ஜெ.பிஸ்மி எழுதும் புதிய தொடர் – ‘என் கதை’ அத்தியாயம் – 1

9012

சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்த மாணவிகள்…!

– இப்படியான செய்திகள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் வராத நாட்களே இல்லை.

புகழ் வெளிச்சத்தைத் தேடி வரும் இந்த விட்டில் பூச்சிகள், கோடம்பாக்கம் எனும் கனவுத் தொழிற்சாலையின் கதவுகள் தங்களுக்காக விரியத் திறந்திருப்பதாக நினைத்துக் கொண்டு அப்பா – அம்மாவை, அண்ணன் – தம்பிகளை அக்கா – தங்கைகளை சொந்த – பந்தங்களைத் துறந்து சென்னைக்கு ஓடோடி வருகிறார்கள்.

கோடம்பாக்கத்தில் காலடி வைத்ததும் மணிரத்னமும், ஷங்கரும், பாலாவும், அமீரும் தங்களை கதாநாயகியாக்கக் காத்திருப்பார்கள் என்று படத்துறையை நோக்கிப் பறந்தோடி வருகிறார்கள்.

விஜய்யோடும், அஜீத்தோடும், சூர்யாவோடும், சிம்புவோடும், சிவகார்த்திகேயனோடும் கைகோர்த்து டூயட் ஆடலாம் என்ற அர்த்தமற்ற ஆசையில் சினிமா என்கிற கனவுத் தொழிற்சாலைக்குள் வந்து கசங்கிப் போகிறார்கள்.

இப்படி ஓடிவரும் பெண்கள் என்றைக்கும் கதாநாயகியானதில்லை. மாறாக, ஏமாற்றுக்காரர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். கடைசியில், இவர்களின் புகலிடம் விபச்சாரவிடுதிகளாகிவிடுகின்றன என்பதே இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம்.

இன்றைக்கு சென்னையில் விலைமாதர்களாக இருக்கும் பல பெண்கள் சினிமா ஆசையில் வீட்டைவிட்டு ஓடிவந்து வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருப்பவர்களாகவே இருப்பார்கள்.

இவர்களுக்கு ஒரு உண்மை தெரியாது. தெரிந்திருந்தால் இப்படி வீட்டை விட்டு வந்து இருட்டறை இன்னல் வாழ்க்கையில் சிறைப்பட்டிருக்க மாட்டார்கள்.

இன்றைக்கு நம்பர் ஒன் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருக்கும் நடிகைகள் ஒரே நாளில் உயரத்தைத் தொட்டவர்கள் அல்ல….!

இந்த நட்சத்திர அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும், பேர், புகழ், பணம் போன்ற பகட்டு வாழ்க்கையை அடைய அவர்கள் பட்ட கஷ்டங்கள், காயங்கள், துயரங்கள், துக்கங்கள், வேதனைகள், விம்மல்கள் கொஞ்ச…நஞ்சமல்ல… என்பதுதானே உண்மை?

இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

தெரிய நியாயமில்லை…! காரணம் தூரப்பார்வைக்கு சினிமா என்பது கவர்ச்சியான, பளபளப்பான ஜிகினா உலகம்.
கார், பங்களா, லட்சக்கணக்கில் பாங்க் பேலன்ஸ், கூப்பிட்ட குரலுக்கு கை கட்டி நிற்க வேலை ஆட்கள் என சினிமா நடிகைகளின் வாழ்க்கை சொகுசானது என்பதே அவர்களின் எண்ணம்.

அதை நாமும் அடைய வேண்டும் என்பதே எல்லோருக்கும் உள்ள ஏக்கம்.

நிஜத்தில் நடிகைகளின் வாழ்க்கை சொகுசானதா?

”இல்லை” என்பதே என் அனுபவத்தில் நான் பார்த்த உண்மை.

ஆமாம், நான் யார்? 25 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படப் பத்திரிகையாளன். இந்த காலக்கட்டத்தில் நான் பார்த்த, சந்தித்த, பழகிய நடிகைகள் நிறைய, திரையில் நீங்கள் பார்த்து வியக்கும், விசிலடிக்கும், கனவுக்கன்னியாக ஆராதிக்கும், உங்களால் கோயில்கட்டி கடவுளாக நீங்கள் வழிபட்ட பல நடிகைகள் என் நெருக்கத்திற்குரிய சினேகிதிகள்.

பத்திரிகையாளன் – நடிகை என்ற உறவை மீறி ஆதமார்த்தமாக என்னிடம் பழகிய, பழகிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலர். எனக்கு அவர்களின் அந்தரங்கமும் தெரியும். அவர்களின் அழுகையும் தெரியும். அரிதாரம் கலைத்த அவர்களின் நிஜமுகத்தை, இன்னொரு பக்கத்தை தினமும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

இங்கே நடிகைகளாக பவனி வரும் பலர் இஷ்டப்பட்டு நடிக்க வந்தவர்கள் அல்ல. பெற்றோரின் பணத்தாசைக்கு தன் வாழ்க்கையைப் பணயம் வைத்தவர்களும் இருக்கிறார்கள்.

வறுமையை விரட்ட வேறு வழி தெரியாமல் இங்கே வந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் இருக்கிறார்கள்.

பணம், புகழ் என்ற மாயமானைத் தேடி வந்து மானத்தை இழந்தவர்களும் இருக்கிறார்கள்.

