படமாகவும் சந்தனத்தேவன் இருக்கும். காலத்தைக் கடந்து சிவப்புமல்லியைக் குறிப்பிடுகிற மாதிரி சந்தனத்தேவன் படத்தையும் எதிர்காலம் குறிப்பிடக்கூடும்.”

– ஜெ.பிஸ்மி

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
ரஜினிக்கு அரசியல் கற்றுக் கொடுத்தது பா.ரஞ்சித்தா? – என்ன கொடுமை இது?

Close