சென்ஸாரில் உள்ளவர்களை கவனித்தால் புளூ பிலிமுக்கும் யு சர்ட்டிபிகேட் தருவார்கள்

1787

சென்ஸாரில் உள்ளவர்களை கவனித்தால் புளூ பிலிமுக்கும் யு சர்ட்டிபிகேட் தருவார்கள்

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 16

 

அவன் நடித்த படங்கள் ஒரு வாரம் ஓடினாலே ஆச்சர்யம்.

அதனால் கவர்ச்சியான, கிளுகிளுப்பான காட்சிகளை வைத்து படம் எடுத்தார் அவர்.

மகனுக்காக படம் பார்க்க யாரும் வராவிட்டாலும் இதைப் பார்க்கவாவது வருவார்கள். அதனால் படம் ஓடும்.

தன் மகன் நடித்த படம் ஹிட் என்று சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் அவர்.

அதனால் படத்தின் கதாநாயகிகளை படு செக்ஸியாக நடிக்க வைத்தே தன் மகனின் படத்தை ஓட்டினார்.

அந்தப் படத்தில் குறிப்பிட்ட அந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டபோது நான் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும்.

லைட் கலர் பாவாடையை மட்டும் கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்கச் சொன்னார்கள். நானும் பாவாடையை நெஞ்சுவரை கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்கத் தயாரானேன்.

”என்னம்மா நிலா ரெடியா?” என்று அருகில் வந்த டைரக்டர் என்னை உற்றுப் பார்த்தார். ஏனோ அவரது முகம் மாறியது. விடுவிடுவென வந்த வேகத்தில் திரும்பிப் போனார்.

போன வேகத்தில் அஸிஸ்டென்ட் டைரக்டரை கெட்ட வார்த்தைகளால் திட்டவது என் காதில் விழுந்தது.

”நான் சொன்னதை அந்தப் பொண்ணுக்கிட்ட சொன்னியா இல்லையா?

நீ எல்லாம் எதுக்குய்யா சினிமாவுக்கு வந்தே?

போய் எங்கேயாவது மாடு மேய்க்க வேண்டியதுதானே?”

அவமானத்தில் கூனிக்குறுகிப் போன அந்த அஸிஸ்டென்ட் டைரக்டர் என்னை நோக்கி ஓடி வந்தான்.

”மேடம்…” என்று தயக்கமாய் இழுத்தான்.

”என்ன ஸார்?”

”உங்களால டைரக்டர்கிட்ட நான் திட்டு வாங்க வேண்டியிருக்கு…”

”என்னாலயா? என்ன விஷயம்?”

”உங்களை பாவாடை மட்டும்தானே கட்டிக்கிட்டு வரச் சொன்னேன்?”

”ஆமா. நீங்க சொன்ன மாதிரி பாவாடை மட்டும்தானே கட்டியிருக்கேன்… என்று சொன்னதும்தான் அவன் என்ன சொல்ல வருகிறான் என்றே புரிந்தது. உள்ளே பிரா போட்டிருக்கிறேன். அதை கழற்றச் சொல்கிறான்.”

”பிரேஸியர் போடாம வெறும் பாவாடை மட்டும் கட்டச் சொல்றீங்களா?”

”ஆமா மேடம்.”

”என்ன ஸார் விளையாடுறீங்களா? லைட் கலர் பாவாடையை கட்டுக்கிட்டு பிரேஸியர் இல்லாம தண்ணில நனைஞ்சா ட்ரான்ஸ்பரன்ட்டா இருக்காதா, உடம்பெல்லாம் பளிச்சுன்னு அப்படியே தெரியும். நான் மாட்டேன்.”

நான் மறுத்ததை தூரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த டைரக்டர் டென்ஷனாகிவிட்டார்.

ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு கத்தித் தீர்த்தார்.

வேறு வழியில்லாமல் பிராவைக் கழற்றிவிட்டு, பாவாடையை மட்டும் கட்டிக் கொண்டு நடித்தேன்.

யூனிட்டில் உள்ளவர்களும் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் நனைந்த பாவாடையில் ஒட்டிக் கொண்டிருந்த என் மார்புக்காம்புகளை பார்வையால் கடித்துச் சுவைப்பதை என்னால் உணர முடிந்தது.

உடம்பில் துணியில்லாமல் நிர்வாணமாக இருப்பது போல் உணர்ந்தேன்.

என்ன செய்ய?

என்னால் என்ன செய்ய முடியும்? நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்? நடிகையும் ஒருவகையில் இவர்களுக்கு நாய்தான். கடிக்காத நாய்.

அவ்வளவு வேதனையிலும் சின்ன நம்பிக்கை எனக்கு.

என்னை அரை நிர்வாணமாக்கி எடுத்த அந்தப் பாடல் காட்சியை சென்ஸாரில் வெட்டி விடுவார்கள் என்று நம்பினேன். என் துரதிர்ஷ்டம்.

சின்ன வெட்டுகூட இல்லாமல் அந்தப் பாடல் காட்சி படத்தில் இடம் பெற்றுவிட்டது.

சென்ஸாரில் இதை எப்படி அனுமதித்தார்கள் என்று ஆச்சர்யம்.

அந்தப் படத்தின் மனேஜர்தான் விஷயத்தைச் சொன்னார். சென்ஸாரில் உள்ளவர்களுக்கு வெயிட்டாக கவனித்திருக்கிறார் டைரக்டர்.

கண்ணை மூடிக்கொண்டு அனுமதி கொடுத்துவிட்டார்கள்.

சென்ஸாரில் உள்ளவர்களை கவனித்தால் புளூ பிலிமுக்கும் யு சர்ட்டிபிகேட் தருவார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அது உண்மைதான் போலிருக்கிறது.

இப்போது என் வாழ்க்கையில் புயல்…

இதையெல்லாம் அவனிடம் சொல்லி, உண்மையைப் புரிய வைக்க நினைத்தேன்… அவன் என் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

”இதப்பாரு… உன் எக்ஸ்பிளனேஷன் எதுவும் எனக்குத் தேவையில்லை. உன்னை மாதிரி ஒரு பச்சை தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்க நான் தயாரா இல்லை. அவன் என்னோட எதிரி. அவன் எச்சி பண்ணின உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நாளைக்கு அவன் என்னைப் பார்த்து கை கொட்டிச் சிரிப்பான். அதைவிடக் கேவலம் எதுவுமில்லை. என்னை விட்டுடு… குட்பை.”

படபடவெனப் பொரிந்து தள்ளிவிட்டு டொக்கென்று போனை வைத்தான்.

காலடியில் தரை பிளந்து அதள பாதாளத்தில் தலைக்குப்புற விழுவது போல் இருந்தது எனக்கு.

இந்த சாக்கடை வாழ்க்கையில் இருந்து விடுபட்டு குடும்பப் பெண்ணாய் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நான் கட்டிய கற்பனைக் கோட்டை சுக்கல்சுக்கலாய் இடிந்து என் தலையில் விழுந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன்.

எப்படி சாவது?

தூக்கமாத்திரை, தூக்கு, மாடியிலிருந்து கீழே குதிப்பது. ரயில்முன் பாய்ந்து விடுவது…

எந்த வழியை தேர்ந்தெடுப்பது? என்று தெரியாமல் குழம்பினேன்.

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்