இந்தக் கனவு தேசத்துக்கு வந்து உடலாலும், மனத்தாலும் காயப்பட்டு, கறைப்பட்டு மனசுக்குள் ரத்தம் வடிய, தினம் தினம் தனிமையில் – கண்ணீரில் கரைந்து கொண்டிருப்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த நரகத்திலிருந்து என்றைக்கும் நமக்கு விமோசனம் என்று கலக்கத்தோடு காலண்டரைப் பார்த்தவாறு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பவர்களையும் கண் கூடாகக் கண்டிருக்கிறேன்.

ஆறு மாதத்துக்கொரு அபார்ஷன் என்ற தாய்மைத் தகுதியை தவறவிட்டுத் தவிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

அது சரி… சினிமா நடிகைகளின் வாழ்க்கை இத்தனை நரகமா என்ன?

ஆமாம், சந்தேகமில்லாமல் நரகம்தான். வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக, சந்தோஷமாக வலம் வரும் சினிமா நடிகைகளின் இன்னொரு பக்கம் அவலமானது. துயரங்களின் தொகுப்பு அது.

எந்த நடிகையும் மனசு அறிய இதை மறுக்கமாட்டார். மறுக்கவும் முடியாது.

என்னிடம் நெருக்கமாய் பழகும் எந்த நடிகையும் இந்த உண்மையை மறுத்ததில்லை. மறைத்ததில்லை. மாறாக தங்களின் மனசுக்குள் பூட்டி வைத்து ரகசியமாக குமுறிக் கொண்டிருக்கும் அந்த நரக வாழ்க்கையின் வேதனை வினாடிகளை என்னிடம் கொட்டி ஆறுதல் தேடிக் கொண்டவர்கள்தான் அதிகம்.

பல நடிகைகளின் வாழ்க்கையை நெருக்கமாக பார்த்தவன் என்ற முறையில். இவர்களின் – இந்த ஒப்பனை முகங்களின் துக்கமான வாழ்க்கையை, இந்த செல்லுலாய்டு நரகத்தில் நசுக்கப்பட்டு வரும் பெண்மையை, பாலியல் வக்ரத்தை வெளி உலகுக்கு சொல்ல வேண்டும்.

திரையுலகில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் இந்த தேவதைகளின் கண்ணீரைப் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு எந்த நடிகை உடன்படுவார்?

சில வருடங்களுக்கு முன்….

ஒரு பத்திரிகை பேட்டிக்காக அந்த நடிகையை சந்தித்தேன்.

சம்பிரதாயமான கேள்விகள், சலித்துப் போன பதில்கள் என்று வழக்கமான அனுபவம். பிறகு நட்பாய் உரையாடல் தொடர்ந்தபோது சிரித்துக்கொண்டே சொன்னாள்…

”நீங்களும் பேட்டிங்கிற பேருல என்னென்னவோ கேள்வி கேட்கிறீங்க, நானும் ஒவ்வொரு தடவையும் பொய்யா பதில் சொல்லிக்கிட்டிருக்கேன்.”

பேட்டி என்ற பெயரில் நடிகைகள் பேசுவதில் பாதிக்கு மேல் பொய் என்பதும், போலித்தனமாக பேசுகிறார்கள் என்பதையும் உணர்ந்திருந்தாலும், அவள்..அந்த நடிகை இப்படி வெளிப்படையாய் போட்டு உடைத்தது உண்மையில் அதிர்ச்சியாகவே இருந்தது.

ஏன் இப்படி சொன்னாள்?

அந்த நடிகையை ஏறிட்டுப் பார்த்தேன்.

சற்றுமுன் பார்த்த…சகஜமாய் பேசிய முகமில்லை.

சோகத்தில் களையிழந்து காணப்பட்டது அவளது முகம்.

”என்ன சொல்றே?”

”என் கதையை உள்ளது உள்ளபடி சொன்னா எழுதுவீங்களா?”

கேட்டாள்.

பதில் சொல்வதற்குள் மறுகணமே, ”வேண்டாம்பா, அப்புறம் நான் இந்த ஃபீல்டிலேயே இருக்க முடியாது” என்று பயந்து பின்வாங்கினாள்.

”உன் பெயரைப்போட்டு எழுதினால்தானே உனக்கு பிரச்சனை? உன் கதையைச் சொல்லு..உனக்கு பிரச்சனை வராம நான் பாத்துக்குறேன்.”

நீண்ட தயக்கத்துக்குப் பின் உடன்பட்டாள் என் சினேகிதியான அந்த நடிகை.

ஆமாம். யார் அந்த நடிகை?

அது வேண்டாமே…அவளை உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

பல பத்திரிகைகளின் அட்டைகளை அதிகமாக அலங்கரிப்பவள் அவள்தான்.

டி.வி.யை திறந்தால் ஏதாவது ஒரு சேனலில் அவள் ஆடிக் கொண்டிருப்பாள்.

முன்னணி நடிகைகளில் அவளும் ஒருத்தி.

எனவே அவளுக்கு நாம் வேறு பெயர் வைத்துக் கொள்வோம் – இங்கே.

அவளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

நிலா..!

நல்லபெயர்தான்..! (எஸ்.ஜே.சூர்யாவின் படத்தில் நடித்த நிலா என்று நினைத்துவிட வேண்டாம்…இது கற்பனைப் பெயர்)
அவளைப் போலவே அழகான பெயர்தான்.

”நிலா, உன் கதையை சொல்றியா?”

சொல்ல ஆரம்பித்தாள் நிலா…

 

(சொல்றேன்)

அடுத்த அத்தியாயத்தை படிக்க க்ளிக் பண்ணவும்