இயக்குநர் அமீரின் பதிவு… – இதுதான் அரசியல் நாகரிகம்…

amir

நடிகர் விஷால் அரசியல்களத்துக்கு வருவதை திரையுலகைச் சேர்ந்த பலர் ஆதரிக்கவில்லை.

பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறார்….

யாரிடமோ பணம் வாங்கிவிட்டார்….

அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருக்கத்தான் அரசியல் களம் காண்கிறார்….

– என்றெல்லாம் திரையுலகில் திரும்பிய திசை எல்லாம் பேசுகிறார்கள்.

இயக்குநர் அமீர் ஒருவர்தான், விஷாலின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிடும் அளவுக்கு தீவிரம் காட்டினார்.

ஏதோ காரணங்களால் தேர்தலில் போட்டியிடும் முடிவை பிறகு கைவிட்டார் அமீர்.

இந்நிலையில், நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் அமீர்.

“நண்பர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட செயல் தமிழக அரசியலில் மிகச் சிறந்த ஜனநாயகப் படுகொலையாகும். தேர்தல் ஆணையம் என்பது மத்திய மாநில ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகள் என்கிற உண்மை இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

நண்பர் விஷால் திடீரென சுயேட்சை வேட்பாளராக அறிமுகமானது முதல் மறைந்த எம்ஜிஆர் மற்றும் அம்மையார் சமாதியில் அரசியல் பிரவேசம் தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து அவர் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இதுபோன்ற ஒரு ஜனநாயகப் படுகொலையை நாம் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. அது யாருக்கு நிகழ்ந்தாலும் தவறு தவறுதான்.

நண்பர் விஷாலின் வேட்பு மனுவை முதலில் நிராகரித்து பின் ஏற்றுக்கொண்டு மறுபடியும் அவர் இல்லாத போது அவரது வேட்பு மனுவை நிராகரித்திருப்பது அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அத்தனை மனிதருக்கும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

“சர்வாதிகாரம் ஒழிந்து ஜனநாயகம் தழைத்தோங்க போராடுவோம்.”

கொள்கை ரீதியில் வேறுபட்டாலும் நியாயத்துக்காக குரல் எழுப்ப வேண்டும் என்ற அரசியல் நாகரிகத்தை கடைபிடித்துள்ள இயக்குநர் அமீர் பாராட்டப்பட வேண்டியவர்.