எங்க அம்மா ராணி – விமர்சனம்

engamma-rani-movie-stills-008

தாய்ப்பாசத்தையும், தாயின் தியாகத்தையும் வைத்து தமிழில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் ‘எங்க அம்மா ராணி’ உச்சம்.

அறிவுக்குப் புறம்பாக இருந்தாலும், தான் கையில் எடுத்த பாசக்கதையை உணர்ச்சிபூர்வமான காட்சிகளின் மூலம்  உருக வைத்திருக்கிறார் இயக்குநர் பாணி.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தன்ஷிகா, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டிலானவர்.

வேலை விஷயமாக கம்போடியோவிற்குப்போன தன்ஷிகாவின் கணவர் காணாமல் போய்விட, இரட்டை குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார் தன்ஷிகா.

அவருடைய இரட்டை மகள்களில் ஒரு மகளான தாரா விசித்திரமான நோயால் திடீரென இறந்து போக இடிந்து போகிறார்.

மேலும் துயரமாக, அதே நோய்  மற்றொரு மகளான மீராவுக்கும் இருக்குமோ என டாக்டர் சந்தேகம் எழுப்புகிறார்.

பரிசோதனையில் மீராவுக்கும் அந்த நோய் இருப்பது தெரிய வர, அவரை அழைத்துக் கொண்டு குளிர் பிரதேசத்திற்கு செல்லும்படி சொல்கிறார் டாக்டர்.

அதன்படி மீரா உடன் மலேசியாவில் இருக்கும் கேமரன் மலைக்குச் செல்கிறார் தன்ஷிகா.

கேமரன் சென்றதும், மீராவின் நடவடிக்கையில் அமானுஷ்யமான மாற்றம்.

அவளுக்குள் ஒரு சிறுமியின் ஆவி புகுந்திருப்பது தெரிய வருகிறது.

ஆவி புகுந்த பிறகு மீராவுக்கு இருந்த நோய் இல்லாமல் போகிறது.

மீராவின் உடம்பில் சிறுமியின் ஆவி இருக்கும் வரை அவளது உயிருக்கு ஆபத்து இல்லை. உடம்பிலிருந்து ஆவி வெளியேறிவிட்டால் மீராவின் நோயால் அவளது உயிருக்கு ஆபத்து.

இந்த இக்கட்டான சூழலில், எப்படியாவது தன் மகள் மீரா உயிரோடு இருந்தால்போதும் என்ற எண்ணத்தில் அவள் உடம்பில் சிறுமியின் ஆவியே இருக்கட்டும் என்ற மனநிலைக்கு வருகிறார் தன்ஷிகா.

அப்போது எதிர்பாரதவிதமாக நடந்த ஒரு சம்பவத்தினால், மீராவின் உடம்பிலிருந்து சிறுமியின் ஆவி வெளியேறிவிடுகிறது.

சிறுமியின் ஆவி வெளியேறிவிட்டதால் மீராவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்நிலையில், யாரும் யூகிக்க முடியாத விபரீதமான முடிவை எடுக்கிறார் தன்ஷிகா.

அது என்ன முடிவு என்பதுதான் எங்க அம்மா ராணி படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்.

இரட்டை குழந்தைகளின் அம்மாவாக படம் முழுக்க தன்ஷிகாதான். எல்லா காட்சிகளிலும் முகம் முழுக்க மேக்கப்புடன் காட்சியளிப்பது சூழலுக்குப் பொருந்தவில்லை. என்றாலும், தனக்குக் கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவு மேக்கப்பிலும் முகபாவனைகளில் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார்.

தன்ஷிகாவின் இரட்டை மகள்களாக வர்ணிகா, வர்ஷா. இருவரில் யார் வர்ணிகா, யார் வர்ஷா என்ற தெரியாதஅளவுக்கு தோற்றத்தில் ஆறு வித்தியாசம் கூட இல்லை. இருவருமே இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

டாக்டராக சங்கர் ஸ்ரீ ஹரி, இந்தியன் மாமாவாக நமோ நாராயணன் என படத்தில் சொற்பமான கதாபாத்திரங்கள்தான். அதனாலோ என்னவோ, எல்லா கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கின்றன.

காலத்துக் பொருந்தாத இசையாக இருந்தாலும், ஆங்காங்கே இளையராஜாவின் முத்திரை. மகளே பாடல் உருக வைக்கிறது.

முழுக்க முழுக்க மலேஷியாவில் படமாக்கப்பட்டிருப்பதால் மலேஷியாவுக்குப் போய்வந்த பிரமையை ஏற்படுத்துகிறது.